ஜப்பானில் மனிதவள மேலாண்மை: இங்கு போல அங்கு இல்லை!
இன்று வாழ்க்கை உலகமயமாகிவிட்டது. இங்கிருந்து கொண்டே உலகின் எந்த ஒரு மூலையில் உள்ள அலுவலுகத்துக்காக வேலை செய்யலாம்.


இன்று வாழ்க்கை உலகமயமாகிவிட்டது. இங்கிருந்து கொண்டே உலகின் எந்த ஒரு மூலையில் உள்ள அலுவலுகத்துக்காக வேலை செய்யலாம். வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதும் இன்று அதிகரித்துவிட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் கல்வியும் உலகமயமாக வேண்டும். உலக அளவிலான நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு கல்வி கற்பிக்கப்பட வேண்டும்.
இந்த நோக்கத்துடன், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் மனிதவள மேலாண்மைப் பிரிவில் பயிலும் மாணவ, மாணவிகள் கடந்த மாதம் 5 நாட்கள் ஜப்பானின் டோக்கியோ நகருக்குச் சென்றிருக்கிறார்கள். அங்குள்ள தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். ஜப்பானின் தொழிற்சாலை
களில் தொழிலாளர் - நிர்வாகத்தினரின் உறவு எவ்வாறு உள்ளது? தொழிலாளர்
களின் வாழ்க்கை நிலை எவ்வாறு உள்ளது?
என்றெல்லாம் நேரில் பார்த்துத் தெரிந்து வந்திருக்கிறார்கள்.
இதுகுறித்து மாணவ, மாணவிகளுடன் ஜப்பான் நாட்டுக்குச் சென்ற அந்த கல்லூரியின் மனிதவள மேலாண்மைப் பிரிவைச் சேர்ந்த சி.திலகா நம்மிடம் பேசியதிலிருந்து...
""கடந்த மாதம் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகருக்கு எங்கள் கல்லூரியின் மனிதவள மேலாண்மைப் பிரிவில் பயிலும் மாணவ, மாணவிகளும் நானும், என்னுடன் பணிபுரியும் ஏ.புஷ்பநாதனும் சென்றோம்.
நமது நாட்டில் மனிதவள மேலாண்மைப் பிரிவில் பணிபுரிபவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை இங்குள்ள பல நிறுவனங்களுக்கு நேரில் சென்று எங்கள் மாணவ,மாணவிகள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களின் மனிதவள மேலாண்மைப் பிரிவின் செயல்பாடுகளைப் பற்றி படித்துத் தெரிந்திருக்கிறார்கள். நேரில் சென்று தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக டோக்கியோவில் ஐந்து நாட்கள் தங்கியிருந்தோம்.
ஜப்பானில் உள்ள சிடிஎஸ் நிறுவனம், ஜப்பான் மின்ட் என்ற நாணயத்தொழிற்சாலை, அங்குள்ள உலகப் புகழ்பெற்ற ரிக்கோ பல்கலைக்கழகம், பேனாசோனிக் நிறுவனம், யாகூல்ட் கோகா சேல்ஸ் நிறுவனம் மற்றும் ஜப்பான் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றுக்குச் சென்றோம்.
அங்குள்ள நிறுவனங்களில் ஷிப்ட் நேரம் 9 மணி நேரம். அதற்கும் மேல் வேலை இருந்தால் வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அங்கு வேலை செய்பவர்கள் செல்கிறார்கள். அதிக நேரம் வேலை செய்வதற்கு
அதிகப் பணம் கொடுக்கப்படுவதில்லை.
ஒரு தொழிற்சாலையின் ஒரே பிரிவிலேயே ஆண்டுக்கணக்கில் ஒருவர் வேலை செய்வதில்லை. தொழிற்சாலையின் பல பிரிவுகளில் மாறி மாறி வேலை செய்து, வேலை முழுவதையும் கற்றுக் கொண்டு தங்களுடைய திறமையை மேம்படுத்திக் கொள்கிறார்கள்.
அங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலைதான் முக்கியம். குடும்ப உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
பல கார், இரு சக்கர வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ள அந்த நாட்டில் அதிகமான கார்களையோ, இரு சக்கர வாகனங்களையோ பார்க்க முடியவில்லை. எல்லாரும் எலக்ட்ரிக் ட்ரெயினில் போகிறார்கள்.
