இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துங்கம்

'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தயாரித்த ராஜ்கண்ணு அதற்குப் பின் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார்.
இளைஞர்களை ஈர்க்கும் பாடல்!- கவிஞர் முத்துங்கம்

ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 68
'கிழக்கே போகும் ரயில்' படத்தைத் தயாரித்த ராஜ்கண்ணு அதற்குப் பின் ஒரு படத்தைத் தயாரித்து இயக்கினார். அந்தப் படத்தின் பெயர் "அர்த்தங்கள் ஆயிரம்' சங்கர் கணேஷ் இசையில் அதில் இரண்டு பாடல்களை நான் எழுதினேன். அதில் ஒன்று
"கடலோடு நதிக்கென்ன கோபம் - காதல்
கவிபாட விழிக்கென்ன நாணம்
இளங்காற்றுத் தீண்டாத சோலை - மண்ணில்
எங்கேயும் பார்த்தாயோ என் தோட்டப் பூவே'
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
சரணம்
நீல வான மேகம் போல
காதல் வானில் தவழுகிறேன்
நீரில் ஆடும் பூவைப் போல
ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்
ஓடை மீனே ஜாடை பேசு
வனமோகினி வனிதாமணி
புதுமாங்கனி சுவையேதனி
புதுவெள்ளம் போலே வாராய்
இது மாதிரி மூன்று சரணங்கள் வரும். இதில் இரண்டாவது சரணம் மட்டும் வேறுவகையான சந்தத்தில் இருக்கும். இந்தப் பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியன் பாடினார். வழக்கறிஞரும் இலக்கியப் பேச்சாளருமான சகோதரி சுமதிக்கு மிகவும் பிடித்த பாடல் இது. அடிக்கடி இப்பாடலைப் பற்றிக் கூறுவார். இந்தப் படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியவர் காங்கிரஸ் கட்சிப் பேச்சாளரும் வழக்கறிஞருமான கவிஞர் நேதாஜி. இவரும் நானும் பல கவியரங்கங்களில் பாடியிருக்கிறோம். நான் "முரசொலி' பத்திரிகையில் பணியாற்றியபோது அவர் காங்கிரஸ் கட்சி நடத்திய "நவசக்தி' இதழில் பணியாற்றினார். இவர் இன்று நம்மிடம் இல்லை. நான் எழுதிய இந்தப் பாடல் பிரபலமானது. படம் சுமாராக ஓடியது.
இதில் இன்னொரு பாடலையும் நான் எழுதினேன்.
ஆசைகளோ ஒரு கோடி - புது
மோக ராக அலைமோதும் வேளைதனில்
ஆசைகளோ ஒரு கோடி
நீ வராமல் தொடாமல் விடாது அந்த
ஆசைகளோ ஒரு கோடி
என்று தொடக்கமாகும். "ஆசைகளோ ஒரு கோடி' என்று பல்லவிக்கான முதல் வரியை எனக்குச் சொன்னவரே நேதாஜிதான். இதில் இரண்டு சரணம் வரும்.
முகிலில் இருந்து குளிர்ந்த பனியும் வீசும்
தரையில் இருக்கும் மலரைத் தடவிப் பேசும்
உனையே நினைந்தேன் மலர்ந்தேன் வளர்ந்தேன்
அழகிய கனியுடல் நீ தொடும் புதுமடல்
இருவரும் கலந்தொரு சுகநிலை பெறவே
அருகினில் நெருங்கிட உனக்கென்ன பயமோ
இணைவோம் கனிவோம் மகிழ்வோம்
என்று சரணம் முடியும். கானடா ராகத்தில் தொடக்கமாகும் இந்தப் பாடல் ராஜ்கண்ணுக்கு மிகவும் பிடித்த பாடல். இதைப் பாடியவர் எஸ். ஜானகி. இந்தப் பாடலை அம்மன் கிரியேஷன்ஸ் அலுவலகத்திற்கு நடிகர் ராஜேஷ் வந்தபோது அவரிடம் போட்டுக் காட்டினார்கள். அவர் வார்த்தைகளே புரியவில்லை; என்ன பாடுகிறார் என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டார். அந்த அளவு இசைக் கருவிகளின் ஒலி பாடியவரின் குரலை அமிழ்த்திவிட்டது. உள்ளதை உள்ளபடியே சொல்பவர் நடிகர் ராஜேஷ். அந்த வகையில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும் .
