பின்னால் பார்க்காதே... முன்னேறு! முன்னேறு!
""கண்ணை ... எங்க வச்சிருக்க?'' - இந்தக் கேள்வியை, நாம் நமது தெருக்களிலும், சாலைகளிலும் பல சமயங்களில் கேட்டிருப்போம்.


""கண்ணை ... எங்க வச்சிருக்க?'' - இந்தக் கேள்வியை, நாம் நமது தெருக்களிலும், சாலைகளிலும் பல சமயங்களில் கேட்டிருப்போம். சாலைகளில் நடைபெறும் விபத்துச் சூழலின் போதோ, விபத்து நடந்த பிறகோ கேட்கப்படும் முதல் கேள்வி இது. தவறாக வாகனத்தைச் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியவரே முந்திக்கொண்டு இந்தக் கேள்வியை கேட்பதே சகஜம். ஒரு வாகன ஓட்டி பின்னால் திரும்பிப் பார்ப்பதால் ஏற்படும் விபரீதத்தை நன்கு உணர்ந்ததாலேயே, சாலைகளின் இருபக்கமும், மூன்றாவது திசையான பின்புறமும் வாகன ஒட்டிக்கு நன்றாகத் தெரியும் வகையில் வாகனங்களின் இரு பக்கவாட்டிலும் மையப் பகுதியிலும் கண்ணாடிகளைப் பொருத்தி வடிவமைத்திருப்பார்கள் பொறியாளர்களும், வாகன வல்லுநர்களும்.
வாகனம் ஓட்டுவதும், வாழ்க்கையை ஓட்டுவதும் ஏறக்குறைய ஒன்றுதான். நமது பார்வை தீர்க்கமாக நேராக இருந்தாலும், நான்கு திசைகளிலும் கவனம் இல்லாவிட்டால் நமது வாழ்விலும், வாகனப் பயணத்திலும் விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
இந்திய விளையாட்டுச் சரித்திரத்தில் தவிர்க்க முடியாத நட்சத்திரம், இந்தியாவின் தங்க மங்கை, ஆசிய தடகள ராணி போன்ற பல்வேறு பட்டங்களைப் பெற்று விளையாட்டுத்துறையில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு இன்றும் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் பி.டி. உஷா.
தனது 14 வது வயதில் தேசிய அளவில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்று இந்திய அளவில் கவனம் பெற்ற பி.டி. உஷா, 1976 - ஆம் ஆண்டு முதல் 2000 - ஆம் ஆண்டு வரை சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார்.
ஆசியப் போட்டிகளில் 1982 - ஆம் ஆண்டு முதல் 1998 - ஆம் ஆண்டு வரை தடகளப் போட்டிகளில் 13 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் மொத்தம் 33 தங்கப்பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளார். 1985 -ஆம் ஆண்டு நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 11.39 நொடிகளில் கடந்து இவர் படைத்த சாதனை, 1999- ஆம் ஆண்டு லக்னோவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 23.05 நொடிகளில் கடந்து இவர் படைத்த சாதனை மற்றும் 1985 -ஆம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தை 51.61 நொடிகளில் கடந்து பி.டி.உஷா படைத்த இச்சாதனைகள் எதுவுமே இன்றுவரை தேசிய அளவில் முறியடிக்கப்படவேயில்லை.
சாதனையாளராக இந்த மண்ணிற்கு இத்தனை பெருமைகளைச் சேர்த்த பி.டி. உஷா ஆகஸ்ட் 8,1984 லாஸ் ஏஞ்செல்ஸ்சில் நடந்த 400 மீட்டர் தடகள ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில், எல்லைக் கோட்டிற்கு அருகே... பின்னால் வருகிறவர் எவ்வளவு தூரத்தில் வருகிறார் என்று திரும்பிப் பார்த்தாராம். இந்தக் கண் இமைக்கும் நேரத்தில் உஷாவிற்கு அடுத்து வந்துகொண்டிருந்த ரோமானிய நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானா கோஜோக்கரூ உஷாவை முந்தி வெண்கலப்பதக்கத்தை வென்றாராம். பி. டி. உஷா இந்த தூரத்தை 55.42 வினாடிகளில் கடந்தது இன்றும் தேசிய அளவில் முறியடிக்கப்படாத சாதனை. ஆனால், உஷா பின்னால் திரும்பிப் பார்த்த அந்த 0.01 வினாடிகள்... ஒரு வினாடியின் நூற்றில் ஒரு பங்கு நேரத்தை மட்டுமே இழந்ததால் கொடுத்த விலையோ சொல்லி மாளாத வரலாற்றுப் பிழையாகிப் போனது.
