நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாங்க இங்கிலீஷ் பேசலாம் 193

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள்.

News image
Updated On :28 மே 2019, 5:54 am

ஆர்.அபி​லாஷ்

புரொபஸர், கணேஷ், மற்றும் ஜுலி ஆகியோர் செல்லப்பிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் ஒருசேர சிகிச்சை தரும் உளவியலாளரான சேஷாச்சலத்திடம் செல்கிறார்கள். அங்கே அவர்களும் நடாஷா எனும் பெண்ணும் மருத்துவரின் அறையில் அரட்டையடிக்கிறார்கள். அப்போது கணேஷ் மற்றும் நடாஷா புரொபஸரிடம் சில கேள்விகள் கேட்கிறார்கள். ஷேக்ஸ்பியர் காலத்து பதங்கள் மற்றும் சொற்றொடர்கள் இன்னும் ஆங்கில பயன்பாட்டில் உள்ளனவா? மனிதர்கள் தங்களுடைய தோற்றம் குறித்து அதிகமாய் அக்கறைப்படுவதற்கு என்று ஒரு தனி சொல் ஆங்கிலத்தில் உண்டா?
ஷேக்ஸ்பியர் அறிமுகப்படுத்திய a wild goose chase எனும் சொற்றொடரின் பொருள் என்ன? இக்கேள்விகளில் சிலவற்றுக்கான விடைகளை இவ்வாரத்தில் பார்ப்போம்.
புரொபஸர்: A wild goose chase இந்த சொற்றொடரை முதலில் பயன்படுத்தியது ஷேக்ஸ்பியர். அவரது Romeo and Juliet நாடகத்தில் இது வருகிறது. ஆங்கிலத்துக்கு அவர் அளித்த பல கொடைகளில் இதுவும் ஒன்று. இதன் பொருள் பொருளற்ற, பலனளிக்காத முயற்சியில் ஈடுபடுவது. அதாவது a fruitless endeavour. இப்போ ஒரு கேள்வி. இந்த சொலவடை எப்படி பயன்பாட்டுக்கு வந்ததுன்னு நினைக்கிறே?
கணேஷ்: Goose என்றால் வாத்து தானே?
புரொபஸர்: ஆமா
கணேஷ்: அப்படீன்னா இது காட்டு வாத்துகளின் தப்பியோட்டம். அவற்றைப் பின் தொடர்ந்து சென்று பிடிப்பது எவ்வளவு சிரமமோ, அசாத்தியமோ அப்படியே சில அர்த்தமற்ற முயற்சிகளை முன்னெடுப்பது என ஷேக்ஸ்பியர் சொல்கிறார். சரியா?
நடாஷா: சார், The Wild Geese என்று ஒரு பழைய படம் உண்டு. அதற்கும் இதுக்கும் எதாவது சம்பந்தம் உண்டா?
புரொபஸர்: கணேஷ் முதலில் உன்கிட்ட வரேன். காட்டு வாத்துகளைப் பின் தொடர்ந்து போவது எனும் பொருள் இந்த சொலவடைக்கு பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் வருகிறது. வாத்து என்றாலே முட்டாள், லூசு மாதிரி சுற்றுகிற ஒரு பறவை என நினைக்கிறோம். ஆக, அவை பறந்து போகையில் அல்லது ஓடித் திரிகையில் அவற்றைப் பின் தொடர்வது காலவிரயம் என நாம் புரிந்து கொள்கிறோம். நடாஷா, நீ சொல்கிற படத்தைப் பார்த்திருக்கிறேன். அது 1978 - இல் வெளியானது. சில mercenaries ஐரோப்பாவின் சில படைகளில் இணைந்து சாதிக்க மிக சிரமமான ஒன்றை நாடிச் செல்கிறார்கள். அவர்களால் அது முடியுமா என்பதே படம். இதிலும், நடைமுறையில் சாத்தியமில்லாததாய் தோன்றுகிற ஓர் இலக்கை சில அதிரடி நாயகர்கள் அடையப் போராடுகிறார்கள்.
