12 அடி உயரம் தாண்டி தரை இறங்கும் தருணம்!
'போல் வாட்' எனப்படும் போட்டியில் அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மயிலாடுதுறையை அடுத்த குத்தாலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பரணிகா இளங்கோவன்.
சுமார் 12 அடி உயரத்தில் இருக்கும் குறுக்குக் கம்பியை உரசாமல் கோல் ஊன்றித் தாண்டி கீழே தரை இறங்கும் 'போல் வாட்' எனப்படும் போட்டியில் அரிய சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் மயிலாடுதுறையை அடுத்த குத்தாலத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த பரணிகா இளங்கோவன்.
ஆசிய போல் வால்ட் போட்டியில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளிலும் பதக்கம் வென்ற 'முதல் இந்தியர்' என்ற பெருமையை பரணிகா பெற்றுள்ளார். இவர் 4.15 மீட்டர் உயரத்தைக் கடந்து, கஜகஸ்தானின் போலினா இவனோவாவுடன் இணைந்து மூன்றாம் இடத்தைப் பிடித்தார். இரு வீராங்கனைகளும் 4.15 மீட்டர் உயரத்தைச் சரியாகத் தாண்டியதால், சம புள்ளிகளை பெற்றனர். இதனால் வெண்கலப் பதக்கம் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது.
பள்ளிப் பருவத்தில் இவரது தனித்திறன்களை அறிந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், மும்முறைத் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் பங்கு பெற ஊக்குவித்தனர்.
விளையாட்டுத் தகுதியின் அடிப்படையில் இவர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது இவர் 'போல் வால்ட்' பயிற்சியாளர் மில்பர் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்லை சந்தித்தார். சுமார் 42 கிலோ மட்டுமே உடல் எடை இருந்த பரணிகாவுக்கு போல் வால்ட் அச்சமூட்டுவதாக இருந்தது. 'சுமார் பன்னிரண்டு அடி உயரத்தில் அந்தரத்தில் பறந்து செல்ல முடியமா? அதற்கான சக்தி தன்னிடம் இருக்கிறதா?' என்ற சந்தேகம் இருந்தது. வேகம், வலிமை, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அந்தரத்தில் உயரே எழும்பும் வீரர்களைப் பார்த்து போல் வால்ட் பயிற்சி பெறச் சம்மதித்தார். ஆனால், நிதி நெருக்கடியால் பயிற்சியும் சத்தான உணவும் பரணிகாவுக்குத் தடைகளாக அமைந்தன.
அகில இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் 3.80 மீட்டர் உயரத்தைத் தாண்டி 2018-ஆம் ஆண்டில் பரணிகா புதிய சாதனை படைத்தார். 2019-இல், தெற்கு ரயில்வேயில் வேலைக்கான தேர்வுப் போட்டியில் பங்கேற்றபோது, அவருடைய இடக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு மெதுவாக ஓடத் தொடங்கி, சுமார் ஓர் ஆண்டுக்குப் பின்னர் பரணிகா மீண்டும் கம்பம் தாண்டும் பயிற்சியைத் தொடங்கினார்.
இதன்பின்னர் தான் நிகழ்த்திய சாதனைகள் குறித்து பரணிகா இளங்கோவன் கூறியது:
'2022-ஆம் ஆண்டு மே மாதத்தில் புவனேசுவரத்தில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டியின்போது, ஒடிஸ்ஸா ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் தடகள உயர் செயல்திறன் மையத்தின் தலைமைப் பயிற்சியாளரான மார்ட்டின் ஓவன்ஸ், எனது ஆர்வத்தைக் கண்டார். அவரது கோரிக்கையின்பேரில் டிசம்பர் 2022-இல் ரிலையன்ஸ் மையத்தில் இணைந்தேன்.
2023-இல் இந்திய கிராண்ட் பிரிக்ஸ் 4 போட்டியில், 4.10 மீட்டர் உயரத்தைத் தாண்டி, சர்வதேசப் போட்டிகளுக்கான தகுதித் தரநிலையை எட்டினேன். இந்நிலையில், இடது காலில் மீண்டும் வலி தொடங்கவே, உடலைப் பராமரிக்கும் செயல்முறை 2025-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தது. 2025 ஜனவரியில் கார்த்திக்குடன் திருமணம் நடைபெற்றது.
எனது வழிகாட்டிகள், 2026-ஆம் ஆண்டில் அதிக உயரத்தை எட்ட முயற்சிப்பதற்குப் பதிலாக, ஓடிவரும் பாதை, வேகம், தொழில்நுட்ப ரீதியான சீரான அசைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தி என்னைத் திருத்தினார்கள். மார்ச் 15-இல் பெங்களூரில் நடைபெற்ற 'இந்தியன் ஓபன் ஜம்ப்ஸ்' போட்டியில், 4.10 மீட்டர் உயரத்தைத் தாண்டித் தங்கம் வென்றதுடன், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான இந்திய தடகள சம்மேளனத்தின் தகுதிப் போட்டியிலும் தேர்வு பெற்றேன்.
புவனேசுவரத்தில் நடைபெற்ற முதல் 'தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்' போட்டியில் 4.22 மீட்டர் உயரத்தைத் தாண்டியதன் மூலம், 2022-இல் தமிழக வீராங்கனை ரோஸி மீனா பால்ராஜ் படைத்திருந்த 4.21 மீட்டர் என்ற தேசிய சாதனையை முறியடித்தேன்.
2026-ஆம் ஆண்டு மே 3-இல் எனது சாதனையை நானே உடைத்தேன். புவனேசுவரத்தில் கலிங்கா மைதானத்தில் முதல் 'இந்தியன் இன்டோர் ஓபன் கம்பைன்ட் ஈவென்ட்ஸ் அண்ட் போல் வால்ட்' போட்டியில், 4.23 மீட்டர் உயரத்தைத் தாண்டி, மீண்டும் ஒரு புதிய இந்திய சாதனையைப் படைத்தேன். ஆசிய விளையாட்டிலும் இந்தியாவுக்காக வெண்கலம் பதக்கம் பெற முடிந்தது நான் செய்த பாக்கியம்' என்கிறார் பரணிகா இளங்கோவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

