ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 67: இலக்கியம் தெரிந்த இயக்குநர்!

இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் முதன் முதல் இயக்கிய படம் எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி' என்பதும் இவர் பழம்பெரும் இயக்குநர் ப. நீலகண்டனிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதும் திரையுலகம்
ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 67: இலக்கியம் தெரிந்த இயக்குநர்!


இயக்குநர் ஏ.ஜெகந்நாதன் முதன் முதல் இயக்கிய படம் எம்.ஜி.ஆர். நடித்த "இதயக்கனி' என்பதும் இவர் பழம்பெரும் இயக்குநர் ப. நீலகண்டனிடம் பல படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பதும் திரையுலகம் அறிந்த செய்தி.

தமிழ்த் தாத்தா என்று தமிழுலகம் போற்றுகின்ற உ.வே. சாமிநாத ஐயர் மீது மிகவும் பற்றுக் கொண்டவர். பற்றுக் கொண்டவர் என்பதைவிட பக்தி கொண்டவர் என்று சொல்லலாம். "இவர் இல்லையென்றால் நமக்கு ஐம்பெரும் காப்பியங்களும் சங்க இலக்கியங்களும் எப்படிக் கிடைத்திருக்கும்' என்பார்.
உ.வே.சா. பிறந்தநாள் அன்று எங்கிருந்தாலும் வந்து சென்னையிலுள்ள அவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் செல்வார். அவர் இருக்கின்ற காலம் வரை இது தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. தமிழ் இலக்கியத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர்.

இவர் இயக்கிய பல படங்களில் நான் பாடல் எழுதியிருக்கிறேன். அதில் "வெள்ளை ரோஜா' என்ற படமும் ஒன்று. இது நடிகர் திலகம் சிவாஜி நடித்த படம். அதில் நடிகர் சுரேசும், நடிகை ராதாவும் பாடுவது போல் ஒரு பாடல். இளையராஜா இசையில் நான் எழுதிய அந்தப் பாடல் இயக்குநர் ஏ. ஜெகந்நாதனுக்கு மிகவும் பிடித்த பாடல். அவரே தொலைக்காட்சிப் பேட்டிகளில் பலமுறை சொல்லியிருக்கிறார். மிகவும் பிரபலமான பாடல்களில் இதுவும் ஒன்று.

"சோலைப் பூவில் மாலைத் தென்றல்
பாடும் நேரம்
ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்
ஆடும் காலம்
புது - நாணம் கொள்ளாமல்
ஒரு வார்த்தை சொல்லாமல்
மலர்க் - கண்கள் நான்கும் மூடிக் கொள்ளும்
காதல் யோகம்'
- என்ற பல்லவியுடன் அந்தப் பாடல் தொடங்கும். இதில் ஒரு சரணத்தில் வருகிற இரண்டு வரியை அடிக்கடி சொல்லிப் பாராட்டுவார்.
"மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்
உன்மேல் அன்பும் மாறாது
உன்னை யன்றித் தென்றல் கூட
எந்தன் தேகம் தீண்டாது'

- இந்த இரண்டு வரிகள் அவருக்கு மிகவும் பிடித்த வரிகள். "உன்னையன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது என்பது கவித்துவம் மிகுந்த நயமான கற்பனை' என்று திரைப்பட விழாக்களில் புகழ்ந்துரைத்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் எஸ். ஜானகியும் பாடிய பாடல் இது.

இயக்குநர் ஜெகந்நாதனும், நானும் கன்னிமாரா நூலகத்தில் நடந்த ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றபோது அங்கு நான் பேசிய ஒரு கருத்தைப் பற்றி என்னிடம் கேட்டார்.

""பறம்புமலைப் பாரி, மலையமான் திருமுடிக்காரி, கொல்லிமலை நாட்டை ஆண்ட வல்வில் ஓரி, ஆய் அண்டிரன், எழினி, பேகன், நள்ளி என்று கடையேழு வள்ளல்கள் பற்றிக் குறிப்பிட்டீர்களே, அந்தப் பெயர்கள் எனக்கும் தெரியும். எதை வைத்து இவர்களைக் கடையேழு வள்ளல்கள் என்கிறோம்'' என்று கேட்டார்.