அம்மன் கிரியேஷன்ஸ் தயாரித்த "கன்னிப்பருவத்திலே' என்ற படத்தில் தான் இவர் கதாநாயகனாக அறிமுகமானார். அதில் வில்லன் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் கே. பாக்கியராஜ். ராஜேஷ் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர். இவரளவிற்கு உலக சினிமாவை அலசி ஆராய்ந்தவர்கள் தமிழ்த் திரையுலகில் எவரும் கிடையாது. ஜோதிடக் கலையிலும் வல்லவர். என் மகள் திருமணத்திற்கெல்லாம் வந்து வாழ்த்தினார்.
இளம் பாடலாசிரியர்களில் இளையகம்பனை நான் அவசியம் குறிப்பிட வேண்டும். அவர் பச்சையப்பன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே அவரை நன்கறிவேன். மரபுக் கவிதை எழுதுவதில் வல்லவர். வெண்பா விரைவாகவும் நன்றாகவும் எழுதுவார். இன்றைய இளம்பாடலாசிரியர்களில் பிழையில்லாமல் வெண்பா எழுதக் கூடிய கவிஞர்கள் நானறிந்தவரை இவரைத் தவிர எவருமிலர்.
1982 -ஆம் ஆண்டில் "சினிமா எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில் நான் எழுதிய தொடர் கட்டுரையை அவர்தான் அந்த அலுவலகத்திற்குச் சென்று கட்டுரைகளைப் படியெடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். அது "என் பாடல்கள் சில பார்வைகள்' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. ஆகவே அவர் எனது அன்புக்கும் நன்றிக்கும் உரியவர். பல கவியரங்கங்களில் என் தலைமையில் பாடியிருக்கிறார்.
திருவண்ணாமலைப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கிற அம்மன் கோயிலைப் பற்றியும் அம்மனைப் பற்றியும் பாட்டெழுத வேண்டுமென்று அழைத்துப் போனார். அவர் சொன்னார் என்பதற்காக நான் பாடல் எழுதினேன். ஆனால் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவில்லை. ஆனாலும் அவர்களால் இயன்ற ஒரு தொகையை எனக்குக் கொடுக்க வந்தபோது அதை இளைய கம்பனிடமே கொடுத்து விடுங்கள் என்று சொல்லிவிட்டேன். அப்போதுதான் அவருக்குத் திருமணம் ஆகியிருந்தது. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு மிகவும் வேண்டியவர். இவர் பாடல் எழுதிய முதல் திரைப்படம் "உன்னைக்கொடு என்னைத் தருவேன்' என்ற படம். இது 2000-த்தில் வெளிவந்தது. சூப்பர் குட் பிலிம்ஸ் செüத்திரி தயாரித்த படம்.
இதயத்தைக் காணவில்லை - அது 
தொலைந்தும் நான் தேடவில்லை
கண்டேன் அழகிய கொலுசு கொலுசு
திருகாணி ஆனது மனசு மனசு
இந்நாள் அனுபவம் புதுசு புதுசு
எஸ்.ஏ. ராஜ்குமார் இசையில் அவர் எழுதிய முதற்பாடல். இந்தப் படத்தை இயக்கியவர் கவி. காளிதாஸ். படம் சுமாராக ஓடியது. பாடல் பிரபலமானது. இவர் பாடல் எழுதிய இரண்டாவது படம் "மாயி' இதில் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். இரண்டுமே பிரபலமான பாடல்கள். எஸ்.ஏ. ராஜ்குமார் தான் இதற்கும் இசை. படமும் நுறு நாட்கள் ஓடிய வெற்றிப்படம்.
ஓலெ ஓலெ ஓலெ
ஓலெக் குடிசையில்
ஓட்டகம் வந்திருச்சா
ஊசி ஊசி ஊசி முனையிலே
கப்பலும் வந்திருச்சா
மீசை இருக்கிற மாமா - என்
ஆசை இருக்காதா
பூத்துக் கிடக்குது ரோசா - என்
வாசம் அடிக்காதா
என்ற பாடல் ஒன்று.
நிலவே வான்நிலவே வான்நிலவே
வார்த்தை ஒன்று பேசு
கண்ணன் காலடியே ராதைஇவள்
வாழ்க்கை யென்று கூறு
என்ற பாடல் மற்றொன்று. இது சரத்குமார் நடித்த படம்.
