

செவ்வாய் கிரக ஆராய்ச்சியை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது அமெரிக்காவின் நாசா வடிவமைத்துள்ள பெர்செவரன்ஸ் விண்கலம். செவ்வாய் கிரகத்தில் ஜெசேரோ எனப் பெயரிடப்பட்டுள்ள பள்ளத்தாக்கில் இந்த விண்கலத்தின் ரோவர் நகர்ந்து சென்று ஆய்வில் ஈடுபடவுள்ள நிலையில், இதன் தொடர்ச்சியாக செவ்வாயிலிருந்து பாறை, மண் மாதிரிகளைப் பூமிக்கு கொண்டுவரும் திட்டத்தை நாசாவும், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமும் (இசா) இணைந்து தயாரிக்கவுள்ளன.
அதற்காக "ஏர்பஸ்' என்ற மிகப்பெரிய விண்கலத்தை இசா தயாரிக்கும். செவ்வாய் கிரகத்தில் சேகரிக்கப்படும் மாதிரியை ஆய்வகத்தில் பரிசோதிப்பதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் இருந்ததா என்பதைக் கண்டறிய முடியும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இத்திட்டம் 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செவ்வாயிலிருந்து பாறை, மண் மாதிரிகளை எவ்வாறு பூமிக்குக் கொண்டுவருவது என்பது குறித்தும் நாசாவும், இசாவும் விளக்கம் அளித்துள்ளன. அதன்படி, நாசாவின் பெர்செவரன்ஸ் விண்கலம் 2021, பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தைச் சென்றடையும். செவ்வாய் கிரகத்தின் ரோவர் 23 கேமராக்களையும், ஒரு துளையிடும் கருவியையும் கொண்டுள்ளது. விண்கலத்தின் லேண்டர் தரையிறங்கியதும் இந்த ரோவர், ஜெசேரோ பள்ளத்தாக்கில் நகர்ந்து சென்று ஆய்வுப் பணியில் ஈடுபடும். அப்போது ரோவரின் துளையிடும் கருவி மூலம் பாறை, மண் மாதிரிகள் எடுக்கப்பட்டு வலிமையான உலோக குழாய்களில் சேகரிக்கப்படும். பின்னர், அந்த உலோக குழாய்களை செவ்வாயின் தரைப்பரப்பிலேயே விட்டுவிட்டு ரோவர் தனது பணியைத் தொடரும். விண்கலத்தில் உள்ள புளுட்டோனியத்தை அடிப்படையாகக் கொண்ட எரிசக்தி மூலம் இந்த விண்கலம் 10 ஆண்டுகள் வரை செயல்பட முடியும்.
அதைத் தொடர்ந்து, 2026-ஆம் ஆண்டுக்குப் பின்னர் "இசா' தயாரிக்கும் செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படும். அந்த செயற்கைக்கோள் செவ்வாயின் சுற்றுப்பாதையில் சுற்றி வரும் நிலையில், அதிலிருந்து ஒரு சிறிய ரோவர் செவ்வாயில் தரையிறங்கி நகர்ந்து சென்று, ஏற்கெனவே பெர்செவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் சேகரித்து விட்டுச் சென்றுள்ள பாறை, மண் மாதிரிகள் அடங்கிய உலோக குழாய்களைச் சேகரிக்கும். பின்னர், அவற்றை கால்பந்து அளவிலான ஒரு கன்டெய்னரில் அடைத்து ஒரு சிறிய ராக்கெட்டில் வைக்கும். அந்த ராக்கெட் செவ்வாயின் சுற்றுப்பாதைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், ஏற்கெனவே சுற்றுப்பாதையிலேயே சுற்றிவரும் செயற்கைக்கோளும், அந்த ராக்கெட்டும் சந்திக்கும். அப்போது ராக்கெட்டில் உள்ள கன்டெய்னர் செயற்கைக்கோளில் மாற்றப்பட்டு பூமிக்கு கொண்டுவரப்படும். ஒரு சரக்கு கப்பல்போல செயல்படும் அந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரக பாறை, மண் மாதிரிகளுடன் வடஅமெரிக்காவில் தரையிறங்கும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.
சுமார் 6.5 டன் எடை கொண்ட இந்த "பூமிக்கு திரும்பும் ஆர்பிட்டர்' ரசாயன, மின்சார உந்துவிசை கலவையைப் பயன்படுத்தி செவ்வாய்க்கு செல்லவும், கிரகத்தின் சுற்றுப்பாதையில் சுற்றி வரவும், சேகரிக்கப்பட்ட மாதிரிகளுடன் பூமிக்கு திரும்பவும் செய்யும். 2031-ஆம் ஆண்டுக்குள் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
"இந்த செயற்கைக்கோளை கிரகங்களுக்கு இடையிலான முதல் சரக்கு கப்பல் என்று கூறலாம்' என்கிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் மனித மற்றும் ரோபோ ஆய்வு இயக்குநர் டேவிட் பார்க்கர். "செவ்வாய் கிரகத்திலிருந்து மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவருவது பற்றி பல ஆண்டுகளாகவே பேசி வருகிறோம். அந்தக் கனவு நனவாகும் சூழல் இப்போது ஏற்பட்டிருக்கிறது' என அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதுவரையிலான செவ்வாய் கிரக திட்டங்களில், அங்கு தரையிறங்கும் விண்கலங்களின் ரோவர்கள் அனுப்பும் புகைப்படங்களை வைத்தே விஞ்ஞானிகள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். முதல்முறையாக செவ்வாயிலிருந்து பாறை, மண் மாதிரிகள் கொண்டுவரப்பட்டால், அவற்றை ஆய்வகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்யும்போது, செவ்வாய் பற்றிய மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.