கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

33 வயதில் கல்லூரி முதல்வர்! வாழ்க்கையில் முன்னேற துணிச்சல் வேண்டும்!

""தாழ்வு மனப்பான்மை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், பிறர் ஏளனமாகப் பார்ப்பார்களே என்ற எண்ணம் - இந்த மூன்றையும் இளைஞர்களின் ஆழ்மனதில் இருந்து துடைத்தெறிவதே என் பணி'' என்கிறார் திருச்செந்தூரான்.

News image
Updated On :5 அக்டோபர் 2015, 12:33 pm

ந. ஜீவா

""தாழ்வு மனப்பான்மை, தோல்வி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம், பிறர் ஏளனமாகப் பார்ப்பார்களே என்ற எண்ணம் - இந்த மூன்றையும் இளைஞர்களின் ஆழ்மனதில் இருந்து துடைத்தெறிவதே என் பணி'' என்கிறார் திருச்செந்தூரான். இளைஞர்களின் மனதில் தன்னம்பிக்கையை ஊட்டுவதற்காக கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்குச் சென்று லட்சக்கணக்கான இளைஞர்களைச் சந்தித்து வருகிறார்.

அவரே ஒரு சாதனை மனிதர்தான். தனது 33 வது வயதில் ஒரு கல்லூரியின் முதல்வர் பொறுப்பை ஏற்று, மிகவும் இளைய வயது கல்லூரி முதல்வர் என்று பெயர் எடுத்தவர். அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை...

""தேனி மாவட்டம் எஸ்.ரெங்கனாதபுரம் என்ற கிராமம் எனது சொந்த ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். பள்ளிக் கல்வி வரை நான் படித்தது எல்லாம் அரசுப் பள்ளிகளில்தான். இளம் முனைவர் பட்டம் பெற்றதுமே, எனது 23 வது வயதில் மதுரை காமராஜார் பல்கலைக்கழகக் கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைத்தது. 8 ஆண்டுகள் அதில் வேலை செய்தேன். அந்த வேலையை விட்டுவிட்டு மதுரை கருப்பாயூரணி அருகே ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ள சுந்தரம் பொன்னம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் துணை முதல்வராக வேலைக்குச் சேர்ந்தேன். எனது 33ஆவது வயதில் அந்தக் கல்லூரியின் முதல்வராக ஆகிவிட்டேன்.

இவ்வளவு குறைந்த வயதில் ஒருவர் கல்லூரியின் முதல்வராக ஆனது நானாக மட்டும்தான் இருப்பேன். இது எப்படி நிகழ்ந்தது? மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அரசுப் பணியை உதறிவிட்டு, புதிதாக ஆரம்பிக்கப்படுகிற ஒரு தனியார் கல்லூரியில் வேலைக்குச் சேரும் என்ணம் எனக்கு எப்படி வந்தது? இப்போது நினைக்கும்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. நான் தொடர்ந்து அரசுக் கல்லூரியில் வேலை பார்த்திருந்தால், 50 - 55 வயது ஆகும்போது கல்லூரியில் துறைத் தலைவராக ஆகியிருக்க முடியும். 58 வயதில் ஓய்வு பெற்று, அதன் பின் பணியைக் கால நீட்டிப்புச் செய்தால் 60 வயதில்தான் கல்லூரியின் முதல்வராக ஆகியிருக்க முடியும். நான் துணிவாக வேலையை விட்டு விலகியதால்தான் 33 வயதிலேயே கல்லூரியின் முதல்வராக முடிந்தது.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு துணிச்சலாக முடிவுகள் எடுக்க வேண்டும். அந்தத் துணிச்சலை இளைஞர்கள் மனதில் ஏற்படுத்துவதற்காகவே கல்லூரியின் முதல்வர் பதவியையும் 2008 இல் விட்டுவிட்டேன்.

நான் கல்லூரியில் பேராசிரியராக வேலை செய்தபோது, மாணவர்களுடன் ஆசிரியர் போல பழகமாட்டேன். உடன் பிறந்த சகோதரர்களைப் போலவே அவர்களுடன் பழகுவேன். வகுப்பு எடுப்பது ஒரு மணி நேரம் என்றால், 40 நிமிடங்கள் பாடத்தை நடத்திவிட்டு, 20 நிமிடங்கள் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்காகப் பேசுவேன்.

