பள்ளி-கல்லூரி வாழ்க்கையின்போது, நமக்குத் தேவையான பணத்தை நாமே சேமித்துப் பராமரிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ஏனென்றால் எல்லாவற்றையும் பெற்றோர் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் காலத்தில்? நமக்கு வரும் வருமானத்தை எப்படி முறையாகச் செலவழித்து, சேமித்து பராமரிக்க வேண்டும் என்பதை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இதோ அதற்கான எளிய வழிகள்:
சுயகட்டுப்பாடு
கடன் (கிரெடிட்) அட்டையை பயன்படுத்தி பொருட்களை வாங்கும்போது, மனம்போனபடி நினைத்த பொருட்கள் அனைத்தையும் வாங்கக் கூடாது, தவிர்க்க முடியாத, மிகவும் அவசியமான பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். வணிக வளாகங்கள், அங்காடிகள் போன்றவற்றுக்கு செல்லும்போது, கண்ணில் தென்பட்ட அனைத்தையும்
வாங்கினால், நாம் வாங்க வேண்டும் என்று நினைத்துச் சென்ற பொருட்களை வாங்க கையில் பணமில்லாமல் போய்விடும். அதற்காகப் பிறரிடம் கடன் வாங்க நேரும். இதுபோன்ற சமயங்களில் சுயகட்டுப்பாடாக இருக்க பழகிக் கொண்டால், வீண் செலவு குறையும். சேமிக்கவும் செய்யலாம்.
சொந்தமாக முடிவெடுத்தல்
பணத்தைச் சேமித்துப் பராமரிப்பது குறித்து நாம் கட்டாயம் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். ஏனெனில், இதில் பிறரது உதவியை நாடினால், அவர்கள் நம்மை தவறாக வழி நடத்திச் சென்றுவிட வாய்ப்புள்ளது. அவர்களில் சிலர், நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுவார்கள். நமது பணத்தில் உல்லாசமாக செலவழிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணம் கொண்டவர்களாகவும் அவர்கள் இருக்கலாம். எனவே பணத்தை பராமரிக்கும் விஷயத்தில் பிறரது ஆலோசனையை நாடக் கூடாது. அதற்கு நாமே முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
திட்டமிட்டுச் செயல்படுதல்
"வரவு எட்டணா, செலவு பத்தணா' என்று வரவுக்கு மேல் செலவு செய்யக் கூடாது. வருமானத்துக்கு மிகாமல், அதை விட குறைவாக செலவுகள் இருக்கும்படி திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். அப்போதுதான் குறிப்பிட்ட தொகையைச் சேமிப்புக்கென நம்மால் ஒதுக்க முடியும்.
அவசர கால நிதிக்கு சேமித்தல்
எத்தகைய செலவு வந்தாலும், குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் அவசர காலத் தேவைகளுக்கு என்று சேமித்து வைக்க வேண்டும். இதுபோல குறிப்பிட்ட அளவு தொகையை நாம் சேமித்து வந்தாலே, விபத்து போன்ற அவசரகால சிகிச்சைக்கும், வேலையின்றி இருக்கும் காலத்திலும் அந்த நிதியை வைத்து சமாளித்துக் கொள்ள முடியும். இந்த தொகையை நமது அவசர காலத்துக்கு பயன்படுத்த வேண்டிய தேவை எழாத போது, அதுவே குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மிகப்பெரிய தொகையாகிவிடும். அதை ஓய்வுக் கால செலவு, விடுமுறை பயணச் செலவு போன்றவற்றுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓய்வுக் காலத்துக்கு சேமிப்பு
அரசுத் துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவிட்டு ஓய்வு பெறும்போது, அவர்களுக்கு ஓய்வூதியமாக குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் கிடைக்கும். ஆனால், அந்தத் தொகையை வைத்துக் கொண்டு மட்டும் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாது. அல்லது பணியில் இருக்கும்போது வாழ்க்கை நடத்தியதைப் போல தாராளமாகச் செலவு செய்ய முடியாது. ஆகையால், பணிக் காலத்திலேயே சில நிறுவனங்கள் அளிக்கும் ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால், தற்போது நாம் ஈட்டும் ஊதியத்துக்கு இணையாகவோ, அல்லது அதை விட அதிகமாகவோ தொகை கிடைக்கும்.
வரிகள் மீது கவனம்
நமக்கு அளிக்கப்படும் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை வருமான வரியாக பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகையை மாதத்துக்கு கணக்கிட்டால், குறைவாக இருக்கும். ஆனால், வருடத்துக்கு கணக்கிட்டால் அதுவே மிகப்பெரிய தொகையாக தெரியும். எனவே, நம்மிடம் பிடித்தம் செய்யப்படும் வரிகளுக்கு, அரசு அளித்துள்ள விதிவிலக்குகளைக் (வாடகை, வீட்டுக் கடன், ஆயுள் காப்பீட்டுத் தொகை போன்றவை) கணக்குக் காட்டி, அதை திரும்பப் பெறலாம். இதற்கென இருக்கும் இணையதளத்துக்குச் சென்று நம்மிடம் பிடித்தம் செய்யப்படும் வரிகள், வருமானத்துக்கு பொருத்தமாக இருக்கிறதா? என்று சரி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி பார்க்கும்போது, அதிகமான வரி பிடித்தம் செய்யப்பட்டிருந்தால், அதை அடுத்த முறை பிடித்தம் செய்யாமல் தடுக்க முடியும்.
உடல்நலம் பேணுதல்
மருத்துவச் செலவுகள் இப்போது அதிகமாகிவிட்டன. ஒரு தடவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், பல ஆண்டுகள் சம்பாதித்த பணத்தை எல்லாம் இழந்துவிடும் வகையில் இன்றைய மருத்துவம் உள்ளது. எதிர்பாராத விபத்து போன்ற காலத்தில், சிகிச்சை செய்து கொள்வதற்கு அதிகச் செலவாகும். இதை விபத்துக் காப்பீடு போன்றவற்றில் சேருவதன்மூலம், நாம் ஓரளவு சமாளிக்க முடியும். எனவே, உடல் நலத்தைப் பேணும் வகையில், பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் எடையை சீராகப் பராமரித்தல், தினந்தோறும் உடற்பயிற்சி செய்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களைத் தவிர்த்தல், கவனமாக வாகனம் ஓட்டுதல் போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாகவும் தேவையில்லாத மருத்துவ செலவுகளைத் தவிர்க்க முடியும்.
சொத்துகளுக்குப் பாதுகாப்பு
கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் சேர்த்த சொத்துகளைக் காப்பீடு செய்ய வேண்டும். இப்படி செய்தால், கொள்ளை, தீ விபத்து போன்றவற்றின்போது, ஏற்படும் நஷ்டத்தைத் தவிர்க்க முடியும்.
இந்த 8 வழிமுறைகளை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் ஓரளவு சேமிக்க முடியும். எதிர்காலத்துக்குத் திட்டமிடவும் முடியும்.
- கல்லிடை வீ.சண்முகம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மிக மோசமான நிலையில் ஈரான்! டிரம்ப் பேட்டி | US | Iran | Trump
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


