பெருமை சேர்க்கும் தைக்கால் பிரம்பு...

தைக்கால் பிரம்பு பொருள்களுக்கு புவிசார் குறியீடு: உலகம் முழுவதும் பெருமை
பெருமை சேர்க்கும் தைக்கால் பிரம்பு...
Published on
Updated on
2 min read

தைக்காலில் விற்பனையாகும் பிரம்புப் பொருள் விற்பனைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தற்போது மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உள்பட்ட சீர்காழி அருகே கொள்ளிடம் - சிதம்பரம் சாலையில் தைக்கால் கிராமத்தில் பல தலைமுறைகளாகவே பாரம்பரிய கைவினைப் பொருளாக, பிரம்புப் பொருள்கள் உற்பத்தி, விற்பனை நடைபெறுகிறது.

சுமார் 70 ஆண்டுகளுக்கும் முன்பு தைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் அஸ்ஸாம் மாநிலத்துக்குச் சென்றிருந்தபோது, அங்கு பிரம்புப் பொருள்களைக் கொண்டு பல்வேறு தயாரிப்புகளைச் செய்வதைப் பார்த்து அதிசயித்தார். இதன் தயாரிப்பைக் கற்று தைக்கால் திரும்பி வந்ததிலிருந்து இங்கும் அதுபோன்ற பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்தார். அன்று விதையாகத் துவங்கியது, தற்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.

முதலில் சாதாரண குடிசைத் தொழிலாக தொடங்கிய பிரம்புப் பொருள்கள் தயாரிப்பு தற்போது 2 கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறமும் இருநூற்றுக்கும் மேற்பட்ட உற்பத்திக் கூடங்களும் விற்பனையகங்களுமாக மாறியுள்ளன. இங்குள்ளவர்களில் 7 கடைக்காரர்கள் அஸ்ஸாமிலிருந்து மூங்கிலைக் கொண்டு வந்து பிறருக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.

கண்ணைக் கவரும் கலைநயத்துடன் கூடிய பிரம்புப் பொருள்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது.

நாற்காலி, ஊஞ்சல், சோபா செட், அலமாரி, குழந்தைகள் தொட்டில், பிரம்புக் கூடைகள், பூக்கூடைகள், தட்டுகள், பூஜைப் பொருள்கள், மிகுந்த கலைநயம் மிக்க கைவினைப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பிரம்பினால் ஆன சேர் சோபாவில் உட்காரும் போதும் படுக்கும் போதும் உடல் சூட்டை பாதுகாத்து ரத்த ஓட்டம் சீராவதாகக் கூறப்படுகிறது. ஆகையால் இதை அனைவரும் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

இந்தப் பிரம்புப் பொருள்கள் உற்பத்தியை நம்பி தைக்கால், சாமியம், ஆணைக்காரன்சத்திரம், கோபாலசமுத்திரம், சீயாளம், பெரம்பூர் உள்ளிட்ட 20- க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கொள்ளிடம் அருகே தைக்கால் கிராமத்தில் விற்கப்படும் பிரம்பு வகைகள் முதல் தரம், 2-ஆம் தரம் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டு அதற்கு ஏற்ப சேர், நாற்காலி, ஊஞ்சல், குழந்தை தொட்டில், குழந்தைகள் உட்காரும் நாற்காலி, முதியவர்கள் பயன்படுத்தும் சாய்வு நாற்காலி, சோபா செட் ஆகியவை கலை நயத்திற்கு தகுந்தாற்போல் விற்பனை செய்யப்படுகிறது.

அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து சுமார் 9 முதல் 12 அடி நீள பிரம்புகள் இறக்குமதி செய்யப்பட்டு அவை சூடுபடுத்தி பொருளாக வளைத்து தயாரிக்கப்படும். இங்கு விற்கப்படும் பொருட்கள் ரூ.750-லிருந்து ரூ.30ஆயிரம் வரை மதிப்பில் விற்கப்

படுகிறது. இதனை பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.

பிரம்புப் பொருள் விற்பனைக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தற்போது மத்திய அரசின் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் தைக்கால் பிரம்பு பொருள்களின் பெருமையை மேலும் எடுத்துரைப்பதாக புவி சார் குறியீடு உள்ளது.

இங்குள்ள கடைகளில் நாளொன்றுக்கு சுமார் ரூ.10 லட்சம் வரை பல்வேறு பிரம்புப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

-எம்.ஞானவேல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com