நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாளை நான் ஐஏஎஸ்! நேர்முகத் தேர்வை எதிர்கொள்ள...!

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டன.

News image
Updated On :29 பிப்ரவரி 2016, 12:32 pm

மு.சிபிகுமரன்

2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இந்தியக் குடிமைப்பணித் தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டன.

இந்தியா முழுவதிலும் இருந்து இம்முதன்மைத் தேர்வினை சுமார் 15 ஆயிரம் தேர்வர்கள் எழுதியிருந்தனர். இவர்களில் 2797 பேர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 150- க்கும் மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

இந்த இடத்தில் குடிமைப் பணிகளுக்கான போட்டித் தேர்வு எழுதும் தேர்வர்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக பெரும் பக்கபலமாக இருந்துவரும் மாநில அரசின் பயிற்சி மையம் பற்றி குறிப்பிடுதல் அவசியம்.

இந்தியக்குடிமைப்பணிகளுக்கு தேர்வர்களைத் தயார்ப்படுத்துவதில் தமிழ்நாடு அரசு நடத்தி வருகின்ற அண்ணா குடிமைப்பணிகள் பயிற்சி மையம் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகிறது. இங்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வுகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாடு அரசு முதன்மைத்தேர்வுக்குத் தயாராகி வரும் தமிழக தேர்வர்களின் நலன் கருதி உணவு, உறைவிடம் மட்டுமின்றி கடந்த 4 ஆண்டுகளாக இதர பாடநூல்கள் செலவிற்காக மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையையும் வழங்கி வருகின்றது.

முதன்மைத் தேர்வினை எழுதும் தேர்வர்கள் பெரும்பாலும் சென்னையில் தங்கியிருந்து தேர்வுக்கான பயிற்சியினை மேற்கொள்வர். அந்த வகையில் நடந்து முடிந்த முதன்மைத் தேர்வுக்கும் தமிழ்நாடு அரசு நடத்திவரும் குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில் ஏறத்தாழ 250 தேர்வர்கள் முதன்மைத் தேர்வுக்கு தயாராகி வந்தனர்.

இச்சூழலில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் தமிழ்நாடு வரலாறு காணாத பேரிடரை எதிர்கொண்டது. இதனால் தேர்வுக்குத் தயாராகி வந்த தேர்வர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாயினர்.

இதையொட்டி முதன்மைத் தேர்வினை குறைந்தபட்சம் ஒரு மாதமேனும் தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்தக் கோரிக்கைகள் தேர்வாணையத்தால் நிராகரிக்கப்பட்டு முன்னர் அறிவித்தபடியே 18.12.2015 இல் குடிமைப்பணிகளுக்கான முதன்மைத் தேர்வு தொடங்கிவிட்டது.

இத்தகைய இக்கட்டான நிலையிலும் தமிழ்நாட்டினைச் சேர்ந்த தேர்வர்கள் மிகுந்த மனவுறுதியோடு தேர்வினை எதிர்கொண்டனர். இத்தேர்வின் முடிவுகள் மூலம் இத்தேர்வர்களின் கடினமான உழைப்பிற்கு போதிய பலன் கிடைத்துள்ளது என்று கருதலாம்.

இவ்வாறு பல்வேறு சோதனைகளைக் கடந்து நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் தேர்வர்கள் தங்களின் இறுதிக்கட்ட முயற்சியிலும் வெற்றி பெற வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமும், எதிர்பார்ப்பும் ஆகும்.

குடிமைப்பணிகளுக்கான நேர்முகத்தேர்வில் (PERSONALITY TEST) பொதுவாக வினாக்கள் ஆங்கிலத்தில் கேட்கப்படுகின்றன. தமிழ்வழியில் நேர்முகத்தேர்வை எதிர்கொள்ள ஒரு தேர்வர் விரும்பினார் என்றால் அதனை அவர் முதன்மைத்தேர்வுக்கான விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.

அத்தகைய தேர்வர்கள் நேர்முகத் தேர்வு செல்லும்போது தேர்வுக்குழுவில் மொழிபெயர்ப்பாளர் ஒருவரும் இடம் பெற்றிருப்பார். அவர் தேர்வரின் தாய்மொழியில் வினாவினை மொழிபெயர்த்துக் கூறுவார். தேர்வர் கூறும் பதிலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தேர்வுக்குழுவுக்கு எடுத்துரைப்பார்.

தமிழ்நாட்டில் குடிமைப்பணித்தேர்வினை எழுதும் தேர்வர்கள் குறிப்பாக தமிழ் வழியிலேயே முதன்மைத் தேர்வினை எழுதும் தேர்வர்கள் கூட நேர்முகத்தேர்வினை ஆங்கிலத்தில் எதிர்கொள்வதே சிறப்பானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

நேர்முகத்தேர்வுக்குச் செல்லும் தேர்வர்கள் தங்களைச் சீரிய முறையில் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். கேட்கப்படும் வினாக்களுக்கு நேர்மறையான அணுகுமுறை கொண்ட பதில்களும், உடல் மொழியும் தேர்வரின் வெற்றிக்கு வலுசேர்ப்பதாக அமையும்.