சைக்கிளில் போகிறார்கள். நடந்து போகிறார்கள். வேலை செய்யும் நிறுவனத்துக்கு அருகிலேயே அவர்கள் தங்குவதற்கான குடியிருப்புகளை நிறுவனமே கட்டிக் கொடுத்திருப்பதால், இந்த போக்குவரத்துப் பிரச்னைகள் அங்கே முற்றிலும் இல்லை.
சில ஆண்டுகள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு, அதிக சம்பளத்துக்காக வேறொரு நிறுவனத்துக்கு மாறிச் செல்வது அங்கே இல்லை. ஓய்வு பெறும் வரை ஒரே நிறுவனத்தில்தான் வேலை செய்கிறார்கள். காரணம், ஒரு குறிப்பிட்ட வேலைக்கு எல்லா நிறுவனங்களிலும் ஒரே அளவிலான சம்பளமே அங்கு தரப்படுகிறது. எனவே அதிக சம்பளத்துக்காக வேலையை யாரும் விடமாட்டார்கள். பல நிறுவனங்களுக்கு மாறிச் சென்றால் ஓய்வூதியமும் அங்கே குறைந்துவிடுகிறது.
தொழிற்சங்கங்கள் அங்கே குறைவு. அப்படியே இருந்தாலும் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்ற பிரச்னைகளை அவர்கள் எழுப்புவது இல்லை. வேலை செய்யும் இடத்தின் தரத்தை மேம்படுத்துவது, சூழ்நிலையை மேம்படுத்துவது தொடர்பாக மட்டுமே அவர்கள் நிர்வாகத்திடம் பேசுகிறார்கள். இவையெல்லாம் எங்களுடைய மாணவர்கள் கண்டறியாதவை.
இவ்வாறு அங்குள்ள பணியாளர்கள் இருப்பதற்கு அங்குள்ள நிர்வாகத்தினரின் செயல்களே காரணம், ஒரு நிறுவனம் ஒருவரை வேலைக்கு எடுத்துக் கொண்டு அவருக்கு வேலை தருவதுடன், அவரை மேலும் படிக்க வைக்கிறது. அவருடைய திறமையை வளர்க்கிறது. அவரை தத்து எடுத்துக் கொண்டதைப் போல பார்த்துக் கொள்கிறது.
சம்பளம் தருவதுடன், நிறுவனங்களில் உள்ள கேண்டீன்களில் மானிய விலையில் உணவுப் பொருள்களைத் தருகிறது.
நிறுவனமே குடியிருப்புகளைக் கட்டிக் கொடுத்திருக்கிறது. ஓய்வூதியமும் தருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அங்குள்ள தொழிலாளர்கள் வேலையை முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.
மக்கள் தொகை குறைவாக இருப்பதால், குழந்தை பெற்றுக் கொள்வதை ஊக்குவிக்கிறார்கள். பேறுகால விடுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக குடும்பத்தின் ஆண்களுக்கும் விடுப்பு உண்டு. ஒருவர் உடல், மன நலக் குறைவினால் லீவு எடுக்க நேர்ந்தால், அவர் முழுவதும் தேறிவரும் வரை சம்பளத்துடன் லீவு தருகிறார்கள்.
அங்கே மருத்துவம், கல்வி இரண்டும் தரமாக உள்ளன. தரத்தில் அரசு, தனியார் நிறுவனம் என்ற வித்தியாசம் இல்லை.
நமது நாட்டின் நிறுவனங்களின் நிலைமையில் இருந்து நிறைய வேறுபாடுகளைப் பார்க்க முடிந்தது. இவற்றையெல்லாம் எங்கள் மாணவர்கள் நிறுவனங்களில் நேரில் பார்த்து தெரிந்து கொண்டார்கள். அங்குள்ள மனிதவளமேலாண்மைக் கல்வி பற்றியும் தெரிந்து கொண்டார்கள்.
கட்டணத்தை விட கூடுதலாக ஒரு பைசா கூட கேட்காத டாக்ஸி டிரைவர்களை,
காலை 5 மணிக்கு வெறிச்சோடிக் கிடக்கும் சாலையில் எந்தவொரு வாகனமும் செல்லாவிட்டாலும் சிக்னலை மதித்துக் காத்திருக்கும் மக்களை அங்குதான் பார்க்க முடியும்'' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...