""குமணனைப் பற்றி பெருஞ்சித்திரனார் பாடிய ஒரு பாடல் புறநானூற்றில் 158-ஆவது பாடலாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. அதில் குமணா, உனக்கு முன்னால் வாழ்ந்த வள்ளல்கள் ஏழு பேர் மாய்ந்த பின்னர், புலவோர்க்கும், இரப்போர்க்கும் இல்லையென்று சொல்லாது கொடுப்பவன் நீதான். ஆகவே எம்போன்றோர் உன்னை நாடி வருகின்றோம் என்று சொல்வார். அப்படிச் சொல்லும் போது அந்த வள்ளல் எழுவர் பெயரையும் குறிப்பிடுவார். அதை வைத்துத்தான் அவர்களைக் கடையேழு வள்ளல்கள் என்கிறோம்'' என்று சொல்லிவிட்டுப் பெருஞ்சித்திரனார் பாடிய செய்யுளின் சில வரிகளையும் அவரிடம் சொன்னேன்.

"முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவும்
அரசுடன் பொருத அண்ணல் நெடுவரைக்
கறங்குவெள் ளருவி கல்லலைத் தொழுகும்
பறம்பிற் கோமான் பாரியும் பிறங்குமிசைக்
கொல்லிஆண்ட வல்வில் ஓரியும்
காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
மாரி யீகை மறப்போர் மலையனும்
ஊரா தேந்திய குதிரைக் கூர்வேற்
கூவிளங் கண்ணிக் கொடும்பூண் எழினியும்
ஈர்ந்தண் சிலம்பின் இருள்தூங்கு நனிமுழை
அருந்திறற் கடவுள் காக்கும் உயர்சிமைப்
பெருங்கல் நாடன் பேகனும் திருந்துமொழி
மோசி பாடியஆயும் ஆர்வமுற்று
உள்ளி வருநர் உலைவுநனி தீரத்
தள்ளா தீயும் தகைசால் வண்மைக் 
கொள்ளா ரோட்டிய நள்ளியும் எனவாங்கு
எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி....
..................
..................
இவண் விளங்கு சிறப்பின் இயல்தேர்க் குமண
இசைமேந் தோன்றிய வண்மையொடு
பகைமேம் படுகநீ ஏந்திய வேலே'

- என்று நான் சொல்லி முடித்ததும் ""எப்படி இவ்வளவும் இன்றளவும் ஞாபகத்தோடு சொல்கிறீர்கள்?'' என்றார்.

""எனக்குக் கொஞ்சம் நினைவாற்றல் உண்டு. இதெல்லாம் இளமையில் படித்தது அதனால் நினைவில் நிற்கிறது. அதே நேரத்தில் நேற்று என்ன சாப்பிட்டோம் என்பது கூட சில நேரத்தில் இப்போது மறந்து விடுகிறது'' என்றேன்.

""சரி. அது போகட்டும். கடையேழு வள்ளல்கள் போல் இடையேழு வள்ளல்கள், தலையேழு வள்ளல்கள் பெயர் தெரியுமா?'' என்று கேட்டார். ""தெரியும். குமணன், சகரன், செம்பியன், துந்துமாரி, நளன் நிருதி, மந்தாதா இவர்கள் தலையேழு வள்ளல்கள். இதில் குமணன் என்று குறிப்பிடுகிற குமணன், பெருஞ்சித்திரனார் பாடிய குமணன் அல்ல'' என்று கூறினேன்.

""அதைப்போல் அக்குரன், அந்திமான், சந்திமான், சந்தன், கர்ணன், சிசுபாலன், தந்து வக்கிரன் இவர்கள் இடையேழு வள்ளல்கள்'' என்றும் கூறினேன்.

இவர்கள் பெயரெல்லாம் "அபிதான சிந்தாமணி' என்ற நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும், அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த சிங்காரவேலு முதலியார் என்றும், அந்தப் புத்தகம் வெளிவரப் பொருளுதவி புரிந்தவர் நான்காம் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பாலவ நத்தம் ஜமீன்தார் பாண்டித்துரைத் தேவர் என்றும் விளக்கினேன். அவர் மிக்க மகிழ்ச்சியடைந்து ""இது எனக்கும் தெரியும்; நான் தெரிந்து வைத்திருப்பது சரிதானா என்று தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்டேன்'' என்றார்.

