ஒரு பெரிய மலை. அதில் துள்ளி விளையாடியது ஓர் அணில். அப்போது மலைக்கும், அணிலுக்கும் சிறு வாக்குவாதம் துவங்கியது. மலை மிகவும் கர்வமாக அணிலைப் பார்த்து, "" நீ ஒரு பொடிப் பயல்'' என்றது. அணில் அதைப் பற்றிக் கவலை கொள்ளவில்லை. அணில் மிகவும் அடக்கமாக ""உண்மைதான், நீங்கள் பெரிய ஆள்தான். அதற்காக, நீங்கள் அனைத்திலும் பெரியவர் என்று கர்வப்படாதீர்கள். நான் சிறியவனாக இருப்பதிலேயே பெருமை கொள்கிறேன்'' என்றது. ""நான் கர்வப்பட்டுக்கொள்ள ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. நீ பெருமைப்பட்டுக்கொள்ள உன்னிடம் என்ன இருக்கிறது?'' என்றது மலை.
""உங்களைப்போல் ஒரு காட்டையே என்னால் முதுகில் சுமக்க முடியாது. ஆனால், என்னைப்போல் ஒரு சிறு பட்டாணியை உங்களால் உடைக்க முடியுமா?'' என்று கேட்க, மலை மலைத்துபோனது. ஆட்டுக்கு வாலினை அளந்து வைத்த கடவுளால் எல்லாமே மிகச் சரியாகத்தான் அளவிடப்பட்டு படைக்கப்பட்டிருக்கிறது என்பதை அமெரிக்க இலக்கிய மேதை எமர்சன் தனது கவிதைக் கதையில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற தெய்வப் புலவரின் வரிகளை வாழ்விற்கு மையப்படுத்துகிறார்.
பிறப்பு ஒன்றுதான். சிறப்பு அதனதன் செயலால் வரும் என்பது வள்ளுவரின் தெளிவு. அதுவே வாழ்க்கையின் விளக்கம். மனிதன் எவ்வளவு முயன்றாலும் வான்குருவியின் கூடுபோல் அழகாய் கூடுகட்ட இயலாது. எத்தகைய வலிமையுடையவனாய் இருந்தாலும், அளவில் சிறிய கறையானைப்போல் புற்றையும், தேனீக்களைப்போல் தேன்கூட்டையும் கட்ட முடியாது. ஒவ்வோர் உயிரும் தனக்கென்று ஒரு பலத்தினைக் கொண்டுள்ளது என்பதை
வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் யாம்பெரிதும்
வல்லோமே யென்று வலிமை சொல வேண்டாங்காண்
எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது
என்ற வரிகளால் விளக்குகிறார் தமிழ் மூதாட்டி ஓளவையார்.
எனவே, எங்கு பிறந்தோம்? எப்படிப் பிறந்தோம்? என்பதை விட எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் வாழ்வின் வரலாறு. வாழ்க்கை என்பது இல்லாததை நினைத்து வருந்துவதற்கல்ல; இருப்பதை வளர்த்துக் கொள்வது. பிறரைப் பார்த்து ஏங்கி வாழ்வதல்ல; மற்றவர்களைத் தாங்கி வாழ்வது. பிறரைப் பார்த்து வருத்தத்தோடு வாழ்வதல்ல; பிறர் பார்த்து வாழ்த்தும் அளவிற்கு வாழ்வதே வாழ்க்கை.
உண்மையில் ஒவ்வொரு மனிதனும் ஓர் அதிசயம். அளப்பரிய ஆற்றலுடையவர். யாவர்க்கும் ஒப்பில்லாதவர். "ஒரு மனிதன் தன்னை மற்றொரு மனிதனுடன் ஒப்பிடுவது குற்றம்' என்பார் காரல் மார்க்ஸ். நேற்றைவிட இன்று, இன்றைவிட நாளை எனத் தனது திறமையை தன்னோடு ஒப்பிட்டுக் கொள்பவன் மனிதத்தின் புனிதன், தன்னை தினமும் உயர்த்திக் கொள்பவன் மகான். தன்னை பிறரோடு ஒப்பிட்டுக் கொள்பவன் மனிதப் பிழை.