வாழ்க்கைப் பயணத்தில் தொடர் தோல்விகளோ, பின்னடைவுகளோ ஒரு மனிதனை சோர்வடையச் செய்துவிடக் கூடாது. அப்படிச் சோர்வடைந்தவர்களில் பலர் பெரும்பாலும், அவர்களது முந்தைய தோல்விகளிலிருந்து கிடைத்த பாடங்களை மட்டும் படிக்காமல், அவ்வப்போது நின்று நிதானித்து... அந்த கசப்பான தருணங்களை மறுபடியும் அசைபோட்டு தங்களைப் பலவீனப்படுத்திகொண்டவர்கள். போட்டித்தேர்வுகள் களத்தில் கூட தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து, தோற்று, விரக்தியின் உச்சத்திற்கே சென்ற அநேக மாணவர்கள், இளைஞர்கள்... அவர்களது கசப்பான தோல்விகளை, அனுபவங்களைத் தொடர்ந்து திரும்பிப் பார்த்து அசை போட்டவர்களாகவே இருந்திருக்கின்றார்கள்.
நம்மைச் சுற்றி நாலா திசைகளிலிருந்தும் நம் மீது ஏவப்படும் கோப அம்புகளை, வீசி எறியப்படும் இழி சொற்களை, வசை மொழிகளை, அவநம்பிக்கை வார்த்தைகளை, தோல்வி சாபங்களை, காழ்ப்புணர்ச்சி கந்தக அடைமொழிகளை... நாம் ஏன் திரும்பிப் பார்க்க வேண்டும்? அதனால் என்ன பயன்? ஒருவரது முன்னேற்றத்தை- வளர்ச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத ஒவ்வாமை நோயால் ஒருவர் கக்கிய விஷத்தை... நாம் மறுபடியும் எடுத்து அசைபோடுவது அருவருப்பில்லையா?
வாகனப் பயணமோ, வாழ்க்கைப் பயணமோ நகர்தல் என்பது அடிப்படையானது. ஓரிடத்திலேயே உறைந்துபோய் விடாமல் நமது இயக்கத்தை, இருப்பை உணர்த்துகிற நகர்தல் முன்னேற்றமாக அமைவது சிறப்பானது. ஊர்ந்தே போவதை விட, அவ்வப்போது வேகமாகச் செல்வது அவசியமாகிறது. நமது பயணம் எந்த மார்க்கத்தில், எந்தத் திசையில் இருக்கிறது என்பதைப் பொறுத்து நிதானம், வேகம், மிதமான வேகம், அதீத வேகம் என்பதெல்லாம் தீர்மானிக்கப்படுகிறது. மித வேகம் என்றுமே நன்று. கட்டுப்பாடற்ற வேகம் என்றுமே ஆபத்தானது.
உலக முக்கியத்துவம்பெற்ற ஓட்டப்பந்தயத்தில் வெறும் 0.01 வினாடிகள் மட்டுமே திரும்பிப் பார்த்த "பயோலி எக்ஸ்பிரஸ்' பி.டி. உஷாவிற்கே இத்தனை பெரிய இழப்பென்றால் நமது பயணத்தின்போது பின்னாலேயே திரும்பி... திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருப்பது யாருக்கும், என்றும் பேராபத்
தானது.
பின்னால் திரும்பிப் பார்ப்பது என்பது முன்னேறிச்செல்பவர்களுக்குப் பெருந்தடை என்பதை நினைவில் கொள்வோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...