புதிய வேலைக்குத் தேவை... மறுதிறன்!

2020-ஆம் ஆண்டு உற்சாகமாகத்தான் பிறந்தது. மார்ச் மாதம் கரோனா தீநுண்மி தொற்றுநோய் தலைக்காட்ட ஆரம்பித்ததும், அதில் இருந்து மக்களை விடுவிக்க கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கம்
புதிய வேலைக்குத் தேவை... மறுதிறன்!
Updated on
2 min read

2020-ஆம் ஆண்டு உற்சாகமாகத்தான் பிறந்தது. மார்ச் மாதம் கரோனா தீநுண்மி தொற்றுநோய் தலைக்காட்ட ஆரம்பித்ததும், அதில் இருந்து மக்களை விடுவிக்க கொண்டுவரப்பட்ட பொதுமுடக்கம்; வேலைவாய்ப்புச் சந்தையை முடக்கிப்போட்டது. ஏப்ரல், மே மாதங்களைத் தொடர்ந்து பொருளாதார மந்தநிலை கவ்விக் கொண்டது. பிறகு வேலை உதிர்காலமாக மாறிவிட்டது. வேலையை இழந்து செய்வதறியாது திகைத்தவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் தென்பட்டது தான் "மறு திறன்'.

32 வயதான செல்வராஜ், செல்லிடப்பேசி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக கடைமேலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டில் விற்பனை பொறுப்பாளராக உயர்ந்தார். ஆனால் பொதுமுடக்கம் தொடங்கியதும், அவரதுவிற்பனை இலக்கை அடைய முடியாமல் போனதால், வேலையை இழந்துவிட்டார். கரோனா காலத்திற்குப் பின்பு வேலைச் சந்தையில் விற்பனைசார்ந்த வேலைகளுக்கு மவுசு குறைந்துவிடும் என்பதை உணர்ந்த செல்வராஜ், மென்பொருள்சார்ந்த வேலையில் நாட்டம் கொண்டு, இணையதளம், செயலிகள் போன்றவற்றை வடிவமைக்க உதவும் "கோடிங்' பயிற்சியில் சேர்ந்தார். 7 மாத காலப் பயிற்சிக்குப் பிறகு தற்போது மாதத்திற்கு ரூ.30 ஆயிரம் ஊதியம் பெறுகிறார். இது ரூ.50 ஆயிரமாக உயரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இப்படித்தான் செல்வராஜை போல பலரும் பொதுமுடக்க காலத்தை முடங்கி இருப்பதற்கான காலமாகக் கருதாமல் வாய்ப்புகளைத் தேடும் காலமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். வேலைச்சந்தையில் நாம் எங்கு இருக்கிறோம்? என்னவாக விரும்புகிறோம்? அதை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும்? போன்ற கேள்விகளோடு பயணித்து, பதில் தேட முற்பட்டிருக்கிறார்கள். கிடைத்த பதில்தான் "மறு திறன்'.

ஒரு சில வேலைகள் மதிப்பிழந்துவிட்டன. ஒரு சில வேலைகளுக்கு எதிர்காலம் இல்லை. ஒருசில வேலைகளுக்கு கூடுதல் திறன் தேவைப்படுகிறது. காலத்தோடு கரைந்துபோகும் வேலைகளோடு குறைந்த ஊதியத்தில் போராடிக்கொண்டிருப்பதைக் காட்டிலும், எதிர்காலத்தில் வாய்ப்புள்ள வேலைகளுக்கு தம்மைத் தகவமைத்துக்கொண்டு கை நிறையச் சம்பாதிக்கும் ஊதியத்தோடு முன்னேற வேண்டியது அவசியம். அதற்கு "மறு திறன்' தான் ஒரே தீர்வாக அமையும்.

ஒருவரிடம் ஏற்கெனவே பொதிந்துள்ள திறனை புதிய திசைநோக்கி நகர்த்துவது. நல்லசம்பாத்தியங்களை தரும் புதிய திறன்களை கற்றுத்தேர்வது. வளர்ச்சிக்கானவாய்ப்புகளை அள்ளித்தரும். வேலைத்திறன்களை வளர்த்துக்கொள்வது. வேலைத்திறனை மறுகட்டுமானம் செய்வது அல்லது புதியநோக்கில் புதுப்பிப்பது தான் "மறு திறன்'.

2018 - ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உலகப் பொருளாதாரஅமைப்பின் அறிக்கை 2022 - ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் வேலையாட்களுக்கு மறு திறன் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளது. வேலைக்கும் வேலையாளுக்கும் இடையே காணப்படும் திறன் இடைவெளியை நிரப்புவதற்காகவே இந்தியா சார் செயல்திட்டத்தை உலகப் பொருளாதார அமைப்பு வகுத்தளித்திருக்கிறது.