இரும்பினை வார்த்தெடுப்பதுபோல், மனிதத்தை வார்த்தெடுக்கின்றபோது வலிமை வாய்ந்த மனிதன் உருவாகிறான். தன்னையும் தனது திறமையையும் உணர்ந்தவர்களே தரணியில் நிலை பெற்றிருக்கிறார்கள். அதற்கு குங்பூவின் புரூஸ்லீ ஒரு தக்க சான்று. புரூஸ்லீ தனது கடுமையான உழைப்பினால் தனது உடலின் ஒவ்வொரு சென்டி மீட்டரில் உள்ள தசைகளையும் வலிமைப்படுத்தினார். பின்னர் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1970களில் திரையுலகில் ஒரு வினாடிக்கு இருபத்தி நான்கு படங்கள் (Frame) மட்டும் ஓடும். மற்ற நடிகர்கள் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமலிருந்தபோது, புருஸ்லீயின் சண்டையிடும் வேகத்திற்கு அந்த சுருளால் ஈடுகொடுக்க முடியவில்லை. கடைசியில், புரூஸ்லிக்காக முப்பத்தி நான்கு படங்கள் (Frame) ஓடுகின்ற காமிராவின் வேகத்தை மாற்றியமைத்தனர். தொழில் நுட்பத்திற்கேற்ப மனிதன் மாறுகின்ற காலத்திற்கு விதிவிலக்காய், தனது வேகத்திற்கு தொழில்நுட்பத்தை மாற்றச் செய்தவர் புரூஸ்லீ. "நான் சொன்னேன் என்பதற்காக நீ நம்பாதே. உனது சொந்த தேடலைச் செய்' என்ற புருஸ்லீயின் வரிகள், ஒவ்வொருவரையும் தனக்குள்ளே உள்ள திறமைகளைத் தோண்டச் சொல்கிறது. ஆரோக்கியமான உடல் கொண்ட மனிதனிடமே ஆரோக்கியமான சிந்தனைகள் உருவாகுமென்பதால், உடல் வலிமை ஒவ்வொரு மனிதனின் மனவலிமைக்கு அர்த்தமாய் அமைகிறது.
தன்னைக் கூர்மைப்படுத்திக் கொள்பவர்களே அதிகம் சாதிக்கிறார்கள். ஒரு கிராமத்திலிருந்து இரண்டு நண்பர்கள் மரம் வெட்டச் சென்றனர். முதலாமவர் ஒரு நாளில் முப்பது மரங்களை வெட்டினார். இரண்டாமவர் பத்து மரங்களை மட்டுமே வெட்ட முடிந்தது. இரண்டாமவர், முதலாமவரிடம் "" நான் காலையிலிருந்து தொடர்ந்து வெட்டிக்கொண்டேயிருந்தேன், ஆனால், உனது திசையிலிருந்து அடிக்கடி மரம் வெட்டும் சத்தமும் நின்றுபோயிருந்தது, அப்படியிருக்க, எவ்வாறு என்னைவிட இருபது மரங்களை அதிகமாக வெட்டினாய்?'' என்றார். அதற்கு, ""இதில் இரகசியம் ஒன்றும் இல்லை. நான் ஒவ்வொரு மரத்தை வெட்டிய பிறகும், எனது கோடாரியைக் கூர்மைப்படுத்தினேன்'' என்றார் முதலாமவர்.
கூர்மைப்படுத்துவதால் பணித்திறன் பல மடங்காகும். பணிபுரிபவருக்கும் பாராட்டுதல் கிடைக்கும், தொடர்ந்து உழைப்பதைவிட அவ்வப்போது கூர்மைப்படுத்திக் கொள்வதே வெற்றியைத் தருகிறது. "" எனக்கு ஒரு மரத்தை வெட்ட ஆறு மணி நேரம் தரப்பட்டால், அதில் நான்கு மணி நேரத்தை என் கோடாரியைக் கூராக்கச் செயல்படுவேன்'' என்றார் அமெரிக்க நாட்டின் அற்புதமான அதிபர் ஆப்ரஹாம் லிங்கன்.
தன்னைச் செதுக்குபவர்கள், தனது வியர்வைகளை வெற்றித் துளிகளாக்கு
கிறார்கள். அவர்களது மனம் தோல்வியிலும் செப்பனிட்டு, தன்னைச் செம்மைப்படுத்திக் கொள்கிறது. தாமஸ் ஆல்வா எடிசன் ஆயிரம் முறை பல்வேறு சோதனைகளைச் செய்து இறுதியில் டங்ஸ்டன் உலோகக் கம்பிச் சுருளை எரிய வைத்து மின்சார பல்பைக் கண்டுபிடித்தார். அப்போது எடிசனின் நண்பர், ""நீங்கள் ஆயிரம் முறை சோதனைகள் செய்த பிறகே வெற்றி பெற்றீர்கள், ஆயிரம் முறை தோற்றபோது உங்களது மனம் மிகவும் வருத்தப்பட்டிருக்கும்? தோல்விகள் உங்களது முயற்சியைத் தடை செய்திருக்கும் தானே?'' என்றபோது, ""நான் எனது தோல்விகளைப் பற்றி கவலைப்பட்டதேயில்லை. நான் ஒரு சோதனையில் தோல்வியடையும் போதெல்லாம், அதை எப்படிச் செய்யக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன். அந்தத் தோல்வியிலிருந்து பாடம் கற்றுக்கொண்டேன். பாடம் கற்கும் போதெல்லாம் எனது அறிவு கூர்மை பெற்றது. எனவே வெற்றி எனக்கு எளிதாகிப் போனது'' என்றார். தன்னைச் செதுக்கத் துணிபவர்கள் தோல்வியடைவதில்லை. மாறாக அவர்கள் வெற்றியில் பரிணமிக்கிறார்கள்.