இதனாலே Wild Geese எனும் தலைப்பு இப்படத்துக்கு பொருத்தமாய் உள்ளது. இதில் இவர்கள் தேடிச் செல்கிற இலக்கு மட்டுமல்ல, இவர்களின் ஆளுமையே காட்டுவாத்துகளுக்கானது, தாறுமாறாய்ப் பறந்து செய்யும் இவர்களின் சாதனைகளும் இவற்றை நினைவுபடுத்துகிறது. ஒரு சின்ன தலைப்புக்குள் எவ்வளவு விசயங்களை உணர்த்துகிறார்கள் பாரேன்.
நடாஷா: ஓ... நான் இந்த அளவுக்கு யோசித்ததில்லை.
புரொபஸர்: இன்னொரு விசயம் - ஷேக்ஸ்பியர் இந்த சொலவடையை அறிமுகப்படுத்தின போது, இதன் பொருள் வேறு. அதாவது அன்று wild geese chase என்றால் வாத்துகளின் ஓட்டமல்ல... அல்ல... குதிரைகளின் ஓட்டம்.
நடாஷா: என்னது குதிரையா?
புரொபஸர்: Wild geese chase என்பது ஷேக்ஸ்பியரின் காலத்தில் நடந்த ஒரு விளையாட்டு.
குதிரைகள் குழுவாய் தமக்கு முன் ஓடும் குதிரையைப் பின் தொடர்ந்து ஓடும். இக்குதிரைகளைச் சிலர் செலுத்துவர். வெளியில் இருந்து பார்க்க வாத்துகள் கூட்டமாய் ஓடுவது போல தமாஷாய் இருக்கும். இந்த விளையாட்டு ஒழுங்கற்று ஒரே கூட்டமும் கும்மாளமாய் இருக்கும் என்பதால் தான் ஷேக்ஸ்பியர் இதைக் கிண்டலாய் பயன்படுத்துகிறார். ஷேக்ஸ்பியருடன் இது பிரசித்தமாக இன்றுவரை வேடிக்கையான தொனியில் கையாளப்படுகிறது.
சேஷாச்சலம்: சரி உங்களில் யாரோ ஒரு வார்த்தை பற்றி கேட்டீங்க. ஒருத்தர் தன்னோட தோற்றத்தைப் பற்றி அதிகமா கவலைப்பட்டா, அக்கறை கொண்டா அவரை எப்படி குறிப்பிடறதுன்னு. சரியா?
நடாஷா: ஆமா, அதே தான் கேள்வி.
சேஷாச்சலம்: இந்த மாதிரியானவங்களை பொதுவா vain, self-obsessed, 
vain-glorious, narcissistic என பல மாதிரி சொல்வாங்க. Vain கொஞ்சம் பழைய சொல். Narcissistic இப்பவும் புழக்கத்தில் உள்ள ஒரு பழைய சொல். கிரேக்க தொன்மக் கதை ஒன்றில் இருந்து இது வருகிறது. நார்சிஸஸ் பற்றி கேள்விப்பட்டிருக்கீங்க இல்ல. அவனை போல தன்னைப் பற்றிய பிம்பத்தில் ஆட்பட்டு அதிலேயே சிறைப்பட்டவர்களை உளவியலில் அப்படிச் சொல்வார்கள். தன்னோட தோற்றத்தில் ஒரு மிகச்சின்ன குறை இருந்தால் கண்ணாடி முன் நின்று அதையே மணிக்கணக்காய் ஆராய்ந்து நேரத்தை வீணடிப்பவர்களின் சுபாவத்தை ஒரு நோயாகப் பார்க்கிறோம். இதன் பெயர் body dysmorphic disorder. இந்த ரெண்டும் சுவாரஸ்யமானவை. பெரிய கலைஞர்களிடம் இந்த குணங்களை நம் காண்பதுண்டு. ஆனால் எல்லை மீறிப் போனால் இவை ஒருவரை அழித்து விடும்.
(இனியும் பேசுவோம்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.