வீட்டில் இருந்தே வேலைசெய்யும் வாய்ப்பு கிடைத்துள்ள வேலையாட்களுக்கு வேலைத்திறனை மேம்படுத்திக்கொள்ள அதாவது "புதியன கற்றலுக்கு' ஓரளவு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதைவிட, வேலை இழந்தவர்களுக்கு புதியவேலைவாய்ப்புக்கு தகவமைத்துக்கொள்ள மறு திறன் தேடலுக்கு கைநிறைய வாய்ப்புகளைத் தந்துள்ளது. எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளைத் தங்குத்தடையில்லாமல் தரக்கூடிய திறன்களை தேடி இளைஞர்கள் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

முன்பெல்லாம், பட்டப்படிப்பை முடித்துவிட்டு வேலைக்குத் தகுந்த திறன்களைக் கற்றுக்கொள்ள இணையவழி பயிலகங்கள் அல்லது பயிற்சிக்கூடங்களை அணுகினார்கள். தற்போது இப்பயிற்சிக்கூடங்களில் வேலையில் இருப்போர், வேலை இழந்தோர் குவியத் தொடங்கியுள்ளனர். வேலையில் இருப்போருக்கு வேலையை இழக்கும் வாய்ப்புள்ளதால், முன்கூட்டியே வேலைவாய்ப்புள்ள திறன்களை தேடிச் செல்ல தொடங்கியுள்ளனர். கணினிசார் நுண்நுட்பங்கள் அடிப்படையிலான வேலைவாய்ப்புகள் அதிகம் காணப்படுவதால், கோடிங், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ், டேட்டா அனலிட்டிக்ஸ் போன்றவற்றுக்கு மாறிவருகிறார்கள். உலக பொருளாதாரச் சந்தையின் வேகத்திற்கு தகுந்தவாறு இந்திய பொருளாதாரச் சந்தையும் தன்னை மாற்றத்திற்கு உட்படுத்திவருவதால், மறு திறன் கட்டமைத்தலில் கவனம் செலுத்த தவறினால், வேலைச்சந்தையில் நடக்கும் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிடும்.

வேலைச்சந்தையில் அடிநிலையில்(குறைவருவாய்) இருப்போர் நடுநிலைக்கு(நடுத்தரவருவாய்) தாவ நினைப்பதும்; நடுநிலையில் இருப்போர் உயர்நிலைக்கு(தலைமைப்பொறுப்பு)தாவ நினைப்பதும் இயல்பான வளர்ச்சி பாதையாகும். வேலை படிநிலைகளில் உயர்ந்து கொண்டே போவதற்கு மறு திறன் கட்டமைப்பு மிக முக்கியமானதாகும். மறு திறன் தேவை என்பது கணினி, தொழில்நுட்பம், பொறியியல், ஆராய்ச்சி, வங்கி, கணக்கியல், கல்வி, நிதி உள்ளிட்ட எல்லாவகையான துறைகளுக்கும் பொருந்துவதாகும்.

மறு திறன் கட்டமைப்புக்கு ஏணியாக பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும், பயிற்சியாளர்களும் இருக்கிறார்கள். வேலைச்சந்தையின் உச்சநிலையில் வேலை இழந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் இருக்கவாபோகிறது? என்று கேட்டால், இருக்கிறது என்பதுதான் பதிலாக கிடைக்கும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் 15 ஆண்டுகாலமாக சந்தைப்படுத்தல் மேலாளராகப் பணியாற்றி வந்த கிருஷ்ணகுமார், ஏப்ரலில் வேலை இழக்க நேர்ந்தது. புதியவேலைகளுக்கான தேடலில் தோல்வி தான் மிஞ்சியது. ஆனால், "மறுத்திறன்' தேடலில் ஈடுபட்டிருப்போருக்கு "பயிற்சி' அளிக்கும் வாய்ப்பை உணர்ந்த கிருஷ்ணகுமார், வீட்டில் இருந்தவாறே சந்தைப்படுத்தல் நுணுக்கங்கள் குறித்து புத்தகங்கள் எழுதித் தள்ளினார். அத்துடன் யூடுயூப் சேனலை தொடங்கி சந்தைப்படுத்தல் நுணுக்கங்களை கற்றுத் தந்து வருகிறார். "தற்போதைக்கு எனக்கு வேலைகிடைக்காது, ஆனாலும் ஆலோசனை தேவைப்படுவோருக்கு அதை வழங்க வேண்டுமென்பதே என் நோக்கமாக உள்ளது. அதற்காகவே என்னை புதிய பிராண்ட் ஆக கட்டமைத்துவருகிறேன்' என்கிறார் கிருஷ்ணகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com