வேளா வேளைக்கு... மருந்துகளைத் தரும் கருவி!
விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என்பார்கள். ஆனால் விருந்தாளியாக ஓர் இடத்தில் மூன்று நாட்கள் தங்குவது இப்போது இயலாது.


விருந்தும் மருந்தும் மூன்று நாள்' என்பார்கள். ஆனால் விருந்தாளியாக ஓர் இடத்தில் மூன்று நாட்கள் தங்குவது இப்போது இயலாது. ஆனால் மருந்துகளை வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். இக்கால நோய்களான சர்க்கரை நோய், தைராய்டு நோய், இரத்த அழுத்தம், மாரடைப்பு என பல நோய்களுக்கு வாழ்நாள் முழுவதும் மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது.
இதில் பல நோய்கள் சேர்ந்து ஒருவரைத் தாக்குமானால், மருந்து, மாத்திரைகளால் உயிர் வாழும் நிலையே அவருக்கு ஏற்பட்டுவிடுகிறது.
மருந்துகளின் விண்ணைத் தொடும் விலை ஒருபுறமிருக்க, அப்படியே வாங்கி வைத்துள்ள மருந்துகளை குறிப்பிட்ட நேரத்தில் தவறாமல் உட்கொள்பவர்கள் எத்தனை பேர்? இயந்திரமயமான இந்த உலகில் தண்ணீர் குடிப்பதற்கே பலர் மறந்து போகும்நிலை உள்ளது. அப்படியிருக்கும்போது, குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை உட்கொள்வது, அதுவும் ஒவ்வொருநாளும் தவறாமல் உட்கொள்வது மிக மிக சிரமமான ஒன்று.
அந்தச் சிரமத்தைக் குறைக்கும் வகையில் "கேர்டோஸ்' (CAREDOSE) என்ற நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார் கெüரி ஆங்கிரிஸ். நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி படித்த அவர் வேலைக்குச் சேர்ந்தது ஒரு மருந்து கம்பெனியில். நிறைய மருந்து தயாரிக்கும் நிறுவனங்களோடு தொடர்புடைய வேலை அது. அங்கிருக்கும்போது அவர் தெரிந்து கொண்ட விஷயம், மருத்துவர்களின் பரிந்துரையின் படி நோயாளிகள், உரிய நேரத்தில், உரிய அளவு மருந்துகளை உட்கொள்வது கிடையாது என்பது.
இதனால் பலருக்கு நோய் தீர்வதில்லை; நோய் குறைவதில்லை என்பது ஒருபுறமிருக்க, மருந்துகளின் மீதே நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது.
நோயாளிகள் மருந்துகளை நேரம் தவறாமல் உட்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கெüரி திட்டமிட்டார். அவர் வேலை செய்த நிறுவனத்தை விட்டு விலகி, புதுதில்லியில் லஜ்பத் நகரில் நோயாளிகளுடன் நேரடித் தொடர்பு கொள்ள வசதியாக ஒரு மருந்துக் கடையை ஆரம்பித்தார். ஏதோ நோயாளிகள் வருவார்கள், டாக்டரின் மருந்துச் சீட்டை க் காண்பிப்பார்கள். மருந்து எடுத்து அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது போன்ற வழக்கமான மருந்துக் கடையாக அது இல்லை.
"" ஒரு நோயாளியோ, டாக்டரோ மருந்துச் சீட்டை எங்களிடம் கொடுத்தால்போதும், தேவையான மருந்துகள், ஒவ்வொரு நாளுக்கும், ஒவ்வொரு வேளைக்கும், தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு, டோஸ்ட்ராய்ட் எனப்படும் பெட்டி வடிவ மருந்து தரும் ரோபாட் மூலம் நோயாளிக்குத் தரப்படும். டோஸ்ட்ராய்டில் நோயாளியின் ஆன்ட்ராய்ட் போனும் இணைக்கப்படும். மருந்து உட்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டால், செல்போனின் மூலம் அது அறிவிக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அந்த பெட்டி வடிவ மருந்து தரும் ரோபாட்டில் இருந்து தேவையான மருந்து மாத்திரைகள் வெளியே வரும். நோயாளி அதை எடுத்து உட்கொள்ள வேண்டியதுதான்'' என்கிறார் கெüரி.
மூன்று வேளைகளுக்கும் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகள் நிறைய இருந்தால் எந்த வேளைக்கு எந்த மாத்திரை, எத்தனை மாத்திரை என்பதெல்லாம் பலருக்கு மறந்துவிடும். குறிப்பாக வயதானவர்கள் மருந்து மாத்திரைகளைச் சரியான அளவில் எடுத்து உட்கொள்ள திண்டாடிப் போவார்கள். இந்த மருந்து தரும் இயந்திரம் எத்தனை வகையான மருந்து, மாத்திரைகளானாலும் அவற்றைத் தனியே பிரித்து, அந்த வேளைக்கு எவற்றை உட்கொள்ள வேண்டுமோ, அவற்றை மட்டுமே வெளியில் அனுப்பும்.
""நோயாளிகளுக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை டோஸ்ட்ராய்ட் மூலம் விநியோகிப்பது மட்டுமல்ல, எங்கள் வேலை. பல்வேறு மருந்து நிறுவனங்களின் மருந்து தயாரிப்புகள், அவை எந்த அளவுக்கு விற்கின்றன, எவை விற்பதில்லை, டாக்டர்கள் எவற்றை அதிகம் பரிந்துரைக்கின்றனர் என்பன போன்ற பல விவரங்களையும் நாங்கள் பதிந்து கொள்கிறோம். இப்படித் திரட்டப்பட்ட புள்ளிவிவரங்கள் பல மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கின்றன''
என்கிறார் கெüரி.
ஒருமுறை அனுப்பப்பட்ட மருந்து, மாத்திரைகள் தீர்ந்துவிட்டன என்றால், நோயாளிகள் என்ன செய்வது? அதிலும் வயதில் மூத்தவர்கள் என்ன செய்வார்கள்? டாக்டரின் மருந்துச் சீட்டை கேர்டோஸ் நிறுவனத்துக்கு அனுப்பி விட்டால் போதும், உடனே மருந்து, மாத்திரைகளை அனுப்பி வைத்துவிடுவார்கள். https://www.caredose.com என்ற இணையதளத்தின் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.
தற்போது புதுதில்லியில் மட்டும் செயல்படும் இந்த கேர்டோஸ் நிறுவனத்தை உத்தரபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், மகராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விரிவுபடுத்த இருக்கிறார்களாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...