விண்மீன்களின் வாழ்நாளைக் கணித்தவர்!

விண்வெளியில் லட்சக்கணக்கான விண்மீன்கள் மின்னுகின்றன. அவை அனைத்துமே பல கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளவை.
விண்மீன்களின் வாழ்நாளைக் கணித்தவர்!
Updated on
2 min read

விண்வெளியில் லட்சக்கணக்கான விண்மீன்கள் மின்னுகின்றன. அவை அனைத்துமே பல கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளவை. உண்மையில் ஒவ்வொரு விண்மீனும் சூரியன் போன்ற நெருப்புக்கோளமே. இந்த விண்மீன்கள் தன்னைத் தானே எரித்துக்கொண்டு ஒளியையும் வெப்பத்தையும் உமிழ்கின்றன.

எந்த ஒரு விண்மீனுக்கும்- சூரியன் உள்பட- குறிப்பிட்ட ஆயுள்காலம் உண்டு. ஆனால் மானுட வயதுடன் ஒப்பிடுகையில், நட்சத்திரங்களின் வாழ்நாள் மிக அதிகம் என்பதால் அதை நம்மால் கணக்கிட இயலாது. இருப்பினும், எதையும் சவாலாகக் கருதி ஆய்வில் ஈடுபடும் விஞ்ஞானிகளுக்கு, விண்மீன்களின் தோற்றம், இருப்பு, மறைவு குறித்த விவரங்களை அறிவதில் அலாதி பிரியம்.

குறிப்பாக, விண்வெளி இயற்பியலில் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளோருக்கு, அண்டத்தின் பேரமைப்பு, அதிலுள்ள பால்வெளி, நட்சத்திரக் கூட்டங்கள், கருந்துளைகள், நட்சத்திரங்களின் மாற்றங்கள் தொடர்பான ரகசியங்களை வெளிப்படுத்தும் ஆர்வம் மிகுதி. அத்தகையோருக்கு வழிகாட்டும் அரிய விண்வெளிக் கோட்பாட்டை உருவாக்கி நோபல் பரிசு பெற்றவர், இந்தியாவில் பிறந்த விண்வெளி விஞ்ஞானி சுப்பிரமணியன் சந்திரசேகர்.

பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் (தற்போதைய பாகிஸ்தான்), லாகூரில், 1910, அக். 19-இல் பிறந்தவர் சந்திரசேகர். அவரது சித்தப்பா, இயற்பியலுக்கான நோபல் பரிசு (1928) பெற்ற சர் சி.வி.ராமன்.

1925-இல் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்த சந்திரசேகர் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் (1930) பெற்றார்.

1928-இல் ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானியான அர்னால்டு சம்மர்ஃபெல்ட் மாநிலக் கல்லூரியில் உரையாற்றினார். அவரது உரை சந்திரசேகரின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே ஆண்டில் அவரது சித்தப்பா

சர் சி.வி.ராமன் நோபல் பரிசு பெற்றது, சந்திரசேகரின் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உத்வேகமூட்டியது.

கல்லூரியில் படிக்கும்போது, தனது 19 வயதிலேயே, அரிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புடன் கூடிய ஆராய்ச்சிக் கட்டுரையை சந்திரசேகர் வெளியிட்டார் (1929). ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடு (Theory of Relativity), குவான்டம் கோட்பாடு (Principles of Quantum Physics) ஆகியவற்றைப் பயன்படுத்தி, வானியல் கோட்பாடு ஒன்றை அவர் உருவாக்கியிருந்தார். அந்தக் கோட்பாட்டை நிரூபிக்க சுமார் ஐம்பது ஆண்டுகள் அவர் செய்த தொடர் ஆராய்ச்சியின் பலனாக, விண்மீன்களின் இயல்பை அறிவதற்கான அரிய கோட்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அரசின் கல்வி உதவித்தொகை பெற்று பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சென்ற சந்திரசேகர், அங்கு பி.எச்டி. பட்டம் (1933) பெற்றார்.

அதன்பின் அங்குள்ள டிரினிட்டி கல்லூரியில் நான்காண்டு ஒப்பந்தத்தில் ஆய்வாளராகச் சேர்ந்தார். ஆனால், திடீரென அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவிப் பேராசிரியர் பணி வாய்ப்பு 1936-இல் வந்தது. அதையேற்று அங்கு சென்ற சந்திரசேகர், 1995-இல் தான் இறக்கும் வரை அங்கேயே பணியிலும் ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.