பொதுவாக பதில்கள் இரத்தினச் சுருக்கமாக 2 மூன்று வாக்கியங்களுக்கு மிகாமல் இருத்தல் சிறப்பு. இத்தேர்வர்களுக்காக நேர்முகத் தேர்வில் தொடர்ச்சியாகக் கேட்கப்படும் அடிப்படையான கேள்விகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

எதற்காக நீங்கள் இந்தியக்குடிமைப்பணிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுகிறீர்கள்?

சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டுமென நினைத்தால் நீங்கள் ஒரு சமூக சேவகராக இருந்து கூட செய்யலாமே, ஏன் குடிமைப்பணிகளைத் தேர்வு செய்கிறீர்கள்?

ஏன் குடிமைப்பணிகளில் சேர விரும்புகின்றீர்கள்? அரசியலில் சேர ஏன் விரும்பவில்லை?

நீங்கள் தற்போது பெறுகின்ற அல்லது பிற நிறுவனங்கள் வழங்கும் ஊதியத்தை விட குறைவான ஊதியமே குடிமைப்பணிகளில் தொடக்க காலங்களில் கிடைக்கும். இருந்தும் இதனைத் தேர்வு செய்யக் காரணம் என்ன?

குடிமைப்பணிகளில் 23 வகையான பணிகள் உள்ளன. அதில் ஏன் இந்திய ஆட்சிப்பணிக்கு நீங்கள் முன்னுரிமை கொடுத்துள்ளீர்கள்?

நீங்கள் ஒரு பொறியியல் துறை மாணவராக இருந்தும் கலையியல் பாடத்தினை விருப்பப்பாடமாகத் தேர்வு செய்ததன் காரணம் என்ன?

தேர்தல்களில் ஊடகங்களின் பங்கு குறித்து உங்களது கருத்து என்ன?

நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் ஊடகங்களின் தலையீடு பற்றியும், தீர்ப்புகளின் மேல் அவை செலுத்தும் ஆதிக்கம் பற்றியும் உங்களுடைய கருத்து என்ன?

சமூக வலைத்தளங்கள் பொதுமக்களிடம் ஏற்படுத்திவரும் தாக்கம் பற்றிக் கூறுங்கள்.

சமூக வலைத்தளங்களால் உருவாகும் நன்மை தீமைகள் குறித்துக் கூறுங்கள்.

தீவிரவாதம், அடிப்படைவாதம், போருக்கான மனோபாவம், ஆட்சியை எதிர்க்கும் கிளர்ச்சி, ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடுகளைக் கூறுங்கள்

இவற்றைக் கையாளுவதற்கு இந்திய அரசில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் பற்றிக் கூறுங்கள்.

தீவிரவாதத்தின் மீது இந்தியா மென்மைப் போக்கினைக் கையாளுகிறதா?

இந்திய-சீன வளர்ச்சி நிலைகளை ஒப்பிட்டுக் கூறுங்கள். வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்குப் போதுமான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறதா?

இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் வளர்ச்சிக்கான பாதையில் நல்ல உறவு நிலைகளைத் தொடர்கின்றனவா?

சார்க் அமைப்பு பற்றி உங்களின் கருத்து என்ன?

உங்கள் பிறந்த தினம், ஆண்டு பற்றிய சிறப்புகள் ஏதேனும் இருக்கிறதா?

உங்கள் பெயருக்கான அர்த்தம் ஏதேனும் இருந்தால் கூறுங்கள்.

உங்களின் விருப்பமான பொழுதுபோக்குகள் எவை?

இது உங்களின் விருப்பமான பொழுது போக்காக இருப்பதற்கான காரணம் என்ன?

உங்களின் பிறந்த இடம், நகரம் எது? அந்த இடத்திற்கு சிறப்பு ஏதேனும் உண்டா?

உங்கள் மாநிலத்தின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு நிலைகள் பற்றிக் கூறுங்கள். (இக்கேள்வி பல்வேறு வகைகளில் பிரித்துக் கேட்கப்படும்)

இன்றையச் சூழ்நிலையில் நீர்மேலாண்மையின் முக்கியத்துவம் என்ன?

திருமண பந்தங்கள், சாதி அமைப்புகள், விவாகரத்து, வரதட்சணை, பெண்களுக்கெதிரான வன்முறைகள் இவை தொடர்பான சட்டங்கள் எவை (இந்த வினா பல வினாக்களாகப் பிரித்துக் கேட்கப்படும்)

கல்வி உதவித்தொகை பெற்றுள்ளீர்களா? விருதுகள் ஏதேனும் வென்றுள்ளீர்களா? விளையாட்டுத்துறையில் ஆர்வம் உண்டா? பங்கெடுத்துள்ளீர்களா? (கிளை வினாக்கள் உருவாக வாய்ப்புள்ள கேள்வி)

இந்திய விவசாயம் மற்றும் பருவமழைகள் பற்றிக் கூறுங்கள்.

விவசாயக் கடன்கள், பயிர்வகைகள், வித்துக்கள் மற்றும் விவசாயிகளின் நிலை பற்றிக் கூறுங்கள். (பல வினாக்கள் உள்ளடங்கியுள்ளன) இந்த வினாக்கள் குடிமைப்பணிகளின் நேர்முகத்தேர்வுக்கு எப்போதும் பொருந்தக் கூடியனவாகும்.

சுய விவரங்களில் இருந்து நேர்முகத்தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் எவ்வாறு இருக்கும் என்பதனைத் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.