என்னிடம் பயின்ற பல மாணவர்கள் படிப்பை முடித்ததும், ஐடி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

""நீங்கள் நல்லநிலைக்கு வந்ததும் உங்களுடைய சம்பாத்தியத்தில் எனக்கு ஒரு கப் காபி வாங்கித் தர வேண்டும்; எனக்கு அது போதும்'' என்று அவர்களிடம் சொல்வேன். இதை நினைவில் வைத்துக் கொண்டு, என்னுடைய பழைய எம்சிஏ மாணவர்கள் சென்னைக்கு என்னை அழைத்து மரியாதை செய்தார்கள். அப்போது அவர்கள் என்னிடம், ""உங்களிடம் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் படித்த நாங்கள் இந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். நீங்கள் பள்ளி ஆசிரியராக எங்களுக்கு இருந்திருந்தால் நாங்கள் எல்லாரும் ஐஏஎஸ் படித்திருப்போம். இன்னும் பெரிய பதவிகளுக்குப் போயிருப்போம். எனவே நீங்கள் நிறைய மாணவர்களைச் சந்திக்க வேண்டும்'' என்றார்கள்.

அவர்கள் சொன்னது என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

ஒரு கல்லூரியில் முதல்வர் பதவியில் இருந்தால் நூற்றுக்கணக்கான மாணவர்களையே சந்திக்க முடியும். நிறைய மாணவர்களைச் சந்திக்க வேண்டும் என்றால் கல்லூரி வேலையை விட்டுவிட வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

ஏற்கெனவே நான் கல்லூரியில் வேலை செய்தபோது பல கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்கள் மத்தியில் பேசிய அனுபவங்கள் நிறைய இருந்தன. அதுபோல நிறைய கல்லூரிகளை ஒன்றிணைத்து விழாக்களை நடத்திய அனுபவங்களும் இருந்தன. அப்படி நடந்த ஒரு கல்லூரி விழாவில்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைச் சந்தித்தேன். அவருடைய ஆலோசகர் பொன்ராஜின் அறிமுகமும் எனக்குக் கிடைத்தது. அப்துல்கலாம் அப்போது என்னிடம் ""நீங்கள் 2020 க்குள் 20 லட்சம் மாணவர்களைச் சந்திக்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார். கல்லூரி முதல்வராக இருந்தால் அது சாத்தியமா?

எனவே கல்லூரி முதல்வர் பணியை விட்டுவிட்டு முழுநேரமாக இளைஞர்களைச் சந்திப்பதையே என் பணியாகச் செய்து வருகிறேன். பள்ளிகள், கல்லூரிகள், ஐஏஎஸ்,ஐபிஎஸ் பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள் என எல்லா இடங்களிலும் மாணவர்களைச் சந்தித்துப் பேசி வருகிறேன்.

மாணவர்களிடம் தன்னம்பிக்கையுடன் இருங்கள் என்று சொன்னால் மட்டும் போதாது. எனது பேச்சு அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அதேசமயத்தில் அவர்களுடைய முன்னேற்றத்துக்கான தேவையை நிறைவு செய்ய உதவுவதாகவும் இருக்க வேண்டும். எனவே உலகில் பலதுறைகளிலும் இன்று என்ன முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன? என்ன புதிய மாறுதல்கள் வந்திருக்கின்றன? என்பதைத் தெரிந்து கொண்டு மாணவர்களுக்குச் சொல்கிறேன். சாஃப்ட்வேரில் புதிய தொழில்நுட்பம் எது? விவசாயத்துறையில் இன்றைய புதுமைகள் எவை? அதற்கு ஏற்ப மாணவர்கள் எப்படித் தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும்? போட்டி நிறைந்த உலகில் இந்திய இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்புகளை வெல்வது எப்படி? என்று சொல்லிக் கொடுக்கிறேன். பாடத்தில் ஒரு மாணவர் 90 -95 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால் மட்டும் போதாது; சேரப் போகிற வேலையில் 30 சதவீதம் நடைமுறை அனுபவமும் வேண்டும். அதைத்தான் பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. அதற்கு இளைஞர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் எப்படிப்பட்ட திறமை உள்ள மாணவர்களை எதிர்பார்க்கிறார்களோ, அப்படிப்பட்ட திறமை உள்ளவர்களை நான் அடையாளம் கண்டு அவர்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையின் தலைவராக ஆவது எப்படி? என்று 5 நாள் நிகழ்ச்சியை இப்போது நடத்தி வருகிறேன்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.