இலவச "டேட்டா'... இரவுகளுக்கு "டாட்டா' !
முழுநேரமாகப் பணியாற்றும் எவரும் வறுமையில் வாழத் தகுதியற்றவர்கள்


முழுநேரமாகப் பணியாற்றும் எவரும் வறுமையில் வாழத் தகுதியற்றவர்கள்
- எலிசபெத் வாரன்
""ஏன் தம்பி... லேட்டு?'', ""நேரமாயிடுச்சு... சார்''. ""அதான் தம்பி... ஏன் நேரமாயிடுச்சு?'', ""லேட்டாயிடுச்சு சார்''. ""ஏய்... திரும்பத் திரும்ப... உன்னையப் பாரு'' என்று குரலை உயர்த்தி... ""ஏன் லேட்டுன்னு காரணத்தை சொல்லுடான்னா'' என்று நாம் இழுத்தால் மாணவர்களிடமிருந்து வரும் காரணங்களில் பெரும்பான்மையானது காலையில் படுக்கையிலிருந்து அவர்கள் தாமதமாக எழுந்ததாகத்தானிருக்கும்.
இன்று நிறைய வீடுகளில், இரவு நேரங்களில் "ஜீரோ வாட்ஸ்'... "நைட் லாம்ப்' பயன்பாடுகளுக்கு பதிலாக ஒவ்வொரு படுக்கையிலிருந்தும் செல்லிடைப் பேசிகளிலிருந்து வரும் வெளிச்சமே பயன்படுத்துபவர்களின் கண்ணையும், அவர்களது இரவையும் காலி பண்ணிக் கொண்டிருக்கின்றன. காரணம், இன்று உலகெங்கும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களின் அதிரடி திட்டங்களும், 3 ஜி, 4 ஜி, 5ஜி சேவைகளுக்கான வணிக, வியாபார உத்திகளும் அள்ளிக் கொடுக்கும் இணைய சேவை மற்றும் தேவைகளுக்கான "டேட்டா'க்கள். ஆங்கிலத்தில் data என்பது பன்மைச் சொல்."ஈஹற்ன்ம்' என்பதே இதன் ஒருமைச் சொல் (Singular).
"டேட்டா' என்கிற ஆங்கில சொல்லுக்கு "தகவல்கள்' என்று தமிழில் பொதுவான அர்த்தம் சொன்னாலும், இன்று அது தகவல் தொழில்நுட்ப கவர்ச்சி முகத்தோடு இணைய சேவைகளுக்கான இருப்பு வங்கியாக, ஆற்றலாக, எரிபொருளாக அறியப்படுகிறது.
அப்படியென்றால் அதை "இணைய தகவல்கள்' என்று சொல்லலாம். உங்களது அலைபேசியில் "டேட்டா' தீர்ந்துவிட்டது என்றால், இணைய சேவையைப் பயன்படுத்துவதற்கான எரிபொருள் தீர்ந்துவிட்டது என்றே பொருள். அப்படிப்பட்ட "டேட்டா'வைத்தான் இத்தனை "ஜிபி' (எஆ) இலவசம்... அத்தனை "ஜிபி' இலவசம் என்று சாலையோர வியாபாரிகளைப் போல கூவிக்கூவி விற்பனை செய்கின்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.
எந்தத் திட்டத்துக்கு (டப்ஹய்) எத்தனை "ஜிபி' டேட்டா... எவ்வளவுக் கட்டணம்... எப்பக் கட்டணும் என்று தெரிந்து வைத்திருப்பவர்கள் "பொது அறிவு'ப் புலிகள் என்று அறியப்படுகிறார்கள்.
கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல இருக்கிறது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கான வியாபார உத்திகள்.
எந்த நிறுவனம்... எந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பத்தைத் தாண்டி, எல்லா விளம்பரங்களும் குழப்பமாகத்தான் இருக்கின்றன.
கடந்த வாரம் இருந்த கட்டணம் இந்த வாரம் இல்லை; இந்த வாரம் இருந்த சேவை அடுத்த வாரம் இல்லை என்கிற சுழலுக்குள் சிக்கியிருக்கிறோம் நாம். இப்படிப் பின்னப்பட்டிருக்கும் மாயவலையில் தப்பிக்க முடியாத நிலையில் சிக்கித் தவிப்பவர்களில் முதன்மையானவர்கள் நமது "பொது அறிவு'ப் புலிகள்தான்.