சந்திரசேகர் வரையறை

விண்வெளி இயற்பியலில் முக்கியமான கண்டுபிடிப்பாக, "சந்திரசேகர் வரையறை' (Chandrasekhar limit)) கருதப்படுகிறது. விண்ணிலுள்ள நட்சத்திரங்களின் தோற்றம், மறைவு, கருந்துளைகளின் உருவாக்கம் ஆகியவை பற்றிய தொடர் ஆராய்ச்சிகளுக்கு வழிகாட்டியாக விளங்குவது இக்கோட்பாடாகும்.

நமக்கு மிகவும் அருகிலுள்ள விண்மீனும், பூமியை இயக்குவதுமான சூரியனின் நிறையை (யூக அளவு) அடிப்படை அலகாகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு விண்மீனின் (நட்சத்திரம்) வாழ்நாள், அது எவ்வளவு நிறையை (Mass) கொண்டுள்ளது என்பதைப் பொருத்ததாகும். அதிக நிறை கொண்ட நட்சத்திரம் அதன் உள்ளார்ந்த செயல்பாடுகளால் நொறுங்கி, முடங்கிய நியூட்ரான் நட்சத்திரமாகவோ (Neutron Star), கருந்துளையாகவோ (Black Hole) மாறும்.

சூரியனை விட 8 மடங்கு நிறை குறைந்த அல்லது நடுத்தர நிறை உடைய நட்சத்திரங்களும் இதேபோல, நிறைபொருளான வாயுக்களின் நிலை மாற்றத்தால் சிறுத்து, வெள்ளைக்குள்ளன் (white dwarf) என்ற நிலையை அடைகின்றன.

அதிலும், சூரியனின் நிறையைப் போல 1.44 மடங்கு நிறை கொண்ட நட்சத்திரம் வெண்குள்ளனாக மாற முடியாது. இந்த வரையறைக் கோட்பாட்டை கணித அவதானிப்புகள் மூலமாக சந்திரசேகர் உருவாக்கினார். இதுவே "சந்திரசேகர் வரையறை' ஆகும்.

அமெரிக்க அணுவியல் விஞ்ஞானியான வில்லியம் ஃபெüலர் (1911-1995), விண்மீன்களின் இயக்கத்தில் நிலவும் அணுவியல் மாற்றங்கள் குறித்த கோட்பாட்டை உருவாக்கியவர். அவருக்கும், சுப்பிரமணியன் சந்திரசேகருக்கும் இணைந்து 1983-இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

லண்டன் ராயல் சொûஸட்டியின் உறுப்பினராக சந்திரசேகர் 1944-இல் தேர்வு செய்யப்பட்டார். பசிபிக் விண்ணியல் கழகத்தின் புரூஸ் பதக்கம் (1952), அமெரிக்க அறிவியல் கழகத்தின் ரம்ஃபோர்டு பதக்கம் (1957), அமெரிக்க அரசின் தேசிய அறிவியல் பதக்கம் (1966), இந்திய அரசின் பத்ம விபூஷண் விருது (1968), ராயல் சொûஸட்டியின் காப்லே பதக்கம் (1984) உள்ளிட்ட உலக அளவிலான பல்வேறு விருதுகள் சந்திரசேகரை அலங்கரித்தன.

பிரெளனியன் இயக்கக் கோட்பாடு (Theory of Brownian motion), சார்பியல் கோட்பாட்டுக்கும் விண்ணியலுக்கும் உள்ள தொடர்பு (The general theory of relativity and relativistic Astrophysics) உள்ளிட்ட ஆராய்ச்சிகளிலும் முக்கிய முடிவுகளை சந்திரசேகர் வெளியிட்டுள்ளார்.

விண்மீன் அமைப்பில் அறிமுக ஆய்வு (An Introduction to the Study of Stellar Structure- 1939), விண்மீன் இயக்கக் கோட்பாடுகள் (Priciples of Stellar Dynamics- 1942), கருந்துளைகளின் கணித நியதி (Mathematical Theory of Black Holes -1983), பொதுவான வாசகருக்கு நியூட்டன் கோட்பாடு (Newton’s Principia for the Common Reader- 1995) உள்ளிட்ட 10 நூல்களை சந்திரசேகர் எழுதியுள்ளார்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவராக வாழ்ந்த சந்திரசேகர், அமெரிக்காவில் 1995, ஆக. 21-இல் மறைந்தார். அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் சுப்பிரமணியன் சந்திரசேகர் பெயரில் ஓர் ஆராய்ச்சி மையம் இயங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com