குழந்தைகளின் எண்ணங்களை வெளிக்கொணர..!

சிறார் இதழ் 'கலர் பலூன்' அறிமுகம்
குழந்தைகளின் எண்ணங்களை வெளிக்கொணர..!

குழந்தைகள் தங்களது உணர்வுகளை, எண்ணங்களைப் பல வடிவங்களில் வெளிக்கொணர உதவும் வகையில் "கலர் பலூன்" எனும் இருமாத சிறார் இதழ் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 -ஆம் வகுப்பு குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த இதழின் ஆசிரியர் ந. ரவிசங்கர் கூறியதாவது:

"குழந்தைகளின் உலகம் விந்தையானது. அழகானது. குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும், அவர்களிடமிருந்து கற்பதற்கும் நமக்கு நிறைய விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் எப்பொழுதுமே உற்சாகமாகவும், சுதந்திர உணர்வோடும் இருக்கக் கூடியவர்கள். அவர்களது கற்பனைத்திறன் நம்மால் ஊகிக்க முடியாதது. அவர்களது உலகில் பறக்க முடியாதவை. பறக்கும், பேச முடியாதவை பேசும். நமது கற்பனைக்கு எட்டாத அவர்களது சிந்தனையும், அறிவாற்றலும் பல வித்தியாசங்களையும், ஆச்சரியங்களையும் நமக்கு தரும்.

குழந்தைகளின் திறமைகளைக் கண்டுணர்ந்து அங்கீகரிக்கவும் பல செயல்பாடுகளை வடிவமைத்துக் கொடுக்கவும் வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் உள்ளது. இவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில், இதழ் பயன்படுகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இரண்டு மாதத்துக்கு ஒருமுறை "கலர் பலூன்' இதழ் அனுப்பப்படுகிறது. முதலாவது இதழ் கடந்த பிப். 6-ஆம் தேதி கீழ்வேளூர் ப்ரைம் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸால் வெளியிடப்பட்டது. இதன்மூலம் தமிழகத்திலேயே மாவட்ட அளவில், அரசுப் பள்ளி குழந்தைகளுக்காக, குழந்தைகளே எழுதிய முதல் இதழை வெளியிட்ட பெருமையை நாகப்பட்டினம் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் பெற்றுள்ளது.

முதல் இதழ் 60 குழந்தைகளது படைப்புகள் தாங்கி வந்தது. இந்த இதழ் மூலம், சிறு வயது முதலே தங்களது கற்பனையாற்றலை வெளிப்படுத்தும் வாய்ப்பை அரசுப் பள்ளி மாணவர்கள் பெற முடியும். பல்வேறு திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள இந்த இதழ் உறுதுணையாக இருக்கும். மேலும் தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களின் திறன்களை மேம்படுத்த இதுபோன்ற இதழ்கள் வெளிவர அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

இதழ் உருவாக நாகப்பட்டினம் ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர் கோ. காமராஜன், இதழ் ஒருங்கிணைப்புக் குழு ஆசிரியர்கள் கு.வ. மனத்துணைநாதன், ரா.நா. வருணனி உள்ளிட்டோர் நல்லதொரு உதவிகளைப் புரிந்தனர்'' என்றார்.

-ஜெ. சபரிநாதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com