சரி, ஏதோ ஒரு திட்டத்துக்கு, ஏதோ பணத்தைக் கொடுத்து "சிம்' கார்டோ... "டேட்டா' கார்டோ வாங்கியாச்சு. அப்புறம் குறிப்பிட்ட தேதிக்குள்ள அந்த "டேட்டா'வை காலி செய்யணும் அல்லது பயன்படுத்தணும்.
எவ்வளவுதான் அவசியமானதுக்கு முக்கி... முனங்கி, மெனக்கெட்டு பயன்படுத்தினாலும் ஒரு நாளுக்கான அளவையே முழுசாப் பயன்படுத்த முடியாது. அப்புறம்...? அப்புறமென்ன... விடிய விடிய குப்புறப்படுத்து, மல்லாக்கப் படுத்து... கண்ணைக் கெடுத்து, எல்லாத்துக்கும் மேலே தூக்கத்தையும் கெடுத்து, புத்துணர்ச்சியோடு எழுந்திருக்க வேண்டிய காலையில், விடியலில் நடைபிணமாக... வேண்டாவெறுப்பாக, கண் எரிச்சலோடு விழித்து, யப்பா... இந்த மாயவலை நமது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கு நன்மை பயக்குமா என்பதைச் சிந்திப்போம்.
நமது இந்த "மொபைல் டேட்டா' மோகத்தால் 3ஜி, 4ஜி என்கிற அலைக்கற்றை தொழில்நுட்பத்தை வைத்து மிகப் பெரிய சதுரங்க ஆட்டம் ஆடப்படுகிறது. ஒருவர் எவ்வளவு சம்பாதித்தாலும் எத்தனைக் கோடி சொத்து வைத்திருந்தாலும் அவருக்குத் தூக்கமில்லை என்றால், அத்தனையும் வீண்தான். ஆரோக்கியத்துக்கு உணவு எப்படி முக்கியமோ, அப்படித்தான் தூக்கமும். நமது உடலமைப்பின்படி, இரவு பத்து மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும்.
ஏனெனில், சூரியன் உதிக்கும்போதும், அதேபோல் இரவு நேரத்திலும் மட்டும் நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். இது பல இலட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி. முக்கியமாக, மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்குமாம். அப்படியென்றால் இரவில் நமது செல்லிடைப்பேசியின் திரை வெளியிடும் விஷவெளிச்சம்?
இப்பொழுது "டார்க் மோட்' (Dark Mode) என்ற பெயரில் கருப்பு அல்லது இருட்டுத் திரைகளை நமது செல்லிடைப் பேசிகளில் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
இவை நம் கண்களைக் கெடுக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், இரவுத்தூக்கத்தை கெடுத்து... நாம் பார்க்கும் இதுமாதிரியான பணிகள் மற்றும் செயல்கள் எல்லாமே நம் கண்ணையும், உடலையும், வாழ்வையும் பாதிக்கும் என்கிற புரிதலிலிருந்து நாம் மாறுபடக் கூடாது.
நாம் நமது பசிக்கு, உடல் ஆரோக்கியத்திற்கு, வயிறு கொள்ளும் அளவிற்கு சாப்பிடலாம், நிறைய சமைத்துவிட்டோம்... இருக்கிறது என்பதற்காக, அது தீரும் வரை சாப்பிட்டால் எப்படி வயிறு வெடித்து செத்துவிடுவோமோ... அப்படித்தான் வாங்கிய, இருக்கிற "டேட்டா' அனைத்தையும் தீர்த்தே ஆவது என்கிற சவக்குழி முயற்சியும்.
வேண்டாம் நமக்கு அதிகமான டேட்டா! இரவுகளுக்கு சொல்ல வேணாம் "டாட்டா'! விடிந்த பிறகு எழுந்திருக்க வேண்டாம் லேட்டா! இந்த வரிகள் பிரபல அடுக்குமொழி திரைக்கலைஞர் ஒருவரை உங்களுக்கு நினைவுபடுத்தினால், அதற்கு நான் பொறுப்பல்ல.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...