வீரியம் பெருக்கி... காரியம் செய்வோம்!
தற்போதைய தருணத்தில் புத்திசாலித்தனமாகவும் ஆர்வத்துடனும் வாழ்வதே மனம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தின் இரகசியம்.


தற்போதைய தருணத்தில் புத்திசாலித்தனமாகவும் ஆர்வத்துடனும் வாழ்வதே மனம் மற்றும் உடல் ஆகியவற்றின் ஆரோக்கியத்தின் இரகசியம்.
- பரமஹம்ச யோகானந்தர்
இன்று உலகையே அடக்கி, ஒடுக்கி, அதிரச் செய்திருக்கும் ஒரு சொல்லை - ஒரு கிருமியின் பெயரை நாம் சொல்லாதிருப்போம். அந்த வார்த்தையை மீண்டும்... மீண்டும் நம் வாயால் உச்சரிக்க வேண்டாம். காதால் கேட்கவே வேண்டாம்.
நெருக்கடியான நேரங்களில், கொள்ளை நோய் ஏதாவது நம்மைப் பீடித்துவிடுமோ என்கிற பீதியான நேரங்களில் நாம் நம்மை பலப்படுத்தும் வார்த்தைகளை, சொற்களையே பயன்படுத்த வேண்டுமே தவிர, நம்மைத் தொடர்ந்து அச்சுறுத்தும், பலவீனப்படுத்தும் பதங்களை உச்சரிக்கவே கூடாது; மனதால் கூட நினைக்கவே கூடாது என்பதுதான் சரி.
இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சமகாலத்து இளைஞர்கள், மாணவர்கள்- ஏன் ஐம்பது வயதைக் கடந்தவர்கள் பலர் கூட, இப்பொழுது உருவாகியிருக்கும் அசாதாரண கொள்ளை நோய் தொற்று பீதிக்கு, நெருக்கடிக்கு... இதுவரைக்கும் ஆளாகியிருக்க மாட்டார்கள்; எதிர்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
உலக வரலாற்றில் இதுவரை பல்வேறு நோய்த் தொற்றுகள் பல்வேறு காலகட்டங்களில் மானிட இனத்தை மிரட்டியிருக்கிறது. ஏறக்குறைய 50 லட்சம் பேரை விழுங்கிய அன்டோனைன் பிளேக்கில் தொடங்கி, 10 கோடி மனிதர்களை மரணிக்கச் செய்த ஐஸ்டினியன் பிளேக் உட்பட ஜப்பான் பெரியம்மை, ஸ்பானிய மற்றும் ரஷிய ஃபுளு, மூன்றாம் பிளேக், காலரா நோய், கரிய மரணம், பெரியம்மை, எச்.ஐ.வி., (எய்ட்ஸ்), வி.எச். 1 என்.1, எபோலோ என்று நீண்டு கோடிக்கணக்கான மனித உயிர்களை விழுங்கிவிட்டு இன்று புதிய வடிவத்தில், புதிய பெயரில், புதிய வீரியத்தோடு வந்திருக்கும் இந்த ராட்சச நோய் தொற்றிடம் நாம் பலம் குன்றியவர்களாக வீழ்ந்து விடக்கூடாது.
உலகெங்கும் சிக்கன்பாக்ஸ் (Chicken Pox) மற்றும் ஸ்மால் பாக்ஸ் (Small Pox) என்று அறியப்பட்ட கொள்ளை நோயை, தொற்றுநோயை அம்மை நோய் என்று அழைத்தனர் தமிழர்கள். லத்தீன் மொழியில் "புள்ளிகள்' (SPOTTED) என்கிற அர்த்தம் கொடுக்கும் வரியோலா (VARIOLA) மேஜர் மற்றும் மைனர் என்கிற தொற்றுக் கிருமிகளால் பரவிய இந்த நோயை தமிழர்கள் அம்மை நோய் - சின்னம்மை (Chicken Pox) மற்றும் பெரியம்மை (Small Pox) என்றே பொதுவாக அழைத்தனர்.
