விடுதலைப் போராட்டக் காலம் அது. அப்போது, பிளேக் நோயால் கொத்துக் கொத்தாக மக்கள் மாண்டு கொண்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான மருந்துகளை ஐரோப்பாவிலிருந்து வாங்க வேண்டியிருந்தது. "நமது நாட்டு மக்களின் நோயை சரிப்படுத்த வெளிநாடுகளிலிருந்து பெரும் செலவில் ஏன் மருந்து வாங்க வேண்டும்? மருந்து உற்பத்தியில் நாமே ஏன் ஈடுபடக் கூடாது?' என்று கேட்டார் நமது நாட்டைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி.
இந்தக் கேள்வியுடன் அவர் நிற்கவில்லை. தனது பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், நண்பர்களின் உதவியுடன் 1901-இல் கொல்கத்தாவில் "பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் ஃபார்மாசூடிகல்ஸ்' என்ற நிறுவனத்தை ரூ. 700 முதலீட்டில் துவங்கிவிட்டார். இன்று அந்நிறுவனம் ஆல்போல வளர்ந்து, ரூ. 65 கோடிக்கு மேல் ஆண்டு விற்றுமுதலாகக் கொண்ட பிசிபிஎல் என்ற பொதுத்துறை நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர், "இந்திய நவீன வேதியியலின் தந்தை' என்று போற்றப்படும் ஆச்சார்ய பிரபுல்ல சந்திர ராய்.
வேதியியல் விஞ்ஞானி, கல்வியாளர், மருந்து தயாரிப்பாளர், சுதந்திரப் போராட்ட வீரர், சீர்திருத்தவாதி, சமூக சேவகர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர் எனப் பல முகங்களைக் கொண்ட ராயின் வாழ்க்கையே தியாக மயமானது.
1861, ஆகஸ்டு 2-இல், பிரிக்கப்படாத பாரதத்தில் (வங்கதேசம்) குல்னா மாவட்டம், ராருலி கத்தபாரா என்ற கிராமத்தில், நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்தவர் ராய்.
தொழில் நிமித்தமாக அவரது குடும்பம் கொல்கத்தாவுக்குக் குடிபெயர்ந்தபோது ராய்க்கு வயது 9. அங்கு நான்காம் வகுப்பு படிக்கும்போது சீதபேதியால் பாதிக்கப்பட்ட ராயின் படிப்பு இடையில் நின்றுபோனது. ஆனால் வீட்டிலிருந்தபடியே பாடத்திட்டத்தில் இடம்பெறாத ஆங்கில இலக்கியம், அறிவியல் நூல்களை ஆர்வத்துடன் படித்தார் ராய்.
அடுத்த ஆண்டு பள்ளிப் படிப்பை மீண்டும் தொடர்ந்த ராய், பண்டித ஈஸ்வர சந்திர வித்யாசாகர் நிறுவிய மெட்ரோபாலிடன் இன்ஸ்டிட்யூட்டில் 1879-இல் பி.ஏ. படிப்பில் சேர்ந்தார். ஆனால் அறிவியல் மீது தீரா தாகம் கொண்ட அவரால் கலைப் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.
தனது ஆர்வத்தை ஈடுகட்ட, கொல்கத்தாவிலிருந்த மாநிலக் கல்லூரியின் அறிவியல் வகுப்புகளுக்குச் செல்லத் துவங்கினார் ராய். அங்கு அலெக்ஸôண்டர் பெட்லர் என்ற பேராசிரியரின் வேதியியல் வகுப்புகள் அவரை மிகவும் கவர்ந்தன. அதன் காரணமாக வேதியியல் மீது ராய்க்கு மிகுந்த ஈர்ப்பு ஏற்பட்டது.
அதன் பின், தனது பி.ஏ. படிப்பைக் கைவிட்டு, பிரிட்டனிலுள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. படிக்க கப்பலேறினார் ராய். 1887-இல் அங்கு வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவர் வெளியிட்ட "தாமிரம், மெக்னீசியம் தனிமக் குழுமத்தின் சல்பேட் கலப்பினம்' என்ற ஆய்வறிக்கை அவருக்கு மிகுந்த புகழை அளித்தது. அந்தப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் சபை துணைத் தலைவராக 1888-இல் தேர்வானார் ராய்.
1889-இல் கொல்கத்தா மாநிலக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகச் சேர்ந்தார் ராய். அவருக்கு துறை சார்ந்த அனுபவமும் உயர் கல்வித் தகுதியும் இருந்தபோதும், ஆங்கிலேயராக இல்லாத காரணத்தால் அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை. அந்த பாரபட்சத்தை எதிர்த்துப் போராடியும் பலன் கிடைக்கவில்லை. இதுவே பின்னாளில் இந்திய வேதியியல் பள்ளி (1924) என்ற ஆராய்ச்சி மையத்தைத் துவங்க அவருக்கு தூண்டுதலாக அமைந்தது.
