

உலக வங்கி (The World Bank) பெண் சிறு தொழில் முனைவோர்களுக்கு "நிலையான வளர்ச்சி இலக்குகளும் அவளும்' (Sustainable Development Goals and Her) என்கிற தலைப்பிலான புதிய போட்டி ஒன்றினை அறிவித்திருக்கிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகள்: 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் (United Nations) அவையின் நிலையான வளர்ச்சிக்கான கூட்டத்தில் "2030 ஆம் ஆண்டில் நாம் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குவோம்' (Create the future we want in 2030) எனும் நோக்கத்தில் 1. வறுமை இல்லாமை 2. பசி நீக்கம் 3. நல்ல உடல் நலம் மற்றும் நன்றாக இருத்தல் 4. தரமான கல்வி 5. பாலினச் சமத்துவம் 6. தூய்மையான குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு 7. தாங்கத்தகுந்த மற்றும் தூயசக்தி 8. ஏற்புடைய வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி 9. தொழில், கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பு 10. ஏற்றத்தாழ்வுகள் குறைப்பு 11. நிலையான நகரங்கள் மற்றும் சமுதாயங்கள் 12. பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி 13. பருவநிலைச் செயல்கள் (Climate Action), 14. நீருக்கடியிலான வாழ்க்கை 15. நிலத்தின் மேலான வாழ்க்கை 16. அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் 17. இலக்குகளுக்கான கூட்டாண்மைகள் என்று பதினேழு திட்டங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளாக அறிவிக்கப்பட்டன.
யார் பங்கேற்கலாம்?: இப்போட்டியில் மூன்று வருடங்களுக்குக் குறையாமல், சொந்தமாகச் சிறு தொழில் செய்து வரும் பெண்கள் அல்லது சிறு தொழில் அமைப்பின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் அனைவரும் பங்கேற்க முடியும். சிறு தொழில் என்பது இங்கு 1 முதல் 9 பணியாளர்களைக் கொண்ட, ஆண்டு விற்பனை 1,00,000 அமெரிக்க டாலர்களுக்குக் குறைவாக உள்ள தொழில்கள் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.
எப்படி பங்கேற்பது?: இப்போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் அதற்காக அமைக்கப்பட்ட இணையப் பக்கத்தில் தங்களைப் பற்றிய தகவல்களை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம். இப்பக்கத்தில் பதிவு செய்யப் பெற்ற பெண் சிறு தொழில் முனைவோர்களின் செயல்பாடுகளை அதற்கென நியமிக்கப் பெற்ற நடுவர்கள் ஆய்வு செய்து, பரிசுக்குரியவர்களைத் தேர்வு செய்வர். பங்கேற்பவர்கள் பதிவு செய்து கொள்ள கடைசி நாள்: 30-6-2018.
பரிசுகள்: பதிவு செய்யப் பெற்றுள்ள நுழைவுகளில், பதிவுகளின் பார்வை, நோக்கம் மற்றும் உள்ளீடுகளின் தெளிவு போன்றவற்றை
உள்ளடக்கி, நிலையான வளர்ச்சி இலக்குகளில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பரிசுக்குரியவர்களை நடுவர்கள் தேர்வு செய்வர்.
இப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்கு அழைக்கப் பெற்றுச்
சிறப்பிக்கப்படுவார்கள்.
வெற்றி பெற்ற பெண் தொழில் முனைவோர்களது செயல்பாடுகள் குறித்த செய்தி கள் அனைத்துச் சமூக ஊடகங்களிலும், வலைத் தளங்களிலும் இடம் பெறும்.
கூடுதல் தகவல்கள்: இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் பெண் சிறு தொழில் முனைவோர்கள், போட்டி குறித்த மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ள http://www.worldbank.org/en/programs/sdgs}2030}agenda/brief/sdgs}and}her?cid=ECR_TT_worldbank_EN_EXT எனும் இணைய முகவரிக்குச் செல்லலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.