வாழ்க்கையில் வெற்றிச் சிகரங்களை எட்ட நினைப்பவர்கள் தனது வாழ்நாள் முழுதும் தன்னைச் செதுக்கிக் கொண்டே இருப்பர். லண்டன் எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னார்டு ஷா, "வாழ்க்கை ஒரு சிறிய மெழுகுவர்த்தி அல்ல எனக்கு. அது ஓர் அபாரமான தீப்பந்தம். இக்கணத்தில் அதை நான் பிடித்திருக்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு அதைக் கொடுப்பதற்கு முன், அதை என்னால் எவ்வளவு பிரகாசமாக்க முடியுமோ, அவ்வளவு பிரகாசமாக சுடர்விடச் செய்ய நான் விரும்புகிறேன்''என்றார். உழைப்பதும், அதன் மூலம் மக்களுக்கு பயன்படுபவராக இருப்பதும் சிறப்பு.
தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற திருவள்ளுவரின் வரிகளுக்கேற்ப, உழைப்பால் உயர்ந்தவர்களே பிறருக்கு உதவ முன் வருவார்கள் என்பது கண்கூடு.
தன்னை செதுக்குபவர் தன்னிகரில்லாதவர். அவர்களுக்கு கால்கள் ஓடினால் தான் இதயம் வலுப்பெறும் என்பதும், நித்தமும் பிரார்த்தித்தால் மட்டுமே ஏராளமான செயல்களைச் சாதிக்க முடியும் என்று தெரியும். அவர்களின் உடலுக்கான பயிற்சியும், உள்ளத்திற்கான தியானமும் அவர்களுக்குள்ளிருக்கும் புனிதர்களைக் காணும் இரு கண்கள்.
ஒரு நல்ல சிற்பி அற்புதமான சிலையை வடிப்பதோடு நில்லாமல் பல இளஞ் சிற்பிகளை உருவாக்குவார். அதுபோல், வாழ்வில் உயர்ந்தவர்கள் தங்களைப் போல் பிறர் உயர ஏணிகளாய் இருப்பர். அவர்கள் எந்த ஒரு மனிதனையும், அவர் எப்படி இருக்கிறாரோ அதே போல் நடத்தாமல், ஒரு மனிதன் எப்படி உருவாக வேண்டுமோ அந்த முறையில் அவரை நடத்துவார். அவர் கண்ணில் பாறைகளில் கற்கள் தெரிவதில்லை, அவற்றினுள் உள்ள சிலைகளே தெரியும்.
ஒரு கிராமத்துக் கோயில். நள்ளிரவில் கருவறையில் உள்ள தெய்வச் சிலையைப் பார்த்து, கருவறையின் வாயிற்படி, ""என்னைத் தெரிகிறதா?'' என்று கேட்டது. சிலை ஆச்சரியமாய்ப் பார்க்க, ""சுவாமி! நீயும் நானும் ஒரே பாறையில்தான் இருந்தோம். ஒரு நாள் சிற்பி ஒருவரின் உளியால் நாம் இரண்டாகப் பிளவுபட்டோம். பிறகு என்மேல் அவர் உளிகொண்டு செதுக்க ஆரம்பித்தார். நான் என்னை இறுக்கிக் கொண்டு கடினக் கல்லானேன். அச்சிற்பி என்னைவிட்டு இடம் பெயர்ந்தார்'' என்றது வாயிற்படி.
அதற்கு சிலை "உண்மைதான்; சிற்பி பின்னர் என்னைச் செதுக்க ஆரம்பித்தார். அவரது உளிகள் என்னில் தேவயற்றவற்றை அகற்றியது, அப்போது என்னுள் வலிகளும் தந்தது. கடைசியில் சிலையாகி விழிகளும் தந்தது. இன்று நான் தெய்வச் சிலையானேன்'' என்றது கற்சிலை.
கற்கள் ஒன்றுதான், வாயிற்படி காலில் மிதிபடுகிறது. கற்சிலை ஆராதிக்கப்படுகிறது. காரணம் கற்சிலை தன்னைச் செதுக்கத் தெரியாவிட்டாலும் தன்னைச் செதுக்க அனுமதித்தது. தன்னில் தேவையற்றதை அகற்றியது.
கல்லைச் செதுக்கினால் தெய்வம்!
மனிதனைச் செதுக்கினால் புனிதம்!
(தொடரும்)
கட்டுரையாசிரியர்: காவல்துறை துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


