நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை நான் ஐஏஎஸ்! எப்படிக் கேட்பார்கள்? எப்படி பதிலளிக்க வேண்டும்?

ஒரு பறவை பல திசைகளிலும் பறக்கிறது. பல மரங்களிலும் அமர்கின்றது. ஆனால் எல்லா மரங்களிலும் கூடு கட்டிவிடுவதில்லை.

News image
Updated On :20 அக்டோபர் 2015, 9:25 am

மு.சிபிகுமரன்

ஒரு பறவை பல திசைகளிலும் பறக்கிறது. பல மரங்களிலும் அமர்கின்றது. ஆனால் எல்லா மரங்களிலும் கூடு கட்டிவிடுவதில்லை. தனக்கென்று ஒரு கூடு அமைத்திட அப்பறவை விரும்பும்போது அதற்குத் தகுதியான மரத்தினைத் தேடுகிறது. பின் தேர்வு செய்கிறது. அதில் கூடு அமைப்பதற்கு ஏதுவான பாதுகாப்பான இடத்தினை முடிவு செய்கிறது. திட்டமிடுகிறது.

மெல்லிய குச்சிகள், நார்கள், சற்று தடிமனான குச்சிகள் என கூட்டின் கட்டுமானப் பொருட்களை கவனமுடன் சேகரிக்கின்றது. தனது அலகுகளைக் கொண்டு நுணுக்கமாக இணைத்து, தொடுத்து, அடுக்கி, கூட்டினை ஆர்வமாய் அமைக்கிறது. அழகுற வாழ்கிறது.

நாமும் அப்படித்தான். நாம் எட்டுத்திக்கும் செல்லலாம். ஏதோ ஒரு வேலையைப் பார்க்கலாம். அவ்வாறில்லாமல் பறவை மரத்தினைத் தேர்வு செய்ததுபோல நமக்குப் பொருத்தமான, விருப்பமான குடிமைப்பணிக்குச் செல்வதை இலட்சியமாகக் கொள்கிறோம்.

பறவை கூட்டினை அமைத்திட எப்படி பல தரத்திலான மூலப்பொருட்கள் தேவைப்படுகின்றனவோ அதைப்போல நமக்கும் இலட்சியத்தினை அடைய நடப்பு நிகழ்வுகளைக் கவனமாக உள்வாங்குவதுடன் பலவகையான உலகியல் அறிவையும் சேகரித்தல் வேண்டும். அறிவைச் சேகரித்தால் மட்டும் போதாது, பறவை எவ்வாறு நுணுக்கமாகத் தொடுக்கவும், இணைக்கவும் செய்கிறதோ, அதுபோல நாமும் படித்தவற்றைச் சரியான இடத்தில் பயன்படுத்தி அதனைத் தொடுத்தும், இணைத்தும் கட்டமைத்திட வேண்டும். அப்படி செய்தால்தான் சிறிய சிறிய துரும்புகளையும் குச்சிகளையும் கொண்டு இலட்சியக் கூடமைத்து சிறகு விரிக்கும் பறவையைப் போல நாமும் குடிமைப்பணித் தேர்வுகளில் வெற்றிச் சிறகை விரிக்கலாம்.

நாம் சமீப காலமாக ஒரு செய்தியைத் தொடர்ந்து நாளிதழ்களில் பார்க்கிறோம். அச்செய்தி என்னவென்றால் "இந்தியாவுக்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் (UNSC) நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கிட வேண்டும்' என்பதே.

பல ஆண்டுகளாக இந்தக் கோரிக்கை அவ்வப்போது தோன்றி மறைகின்றது. தற்போது இதனை மற்றொரு வடிவத்தில் இந்தியா அணுகி வருகின்றது. எவ்வாறென்றால் ஜி-4 லீடர்ஸ் (G-4 LEADERS) என்ற பெயரில் நான்கு நாடுகளின் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் இந்தியா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த 4 நாடுகளுக்கும் பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பினர் தகுதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னிலும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றது. இந்த நான்கு நாட்டின் தலைவர்களும் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நியூயார்க் நகரில் சந்தித்து இதுபற்றி பேசியுள்ளனர். இவர்கள் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை சீர்திருத்தப்பட வேண்டும் என்றும், தங்கள் நாடுகளுக்கு நிரந்தர உறுப்பினர் தகுதி வேண்டும் என்றும் கோரியுள்ளனர். இதனை மையப்படுத்தி ஒரு வினாவினை இந்தியக் குடிமைப்பணிகள் தேர்வில் இதைப் போலவோ அல்லது வேறொரு வடிவிலோ கேட்கலாம்.

