மாறி வரும் கணினி வரைகலை!
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால்... நாளிதழில் வெளியிடவேண்டிய விளம்பரம் ஒன்றை உருவாக்குவதற்காக, புகைப்படக் கலைஞர்,


சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால்... நாளிதழில் வெளியிடவேண்டிய விளம்பரம் ஒன்றை உருவாக்குவதற்காக, புகைப்படக் கலைஞர், ஓவியர், அச்சகம் ஒன்றில் பணிபுரிந்த அச்சுக்கோர்ப்பவர், அச்சடிப்பவர், அச்சிட்ட காகிதங்களில் தேவையானவற்றை வெட்டி, ஓர் அட்டையில் ஒட்டி முழு வடிவமைப்பை உருவாக்கிய லே அவுட் ஆர்ட்டிஸ்ட் என்பது போன்ற பல திறமையான, பட்டறிவுமிக்க, தொழில் முறை பணியாளர்களின் உழைப்பு தேவைப்பட்டது.
எண்பதுகளின் இறுதியில் கணினி தொழில்நுட்பம் வரைகலைப் பகுதிக்கான கணினிகளை உருவாக்கிக் கொடுத்த பிறகு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
மேசை மேல் வைக்கப்பட்டிருக்கும் கணினி என்ற மின்னணுக் கருவி அளப்பரிய வேலைகளைச் செய்து கொடுத்தது. இவ்வளவுக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மேசைக் கணினியில் அந்தக் காலத்தில் (1985) "ஆல்டஸ் பேஜ்மேக்கர்' என்ற ஒரு மென்பொருள் மட்டுமே பதியப்பட்டிருந்தது. பேஜ்மேக்கர் மென்பொருளின் முதல் பதிப்பான அதிலோ, அன்றைக்கு வெறும் 7 எழுத்துருக்கள் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் அந்த எழுத்துருக்கள் 4 முதல் 250 பாயின்டுகள் வரையிலும் தேவையான அளவிற்கு, எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் கிடைத்தது மிகவும் வியப்புக்குரியதாகவே கருதப்பட்டது.
ஆல்டஸ் என்ற நிறுவனத்தால் உருவாக்கித்தரப்பட்ட இந்த பேஜ்மேக்கர் 4 வது பதிப்பு வெளியானபிறகு, அந்த நிறுவனத்தை அடோபி நிறுவனம் கையகப்படுத்திவிட்டது. இதனால் ஐந்தாவது பதிப்பு அடோபி பேஜ்மேக்கராக வெளிவந்து அதன் 7வது பதிப்புடன் நிறுத்தப்பட்டுவிட்டது. தற்போதும் புழக்கத்தில் இருந்தாலும், புதிய, குறைபாடுகளற்ற பதிப்பு வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டுவிட்டது. காரணம், அடோபி நிறுவனம் பேஜ்மேக்கருக்கு மாற்றாக, தனது சொந்தப்படைப்பான இன்டிசைன் என்ற மென்பொருளை விற்பனைக்குக் கொண்டுவந்ததேயாகும்.
தொடக்க காலங்களில் படங்கள் உருவாக்குவதற்கு அடோபி நிறுவனத்தின் இல்லஸ்ட்ரேட்டர், போட்டோ ஷாப் போன்ற மென்பொருட்கள் சற்று தாமதமாக, முறையே 1987, 1989ஆம் ஆண்டுகளில்தான் விற்பனைக்கு வந்தன. படங்களையும் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பக்க வடிவமைப்பிற்காக, குறிப்பாக இதழ்கள் வடிவமைப்பிற்காகத் (1992ஆம் ஆண்டு) தனது மூன்றாவது பதிப்பை, ஐபிஎம் வகைக் கணினிகளுக்காக வெளியிட்ட "க்வார்க் எக்ஸ்பிரஸ்' என்ற மென்பொருளே பயன்படுத்தப்பட்டது.
தற்போது கணினி வரைகலைக்காக பல்வேறு மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன. பக்க வடிவமைப்பிற்கும் ஓரளவு எளிமையான படங்களை வரைந்து பயன்படுத்துவதற்கும் அடோபி இன்டிசைன் சிசி, சிறப்பான முறையில் வெக்டார் வகைப் படங்களை வரைவதற்கு அடோபி இல்லஸ்ட்ரேட்டர் சிசி மற்றும் கோரல் டிரா எக்ஸ்8, ராஸ்டர் வகைப்படங்களை வரைவதற்கும் எண்ம வகைப் புகைப்படங்களைக் கையாளுவதற்கும் அடோபி போட்டோஷாப் சிசி போன்ற மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த மென்பொருட்களின் செயல்பாடுகளும், விளைவுகளும் கற்பனைக்கு எட்டாத அளவில், நமது தேவைகளும், செயல்படும் நிலையுமே எல்லையாக உள்ளபடியாக வளர்ந்து, எல்லா துறைகளுக்கும் தேவையான வசதிகளுடன் உருவாக்கித் தரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...