முதுவேனிற்காலம் அல்லது வெய்யில் காலத்தில் கடும் வெப்பத்தால் மக்களைத் தாக்கும் கொப்புள நோயான அம்மைநோய், பெண் தெய்வமாகிய காளியம்மையால் உண்டானது என்று ஒரு சிலரும், அதையே மாரியம்மனால் உண்டானது என்று ஒரு சிலரும், மொத்தத்தில் அம்மன் என்கிற தெய்வத்தால் உண்டானது என்று நம்பிய காரணத்தால் அதற்கு "அம்மை நோய்' என்று தமிழர்கள் பெயரிட்டார்கள். "அம்மை போட்டிருக்கிறது', "மாரி இறங்கியிருக்கா' என்றும்தான் இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் குறித்து தமிழர்கள் பேசினார்களே தவிர, உலகம் முழுவதும் சொன்ன நோயின் பெயரை திரும்பத் திரும்ப சொல்லவில்லை.
வேனிற்காலத்தில் இந்த நோய் தொற்றிலிருந்து மீள, தற்காத்துக் கொள்ள கிருமி நாசினியாகவும், குளிர்ச்சி தருவதுமாகிய வேப்பிலையோடும், மாரியம்மனோடும் தொடர்புபடுத்திய... இன்றும் தொடர்கிற இந்தப்போக்கை அறிவியலுக்கு அப்பாற்பட்டது, மூட நம்பிக்கை என்றும் நாம் புறந்தள்ளிவிட முடியாததாகவே இருக்கிறது. இதே நம்பிக்கையின் நீட்சியாகவே பிற்காலத்தில் கொற்றவை என்னும் போர் வெற்றித் தெய்வத்தையும் அம்மைநோய் வராமல் தடுப்பதற்காக வணங்கினார்கள் தமிழர்கள். இங்கு "மாரி' என்கிற சொல்லிற்கு மழை, குளிர்ச்சி என்கிற பொருள் உள்ளதை கடும் வெப்பத்தால் வரக்கூடிய இந்த கொள்ளை நோயோடு தொடர்புபடுத்திப் புரிந்துகொள்வது நன்மை பயக்கும்.
ஒரு கொள்ளை நோயை, உலகம் முழுவதும் அந்த நோயின் பெயரிலேயே அழைத்ததற்கும், அதிலிருந்து மாறுபட்டு நம்பிக்கைத் தரக்கூடிய வகையில் அறியப்பட்ட ஒரு தெய்வத்தின் பெயரில் அழைத்ததின் பின்னணியில் உள்ள உளவியலை நாம் புரிந்துகொள்வது அவசியம்.
இந்த நேரத்தில், தமிழகத்தில் தினமணி போன்ற நாளிதழ்கள் இந்தக்கொள்ளை நோயைத் "தீநுண்மி' என்று எழுதிவருவது நேர்மறையான செயலே.
இளைஞர்கள் மற்றும் தேச நலனில் மிகுந்த அக்கறைக்கொண்டவர் பாரதியார். இளைய தலைமுறையின் நல்வாழ்க்கைக்காக, வலிமையான தேசத்தை உருவாக்க அவர் எழுதிய புதிய ஆத்திசூடியில் உடல்பலத்திற்கு அளித்திருக்கும் முக்கியத்துவம் அலாதியானது. "இளைத்தல் இகழ்ச்சி', என்று பலவீனத்திற்கு எதிரான கருத்தை முன்வைக்கும் பாரதி, "நொந்தது சாகும்' என்று மற்றொரு வரியில் எச்சரிக்கிறார். இதை சுவாமி விவேகானந்தர், "பலமே வாழ்வு, பலவீனமே மரணம்' என்று வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார்.
"வையத் தலைமை கொள்' வதற்காக "யெளவனம் (இளமை) காத்தல் செய்' என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்திய பாரதி, "மூப்பினுக்கு இடங்கொடேல்', "நோய்க்கு இடங்கொடேல்' என்றெல்லாம் கூறிவிட்டு, திருமூலரின் "உடல் வளர்த்தேன்... உயிர் வளர்த்தேனே' என்கிற கூற்றிற்கேற்ப "உடலினை உறுதி செய்' என்றும் சொல்கிறார்.
வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு பெயர்களில் வீரியம் கூட்டி மனிதர்களைத் தாக்க வரும் நோய் தொற்றுகளை அதனதன் நோயின் அல்லது கிருமியின் பெயரிலேயே தொடர்ந்து பேசி, பலமான உடலும் மனமும் கொண்ட இளைஞர்கள், மனிதர்கள் கூட பலவீனப்பட்டு தடுமாறாமல், நம்பிக்கையூட்டும் வார்த்தைகளை, பெயர்களைப் பயன்படுத்தி நாம் வீரியம் பெருக்கி, காரியங்கள் பெரிது செய்வோம், நிறைய செய்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...