அன்பாலயா நிறுவனம் தயாரித்த "தைப் பொறந்தாச்சு' என்ற படத்தில் தேவா இசையில்
நிலவே நிலவே தாளம் போடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
மலரே மலரே ராகம் தேடு
பாட்டொண்ணு பாடப் போறேன்
நட்சத்திரமே கூடவா
அக்காமகளைப் பாடவா
நான் பாடும் பாடல் அவளல்லவா
என்ற இவரது பாடலும் பிரபலமான பாடல். படமும் நூறுநாள் ஓடியது. நடிகர் பிரபு நடித்த படம் இது.
இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையில் கமலஹாசன் நடித்த "தெனாலி' என்ற படத்தில் இவர் எழுதிய பாடல் பிரபலமான பாடல். படமும் நூறு நாட்களைத் தாண்டி ஓடியது. அந்தப் பாடல் இதுதான்.
தெனாலி தெனாலி - இவன்
பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி தெனாலி - இவன்
பயந்தா ஊருக்குப் பல ஜோலி
என்ற பல்லவியுடன் ஆரம்பமாகும்.
"தூத்துக்குடி' என்ற படத்தில் பிரவின்மணி இசையில் இவர் எழுதிய பாடல் எல்லாராலும் பாடப்படுகிற பாடலாக மட்டுமல்ல இளைஞர்களை ஈர்க்கும் பாடலாகவும் இயங்குகிறது.
கருவாப்பையா கருவாப்பையா
கருவாச்சி கவுந்துப்புட்டா
மனச்சாட்சி தொலைச்சுப்புட்டா
குண்டூசி மீசை குத்தி
மேலுதடு காய மாச்சு
கிறுக்குப்பய பல்லுக்குப்பட்டு
கீழுதடு சாயம்போச்சு
என்று தொடக்கமாகும் அந்தப் பாடல்.
நடிகர் விஜய், சிம்ரன் நடித்த "உதயா' படத்தில்
பெண் : கெட்டி மேள கெட்டிமேளச் சத்தத்திலே
பூக்கும்பூ என்ன என்ன?
ஆண் : மல்லிகைப் பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மலைப்பூ
பெண் : இல்லே இல்லே
ஆண் : மழலைப் பூ
பெண் : இல்லை இல்லை
என்று தொடங்கி
ஆண் : பூவோட அழகெல்லாம் வேருக்குத் தெரியாது
பூங்காற்றைச் சேராமல் புல்லாங்குழல் பாடாது
என்று முடியும் பல்லவி.
இன்றும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதுவும் இளைய கம்பன் எழுதிய பாடல்தான் இதற்கு இசையமைத்தவர் ஏ.ஆர். ரகுமான். இது எழுதி இசையமைத்த பாடல்.
சபேஷ் முரளி இசையில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் "சமுத்திரம்' படத்தில் இவர் எழுதிய
கண்டுபிடி கண்டுபிடி
கள்வனைக் கண்டுபிடி
கண்களுக்குள் காதல் வந்து
கல்மிஷம் பண்ணுதடி - ஒரு
சேலை நூலையே கொண்டு - இந்தச்
சீனச் சுவரை இழுத்தாயே
திருடனைத் திருடிக் கொண்டு - நீ
காதல் ஊழல் செய்தாயே
என்று வித்தியாசமாக எழுதிய பாடல் பலரைக் கவர்ந்து நிற்கும் பாடல். படமும் நூறு நாட்களுக்கு மேல் ஓடியது. இளையராஜா, யுவன் சங்கர்ராஜா, பவதாரணி ஆகியோர் இசையிலும் இவர் பாடல் எழுதியிருக்கிறார். இதுவரை நானூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய திரைப்பாடல்களுக்காகப் பல்வேறு தனியார் விருதுகள் பெற்றுள்ளார்.
எம்பில் ஆய்வுக்காகவும், டாக்டர் பட்ட ஆய்வுக்காகவும் இவர் கவிதை நூல்களைச் சில மாணாக்கர்கள் ஆய்வு செய்திருக்கின்றனர். அமைதியும் அடக்கமும் உள்ள கவிஞர் இவர்.
(இன்னும் தவழும்)
படங்கள் உதவி: ஞானம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com