இவரளவிற்கு இலக்கியம் தெரிந்தவர்கள், தமிழ்ப்பற்று மிக்கவர்கள் இயக்குநர் உலகில் எவரும் இன்றைக்கு இரார் என்று எண்ணுகிறேன்.

நான் பாடல் எழுதிய இசையமைப்பாளர்களில் இளையகங்கை என்பவரும் ஒருவர். இவர் இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனுடைய மகன். இவரது இயற்பெயர் ஸ்டாலின். இளையராஜா என்ற பெயரிலுள்ள இளைய என்ற சொல்லையும், கங்கை அமரன் பெயரிலுள்ள கங்கையென்ற சொல்லையும் இணைத்துத் தன் பெயரை இளைய கங்கையென்று வைத்துக் கொண்டார்.

சிவஸ்ரீ பிக்சர்ஸ் மணி ஐயர் தயாரித்த படம். இந்தப் படத்தில்தான் நடிகர் ஆனந்தராஜும், நடிகர் சரத்குமாரும் இரட்டைக் கதாநாயகர்களாக அறிமுகம் ஆனார்கள்.

இவர்கள் கதாநாயகர்களாக நடித்த முதல் படமும் இதுதான். அதற்கு முன் வில்லன் பாத்திரங்களில் மட்டுமே நடித்தார்கள். இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஆனந்தராஜும் சரத்குமாரும் சேர்ந்து பாடுவதுபோல் அமைந்த அறிமுகப் பாடல் அது.

"நாங்க மட்டுமா நாட்டைக் கெடுக்கிறோம்
ஒரு கூட்டமே ஓட்டை வாங்கி
நாட்டைக் கெடுக்குது
கூட்டம் போட்டு ஊரை ஏய்க்குது - இந்த நாட்டையே
நோட்டுக்காகக் காட்டிக் கொடுக்குது
குற்ற வாளிங்க எல்லோரும் தானுங்க
நாங்க மட்டுமா தப்பான ஆளுங்க
ஊருக்காகத் தியாகம் செய்யும் கூட்டம்
இப்போது ஏதுங்க'

- இது இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய பாடல். இதை மலேசிய வாசுதேவனும், சுரேந்தரும் பாடியிருப்பார்கள். இந்தப் படத்தில் நான் எழுதிய இன்னொரு பாடலை மலேசிய வாசுதேவனும், சித்ரா குழுவினரும் பாடியிருப்பார்கள்.

"மாராப்புச் சேலைக்குள்ளே
மச்சானை மறைக்கிற புள்ளே
மாலையிடும் நேரம் வந்தாச்சு - நாம் ஒண்ணாச் சேர
மாரியம்மன் வரமும் தந்தாச்சு'
- இப்படிப் பல்லவி ஆரம்பமாகும்.
                               சரணம்
ஆண் :    ஆலமர விழுதைப் போலே
    அடர்ந்திருக்கும் கூந்தலின் மேலே
    பூவாக நானும் மாறி
    புதுவாசம் தரலாமா
பெண் :     பூவாக நீயும் மாறி 
    புதுவாசம் தருவா யானால்
    என் தோளில் மாலை போலே
    உனைப் போட்டுக் கொள்வேனே
ஆண் :     உன் தோளில் மாலை ஆனாலே - நான்
    அங்கும் இங்கும்
    உன் மேலே உரசிப் பார்ப்பேனே

- இதுபோல் இன்னொரு சரணம் வரும். இயக்குநர் ஸ்ரீதரின் நண்பரான சித்ராலயா கோபுவுக்கு இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். மணி ஐயருக்கு உறவினர் இவர்.இந்தப் படம் இளையகங்கைக்கு நல்ல பெயரை வாங்கிக் 
கொடுத்தது.

ஆனால் பெரிய அளவு திரைத்துறையில் அவரால் மிளிர முடியவில்லை. இருந்தாலும் பத்துப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். அவரும் இளவயதிலேயே மறைந்து விட்டார். இளையகங்கை என்று சொன்னவுடனே இளைய கம்பன் என் நினைவுக்கு வருகிறார். இவர் பல படங்களில் பாடல் எழுதியிருக்கிறார். இவரை அடுத்த இதழில் பார்ப்போம்.

(இன்னும் தவழும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com