

""ஏறத்தாழ 4 ஆயிரம் இளைஞர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். "ராட்டினம்' திரைப்படத்தின் கதாநாயகன் லகுபரன், "அஞ்சாதே', "முரண்' ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் அருண் துரைராஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஹேமா ஆகியோர் எங்களது பட்டறையில் படித்த மாணவர்கள்.
""கண் தெரியாத பலூன் வியாபாரியிடமிருந்து ஒருவர் பணத்தைத் திருடுகிறார். அடுத்த நாளும் இது நடக்கிறது. மூன்றாம் நாள் கையைப் பிடித்துக் கொண்டார் பலூன் வியாபாரி. கையோடு பத்து ரூபாயைக் கொடுத்து அனுப்புகிறார். அடுத்த காட்சியில் அந்தத் திருடன் பலூன் விற்றுக் கொண்டு செல்கிறார்''
இரண்டு நிமிஷங்களில் முடிகிறது இப்படியொரு குறும்படம். சேலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆறுநாள் பயிற்சிக்குப் பிறகு, அரைநாளில் எடுத்த படம் இது!
நிழல் மற்றும் பதியம் ஆகிய அமைப்புகள் இணைந்து திருச்சியில் ஆறு நாட்கள் நடத்திய குறும்படப் பயிற்சிப் பட்டறையில் மலர்ந்த 7 படங்களில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட ஒன்றுதான் இந்த "இருளில் ஓர் வெளிச்சம்'.
50 இளைஞர்கள் இந்தப் பயிற்சியை முடித்திருக்கிறார்கள். நடிப்பு, ஒப்பனை, ஒளி அமைப்பு, கதை- திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு ஆகிய வகுப்புகளுக்குப் பிறகுதான் இந்த இளைஞர்கள் குழுக்களாகப் பிரிந்து 7 குறும்படங்களை எடுத்துள்ளனர்.
"நடிப்புப் பயிற்சி பெற வந்தேன்; இப்போது படம் இயக்குவதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறேன்' என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஜெ. குருபாரத் ராஜா. இவர் உள்ளிட்ட குழு எடுத்த குறும்படம் "இதுவும் கடந்து போகும்'.
"அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்ஏ இதழியல் படிப்புக்கான ஒரு பகுதியாக குறும்படம் தயாரிப்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்துடன் வந்தோம்; இப்போது முழுவதும் திரைத்துறையே எங்களை ஆக்கிரமித்துள்ளது' என்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த பி. திவ்யபாரதி.
"சாதாரண கிராமப்புற இளைஞனுக்கும் திரைப்படத் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொடுக்கும் முயற்சியில்தான் திருச்சியில் 40ஆவது பயிற்சிப் பட்டறையை நடத்தியிருக்கிறோம்' என்கிறார் நிழல் ப. திருநாவுக்கரசு.
பயிற்சி பற்றி அவர் மேலும் கூறியது:
""ஏறத்தாழ 4 ஆயிரம் இளைஞர்கள் இந்தப் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். "ராட்டினம்' திரைப்படத்தின் கதாநாயகன் லகுபரன், "அஞ்சாதே', "முரண்' ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளர் அருண் துரைராஜ், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஹேமா ஆகியோர் எங்களது பட்டறையில் படித்த மாணவர்கள்.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் திரைப்படங்கள், குறும்படங்கள் பயிற்சிக்காக லட்சக்கணக்கில் கட்டணமாக வாங்குகிறார்கள். எங்கள் பட்டறையில் ஆறு நாட்களுக்கு உணவு, தங்குமிடம் சேர்த்தே ரூ. 3 ஆயிரம்தான். அடுத்த பயிற்சியை பிப்ரவரி மாதம் நடத்தவிருக்கிறோம்'' என்கிறார் திருநாவுக்கரசு.
"நிழல்' என்ற திரைப்பட காலாண்டிதழை நடத்தி வரும் திருநாவுக்கரசு, திரைப்படப் பயிற்சி தொடர்பாக சில நூல்களையும் எழுதியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.