வேதியியலில் புதிய சேர்மங்களை உருவாக்குவது பிரதானமானதாகும். இதில் ராய்க்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. 1896-இல் அவர் வெளியிட்ட பாதரச நைட்ரைடு (Mercurous Nitrite) சேர்மம் தொடர்பான ஆய்வறிக்கை அவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தது.
1916-இல் மாநிலக் கல்லூரியிலிருந்து வெளியேறி, கொல்கத்தா பல்கலைக்கழக அறிவியல் கல்லூரியில் சேர்ந்த ராய், அங்கு தங்கம், பிளாட்டினம், இரிடியம் போன்ற தனிமங்களின் சல்பேட் சேர்மத்தை உருவாக்குவதிலும், அவற்றை மருந்து மூலக்கூறாகப் பயன்படுத்துவதிலும் வெற்றி பெற்றார். இது சரவாங்கி எனப்படும் முடக்குவாதத்துக்கு சிறந்த மருந்தாகும் என்றும் கண்டறிந்தார்.
1921-இல் பணியிலிருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெற்றாலும், 1936 வரை தொடர்ந்து மதிப்புறு பேராசிரியராகப் பணிபுரிந்தார். இந்த 15 ஆண்டுகளில் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியம் அனைத்தையும் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆராய்ச்சிக்கே வழங்கிவந்தார்.
வங்க மொழியில் நூற்றுக் கணக்கான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ள ராய், பிரம்ம சமாஜ அமைப்பிலும் மிகுந்த அக்கறை காட்டினார். 1923-இல் வடக்கு வங்கத்தில் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தின்போது நிவாரணப் பணியை ஒருங்கிணைத்து அந்தக் காலத்திலேயே ரூ. 2.5 லட்சம் நிதி திரட்டி மக்களுக்கு உதவினார்.
இந்தியாவின் பண்டைய ரசாயன விஞ்ஞானியான "ரச ரத்னாகரா' நூலை எழுதிய நாகார்ஜுனா பெயரில் 1922-இல் ஒரு விருதை உருவாக்கிய ராய், அதற்கு பெரும் தொகையை முதலீடாக்கி, வேதியியல் துறையில் சாதனை படைக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு தொடர்ந்து வழங்கச் செய்தார்.
தனது ஆராய்ச்சிப் பணிகளுக்கு குடும்ப வாழ்க்கை சுமையாகக் கூடாது என்பதற்காக வாழ்நாள் முழுவதும் பிரம்மசாரியாக வாழ்ந்த ராய், 1944, ஜூன் 16-இல் மறைந்தார்.
தனது சுயசரிதையை இரு பாகங்களாக, "வங்க வேதியியலாளரின் வாழ்க்கையும் அனுபவங்களும்' என்ற தலைப்பில் (1932, 1935) வெளியிட்டார் ராய்.
சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமை கொண்டிருந்த ராய், பண்டைய நூல்களில் இடம்பெற்ற வேதியியல் கருத்துகளை இளம் தலைமுறைக்கு வெளிப்படுத்த, "இந்து ரசாயன சாஸ்திர சரித்திரம்' என்ற நூலை இரண்டு பாகங்களாக (1906, 1909) எழுதி வெளியிட்டார்.
விடுதலைப் போராட்டத்திலும், காதி இயக்கத்திலும் ஆர்வம் காட்டிய ராய், பொருளாதாரத் தன்னிறைவே உண்மையான சுதந்திரத்தை அளிக்கும் என்றார். அவரது சுதேசி மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் அடிப்படையே அதுதான்.
இந்தியாவில் வேதியியல் துறையின் வளர்ச்சிக்கு ராயின் பங்களிப்பு முதன்மையானது. அவரது வேதியியல் அறிவு தேச எல்லை கடந்தது. "தலைசிறந்த வேதியியல் மேதை' என்று லண்டனிலுள்ள "ராயல் சொûஸட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி'யால் அறிவிக்கப்பட்ட, ஐரோப்பாவுக்கு வெளியே வாழ்ந்த முதல் விஞ்ஞானி பிரஃபுல்ல சந்திர ராய் தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி

ரைபகினா, ஆஸ்டபென்கோ முன்னேற்றம்

ஒரே நபா் இரண்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு: தோ்தல் அலுவலரிடம் புகாா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


