

"புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?' என்ற பழமொழி உண்டு. அதை மெய்ப்பிப்பது போல, நோபல் பரிசு பெற்ற இயற்பியல் மேதை சர்.சி.வி.ராமனின் மகனும் உலக அளவில் புகழ் பெற்ற விஞ்ஞானியாகத் திகழ்ந்தார்.
பிரபல விஞ்ஞானியின் மகனாக இருந்தபோதும், அதை அவர் ஒருபோதும் தனது முன்னுரிமையாகக் காட்டிக் கொண்டதில்லை. அவர்தான் விண்வெளி விஞ்ஞானியான வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன்.
சென்னையின் தண்டையார்பேட்டையில் 1929 மே 18-இல் வெங்கட்ராமன்- லோகசுந்தரி தம்பதியின் மகனாக ராதாகிருஷ்ணன் பிறந்தார். அவரது பள்ளிக்கல்வி சென்னையில் கழிந்தது.
மைசூரு பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பி.எஸ்சி. (ஹானர்ஸ்) பட்டம் பெற்ற ராதாகிருஷ்ணன், பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் ஆராய்ச்சியாளராக இணைந்தார். பிறகு உலக அளவில் புகழ் பெற்ற பல நிறுவனங்களில் ஆய்வாளராக விளங்கினார்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்கோ டொமினிக் என்ற பெண்ணை ராதாகிருஷ்ணன் மணம் புரிந்தார். இவர்களுக்கு விவேக் என்ற மகன் உண்டு.
ஸ்வீடனின் கோதன்பர்கிலுள்ள சால்மர்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், மின்காந்த அலைகள் (வானொலி அலைகள்- Radio Waves) மூலமாக விண்வெளியை ஆராயும் குழுவில் இணைந்தார். அங்கு 1955 முதல் 1958 வரை பணியாற்றிய அவர், வியாழன் கோளை ஒட்டிய பட்டைகளிலிருந்து வெளியாகும் மின்காந்த அலைகளைக் கண்டறிந்தார் (1958).
பிறகு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி உதவியாளராகச் சேர்ந்தார். அடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள காமன்வெல்த் அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பின் (CSIRO) வானொலி அலை இயற்பியல் துறையில் முதுநிலை விஞ்ஞானியாகச் சேர்ந்து தலைமை விஞ்ஞானியாக உயர்ந்தார். அவரது ஆய்வறிக்கைகள் சர்வதேச விண்வெளி இயற்பியல் சஞ்சிகைகளில் வெளியாகின.
நியூட்ரான் விண்மீன்கள் (Pulsars), பால்வெளியிலுள்ள மின்காந்த அலைகள், திரவப் படிகவியல் (Liquid Crystals) குறித்த ஆய்வுகளில் அவர் ஈடுபட்டார்.
விண்வெளியைக் கண்களால் காணும் அதிநவீன தொலைநோக்கிகளால் ஆராய்வது போலவே, மின்காந்த அலைகளால் ஆராய்வதும் முக்கியமான துறையாக வளர்ந்துள்ளது (Radio Astronomy). இத்துறையை இந்தியாவில் வளர்த்தெடுத்தவராக ராதாகிருஷ்ணன் மதிக்கப்படுகிறார்.
இவரது தந்தையால் பெங்களூரில் நிறுவப்பட்டது ராமன் ஆராய்ச்சிக் கழகம் (Raman Research Institute). 1972 முல் 1994 வரை ராமன் இன்ஸ்டிட்யூட்டை வழிநடத்திய அவர், பலதுறைகளில் ஆராய்ச்சிகளை வளர்த்து, பல விஞ்ஞானிகளை உருவாக்கினார். விண்வெளியியலில் ஆராய்ச்சிகளைத் தீவிரப்படுத்தினார். திறமையான விஞ்ஞானிகளைக் கண்டறிதல், அவர்களை ஊக்குவித்தல், தோழமையாக வழிநடத்துதல் மூலமாக, மிகக் குறுகிய காலத்தில் அந்நிறுவனத்தை நிலைநிறுத்திய ராதாகிருஷ்ணன், அதன் தன்னாட்சியையும் காத்தார்.
அவரது முயற்சியால், 10.4 மீட்டர் மி.மீ. அலைநீள ரேடியோ ஆன்டனா நிறுவப்பட்டது. அது வானொலி அலை மூலமான விண்வெளி ஆராய்ச்சிக்கு உறுதுணையானது. இந்திய விண்வெளி இயற்பியல் கழகத்துடன் இணைந்து, குறைந்த அலைவரிசை கொண்ட வானொலிஅலை வான் கண்காணிப்பகங்களை (ரேடியோ தொலைநோக்கி) கெüரிபிதனூரிலும் மொரீசஸிலும் நிறுவினார். இந்தக் கருவிகள் விண்மீன்களிடையிலான தொலைவு, அவற்றில் நிகழும் மாற்றங்களை ஆராய்கின்றன.
1994-இல் ஓய்வு பெற்ற போதும், ராமன் இஸ்ன்ஸ்டிட்யூட்டின் கெüரவப் பேராசியராக அவர் செயல்பட்டு வந்தார். ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகம் அவருக்கு 1996-இல் அவருக்கு கெüரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தான் பயின்ற பி.எஸ்சி. படிப்பு தவிர அவர் பெற்ற ஒரே பட்டம் அது மட்டுமே. பட்டங்களை விட செயல்முறை ஆராய்ச்சிகளின் மீதே அவரது கவனம் குவிந்திருந்தது.
சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் (1988- 1994) சர்வதேச வானொலி அலைகள் அறிவியல் சங்கத்தின் ஒரு குழுவுக்கு தலைவராகவும் (1981- 1984) ராதாகிருஷ்ணன் இருந்துள்ளார்.
பல்வேறு சர்வதேச அறிவியல் அமைப்புகளில் அவரது பங்களிப்பு வரவேற்கப்பட்டது. நெதர்லாந்தில் ரேடியோ வானியல் நிறுவனத்தில் வெளிநாட்டுப் பேராசிரியராக அவர் பணியாற்றியுள்ளார். ஆஸ்திரேலியாவின் தேசிய தொலைநோக்கி குழு, அமெரிக்காவின் கிரீன்பாங்க் ரேடியோ தொலைநோக்கி போன்ற அமைப்புகளிலும் அவர் பணியாற்றியுள்ளார்.
மிகவும் எடை குறைந்த விமானம், படகுகள் கட்டுவதிலும் அவர் திறன் மிகுந்தவராக இருந்தார். தானே வடிவமைத்த படகில் அவர் நீண்ட கடற்பயணமும் மேற்கொண்டிருக்கிறார்.
80-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள ராதாகிருஷ்ணன், ஸ்வீடன் ராயல் அறிவியல் மன்றத்திலும், அமெரிக்க தேசிய அறிவியல் அகாதெமியிலும், இந்திய அறிவியல் அகாதெமியிலும் உறுப்பினராகச் செயல்பட்டார்.
உலக அளவில் புகழ்பெற்ற விண்வெளி விஞ்ஞானியாகக் கருதப்படும் வெங்கட்ராமன் ராதாகிருஷ்ணன், 2011, மார்ச் 3-இல், பெங்களூரில் தனது 81-வது வயதில் காலமானார்.
இன்று ராதாகிருஷ்ணனின் அறிவியல் பங்களிப்புகளே அவரது பெயரைப் பறைசாற்றுகின்றன. அதன் பிறகே அவரது பிரபலமான தந்தை சர் சி.வி.ராமனின் பெயர் குறிப்பிடப்படுகிறது. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்பது இதுதானோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.