"ஐக்கிய நாடுகள் சபை சீரமைக்கப்பட வேண்டுமா?' என்றும், "ஐக்கிய நாடுகள் சபை ஏன் சீரமைக்கப்பட வேண்டும்?' என்றும், "ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு அவையில் கூடுதலான நாடுகள் இடம் பெறுவதால் விளையும் நன்மை தீமைகளை ஆய்க' என்றும்"Reformation of UN Security Council - Comment'  (250 Words) என்றும் கேட்கலாம்.

இந்த வினாவுக்கான பதிலை நாம் எழுதும்போது, நாம் இந்தியாவை முன்னிலைப்படுத்தாமல் பொதுவான கருத்துக்களை முன்வைத்து எழுதிட வேண்டும்.எடுத்துக்காட்டாக, கீழ்க்கண்டவாறு எழுதலாம்:

"ஐக்கிய நாடுகள் அவை 1945ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டபோது 51 நாடுகள் உறுப்பு நாடுகளாக இருந்தன. தற்போது 70 ஆண்டுகள் நிறைவுற்ற வேளையில் 193 உறுப்பு நாடுகளைக் கொண்டதாய் ஐக்கிய நாடுகள் சபை விரிவடைந்துள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு அவை விரிவுபடுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வருகிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் யு.எஸ் (US), ரஷ்யா, யு.கே (UK), பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய ஐந்து நாடுகள் "ரத்து அதிகாரம்' (VETO POWER) என்ற சிறப்பு அதிகாரத்தினை அன்று பெற்றிருந்தன.

உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை ஏறத்தாழ 4 மடங்கு அதிகரித்துவிட்டபோதும் அதே 5 நாடுகள் மட்டுமே இன்றும் ரத்து அதிகாரத்தினை கையில் வைத்துக்கொண்டுள்ளன.

அரசியல், பொருளாதாரம், மக்கள்தொகைப் பெருக்கம், சமூகம் ஆகிய துறைகளில் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் கடந்த 70 ஆண்டுகளில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார வீழ்ச்சி உலக நாடுகள் அனைத்திலும் பிரதிபலிக்கின்றது.

உலக நாடுகளுக்குள் புவிசார் அரசியல் தன்மையுள்ள (Geopolitics) போட்டிகள் காரணமாக தீர்வு காணமுடியாத பல்வேறு பிரச்சனைகள் உருவாகியுள்ளன. அவை அப்பாவி மக்களின் உயிருக்கும், பொருளாதாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பேரழிவையும் ஏற்படுத்தி வருகின்றன.

சமீபத்தில் சிரியா நாடு சந்தித்துவரும் சீரழிவு இதற்கு மிகப்பெரும் சான்றாகும். இது சம்மந்தமாக ஐ.நா- வின் பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வெளியிட்டுள்ள "சிரியா விவகாரத்தில் ஐ.நா. பாதுகாப்பு அவை தவறிவிட்டது' என்ற அறிக்கை அப்பாவி மக்களின் பாதுகாப்பின் பின்னடைவையும், கையறுநிலையையும் காட்டுகிறது.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் அனைத்து நாடுகளின் குரலுக்கும் மதிப்பளிக்கும் நிலை ஏற்பட வேண்டும். அப்படி ஏற்பட்டால்தான் தீர்வு காண முடியாத பல்வேறு சர்வதேச பிரச்னைகளின் உண்மை நிலையை அறிந்திட முடியும். தீர்வுக்கான வழி காண முடியும்.

ஆனால் பாதுகாப்பு அவையின் பலமிக்க நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் பாதுகாப்பு அவையை விரிவுபடுத்துவதைத் தொடர்ந்து தடுத்தே வருகின்றன. இந்நாடுகளின் சர்வாதிகாரப் போக்கு இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சவால்களைச் சந்தித்து உலக மக்களை பேரழிவு மற்றும் பேரழிவிலிருந்து மீட்டெடுக்கத் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பின் நோக்கங்களை நீர்த்துப் போகச் செய்வதாக உள்ளது.

எனவே, பெருகி வரும் சர்வதேச பிரச்சனைகள், பேரழிவுக்கான ஆயுதங்கள், தொழில்நுட்ப வளர்ச்சி, மற்றும் அதிகரிக்கும் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்குத் தக்கவாறு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு அவை மறுசீரமைக்கப்பட வேண்டும்'

இவ்வாறு அந்தக் கேள்விக்கான பதிலை எழுதலாம்.

அடுத்து..

"ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையில் இந்தியா நிரந்தர உறுப்பினராகும் தகுதிநிலை' - ஆய்க.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.