கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

படித்தது பொறியியல்... அமைப்பதோ தோட்டம்!

மரம், செடி, கொடிகளுடன் இயற்கையோடு இயைந்து வாழ எல்லாருக்கும்தான் ஆசை. கிராமப்புறங்களில் இந்த ஆசை நிறைவேற வாய்ப்பு உள்ளது.

News image
Updated On :21 நவம்பர் 2017, 5:30 am

ந. ஜீவா

மரம், செடி, கொடிகளுடன் இயற்கையோடு இயைந்து வாழ எல்லாருக்கும்தான் ஆசை. கிராமப்புறங்களில் இந்த ஆசை நிறைவேற வாய்ப்பு உள்ளது. நகரங்களில்? அதுவும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்பவர்களுக்கு?
""நகரங்களில் வாழ்பவர்களும் இயற்கையோடு சேர்ந்து வாழ முடியும்'' என்கிறார் ஸ்ரீராம் ஆராவமுதன்.
பொறியியல் படித்த அவர், படிப்பு முடிந்ததும், டாடா இன்ஃபோடெக், விப்ரோ உள்ளிட்ட பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 10 ஆண்டுகள் வேலை செய்தார். நல்ல வருமானம். அதற்கேற்ற வாழ்க்கைமுறை என்று நாட்கள் நன்றாகத் தான் ஓடிக் கொண்டிருந்தது. பொறியியல் பட்டதாரியான ஸ்ரீராம் இயற்கை தோட்டம் அமைப்பது குறித்து பத்திரிகைகளில் எழுதும் எழுத்தாளரும் கூட. இசைக் கலைஞர், பின்னணி குரல் கொடுக்கும் கலைஞர் என பலமுகங்கள் கொண்டவர். எனினும் ஏதேனும் புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற ஓர் உந்துதல் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவரும் அவருடைய மூன்று நண்பர்களும் கூடிப் பேசி முடிவெடுத்தார்கள் "மை சன்னி பால்கனி' (ஙஹ்நன்ய்ய்ஹ்ஆஹப்ஸ்ரீர்ய்ஹ்) என்ற ஒரு நிறுவனத்தை பெங்களூருவில் தொடங்குவதென. நண்பர்களில் ஒருவர் பெண், ரீனா செங்கப்பா. ஷைலேஸ் டேஷ்பாண்டே, ஆத்ரேயா சிதம்பி ஆகியோர் மற்ற இருவர். இவர்களில் ஸ்ரீராம் மட்டும் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக மை சன்னி பால்கனியைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் மனிதர்கள் சற்று ஓய்வாக நின்று மூச்சுவிடும் இடம் பால்கனி. அந்த இடத்தில் ஒரு தோட்டம் அமைத்தால் இயற்கையோடு கொஞ்சமாவது இயைந்து வாழ முடியும் அல்லவா?
ஆனால் நகரங்களில் எவ்வளவு பேருக்கு தோட்டம் அமைக்கத் தெரியும்? எனவே பால்கனியில் தோட்டம் அமைத்துத் தரும் பணியைச் செய்தால் நிறையப் பேருக்கு உதவ முடியும் என்று நினைத்தார்கள். அதற்கு நல்ல வாய்ப்பு உண்டு என்பதால் இந்த நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
""வேலையை விடப் போகிறேன் என்று சொன்னவுடன் வீட்டில் இருந்துதான் முதலில் எதிர்ப்புக் கிளம்பியது. அவர்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய நிறையப் பாடுபாட வேண்டியிருந்தது. அவர்கள் சொன்னதைப் போலவே- ஆரம்பத்தில் எதிர்பார்த்ததைப் போல வருமானம் வரவில்லை. பின்னர் வரத் தொடங்கியது.
பால்கனியில் தோட்டம் அமைக்க விரும்பும் ஒருவர் எங்களுடன் தொடர்பு கொண்டால் போதும். நாங்கள் அவர் வீட்டு பால்கனியின் அளவு, அவர் என்ன மாதிரியான செடிகளை வளர்க்க விரும்புகிறார், அவர் ரசனை என்ன என்பதையெல்லாம் தெரிந்து கொள்வோம். அதற்குப் பின்பு அவருடைய பால்கனிக்கு பொருத்தமான தோட்டத்தை வடிவமைத்து அந்த டிசைனை அவருக்கு அனுப்பி வைப்போம். அவர் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டால் வடிவமைப்பில் உள்ளபடியே தோட்டம் அமைத்துக் கொடுப்போம். ஏதேனும் மாறுதல்களை விரும்பினால் - அதற்கேற்ப மாற்றி, அவர் விருப்பத்திற்கேற்ற தோட்டத்தை அவர் வரச் சொன்ன நாளில் அவர் வீட்டுக்குச் சென்று அமைத்துத் தருவோம்.
தோட்டம் அமைத்துத் தருவதுடன் எங்களுடைய வேலை முடிந்துவிட்டது என்று நாங்கள் நினைப்பதில்லை. அதற்குப் பின் அந்தத் தோட்டத்தை எப்படிப் பராமரிப்பது? என்று சொல்லித் தருவோம்.
ஒருமுறை மூன்றே நாட்களுக்குள் 56 பால்கனிகளில் தோட்டம் அமைக்க ஆர்டர் வந்தது. திணறிப் போய்விட்டோம். ஆனாலும் கடுமையாக உழைத்து அமைத்துத் தந்தோம். அமைத்துத் தந்த பின், எங்களுக்குக் கிடைக்கும் பாராட்டுகளே எங்களை தொடர்ந்து உற்சாகமாக இயங்க வைக்கிறது.
அதற்குப் பிறகு, பால்கனியில் மட்டும் தோட்டம் அமைத்துத் தருவது என்று நின்றுவிடாமல், அலுவலகங்கள், பெரிய நிறுவனங்கள், வீடுகளில் தரையில் தோட்டங்களை அமைத்துத் தரத் தொடங்கினோம். சிலர் அவர்களே தோட்டம் அமைத்துக் கொள்ள விரும்புவார்கள். தோட்டம் அமைக்க அவர்களுக்குத் தேவையான பொருட்களை விற்பனை செய்கிறோம். ஆன் லைனில் ஆர்டர் செய்தால் போதும்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தத் தோட்டம் அமைக்கத் தேவைப்படும் விதை, செடிகளிலிருந்து, எந்தவொரு பொருளையும் நாங்கள் இறக்குமதி செய்வதில்லை. எல்லாவற்றையும் உள்ளூரில் உள்ளவர்களிடம் இருந்துதான் வாங்குகிறோம். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் எதையும் பயன்படுத்துவதில்லை. தோட்டம் அமைக்க விரும்புவர்களுக்குப் பயிற்சியும் தருகிறோம்.
தோட்டம் அமைத்துத் தரும் பணியை பெங்களூருவில் மட்டும் செய்து தருகிறோம். தோட்டம் அமைக்கத் தேவையான பொருட்களை எல்லா ஊர்களுக்கும் அனுப்புகிறோம்'' என்கிறார் ஸ்ரீராம் ஆராவமுதன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.