

மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்குப் பல்வேறு வழிகள் உள்ளன. ஆனால், இயற்கை நமக்கு அளித்த வழி புன்னகை. புன்னகைக்கும் மகிழ்ச்சிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. நாம் மகிழ்ச்சியாக இருப்பதை புன்னகையை வைத்தே அறிந்து கொள்ள முடியும்.
மனிதர்களுக்குக் கிடைத்த மிகப் பெரும் கொடை புன்னகை. கிடைத்தற்கரிய பரிசு என்று கூறினாலும் கூட அது மிகையாகாது. உலகில் எண்ணிலடங்கா உயிரினங்கள் இருந்தாலும் மனிதப் பிறவிகளுக்கு மட்டுமே கிடைத்த தனிச்சிறப்பான குணம் புன்னகை. நீங்கள் புன்னகைக்கக் கூட வேண்டாம். புன்னகைப்பதைப் பற்றி நினைத்தாலே உங்கள் மனம் பூரிப்படைவது உறுதி. அதுதான் புன்னகைக்கு உள்ள சிறப்பு.
அறிவியல்ரீதியாகவும், மனவியல் ரீதியாகவும் புன்னகைக்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. புன்னகை நம் மனதைக் கட்டுக்குள் வைக்கிறது. புன்னகை நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்கிறது. புன்னகை நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
நம் மனம் புன்னகையின் மூலமே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். உதாரணமாக பல ஆண்டுகள் காணாத நம் பள்ளித் தோழனை திடீரென்று சந்திக்கும்போது புன்னகையையே முதலாவதாக உதிர்ப்போம். மகிழ்ச்சியின் அடிநாதமே புன்னகைதான். நம்முடைய அனுமதியே இல்லாமல் நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்கு புன்னகையால் மட்டுமே முடியும்.
நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நமது மூளையில் "என்டோர்ஃபின்ஸ்' என்ற ஹார்மோன்கள் சுரக்கின்றன. அந்த ஹார்மோன்கள் நம்மைப் புன்னகைப்பதற்குத் தூண்டுகின்றன. அதற்கான கட்டளை மூளையிலிருந்து பிறக்கிறது. அதேபோல், நாம் எப்போதெல்லாம் சிரிக்கிறோமோ அப்போதெல்லாம் என்டோர்ஃபின்ஸ் ஹார்மோன்களைச் சுரக்குமாறு மூளை கட்டளை பிறப்பிக்கிறது. அதன் மூலமாக நாம் மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்கிறோம். இதுதான் புன்னகைப்பதற்குப் பின் உள்ள அறிவியல்பூர்வமான உண்மை.
மேலும், புன்னகைப்பதன் மூலமாக ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்க முடியும். புன்னகை நம்மை மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதால், மனஅழுத்தம், பதற்றம் உள்ளிட்டவை இன்றி நிம்மதியுடன் இருக்க முடியும். புன்னகை செய்வதன் மூலமாக இதயநோய், மனவியல் நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் உடலையும் சீராக வைத்திருக்க முடியும்.
புன்னகை செய்யும்போது மூளையிலுள்ள ஹார்மோன்கள் சீராகச் சுரக்கின்றன. அவை உடலின் ஒட்டுமொத்த இயக்கத்தையும் சீர்படுத்துகின்றன. புன்னகை நமக்கு மகிழ்வான உணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி நமது உடல்நலத்திலும் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.
நமது உடலை மட்டுமல்லாமல் சமூகத்துடனான நல்லுறவையும் புன்னகை மேம்படுத்துகிறது. நாம் எப்போதும் புன்னகையுடன் காணப்பட்டால், அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடுவோம். அந்தப் புன்னகையே நண்பர்களை ஏற்படுத்திக் கொள்ள உதவும். நம்முடன் அனைவரும் அன்பாகப் பழகுவர்.
நம்முடைய புன்னகை நமக்கு மட்டுமல்லாமல் நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும். நீங்களே இதை உணர்ந்திருக்கலாம். உங்களுக்கு யாரென்றே தெரியாதவர், ஏதோ ஒரு காரணத்துக்காக அருகில் அமர்ந்து புன்னகை செய்து கொண்டிருப்பதை நீங்கள் கண்டால், உங்களுக்கும் தானாகவே புன்னகை வரும். அது உங்களுக்குள் மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்தும். புன்னகையின் மூலமாக மகிழ்ச்சியை மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும்.
குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண்கிறோம். அக்குழந்தைகளின் முகம் நினைவுக்கு வந்தாலே நமக்குள் ஏதோ ஒரு புத்துணர்வு பிறந்து விடுகிறது. குழந்தைகள் பெரும்பாலான நேரங்கள் புன்னகைத்துக் கொண்டே இருப்பதாலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஓர் ஆய்வின்படி குழந்தைகள் நாளொன்றுக்கு சராசரியாக 400 முறை புன்னகை செய்கின்றனர். ஆனால், இளம்பருவத்தினர் நாளொன்றுக்கு 20 முறை மட்டுமே புன்னகை செய்கின்றனர். முதுமையை நெருங்கும் வேளையில் புன்னகை என்பதே பெரும்பாலானோருக்கு மறந்து விடுகிறது.
நாமும் குழந்தைகளாக இருந்தபோது அதிகமாகப் புன்னகை செய்திருப்போம். ஆனால், வயது கூடிக்கொண்டு வரும்போது நம் மனதில் கவலைகளைத் தேக்கி வைத்துக் கொள்கிறோம். அதன் காரணமாக புன்னகை அவசியமற்றது என்ற நிலையை நாமே ஏற்படுத்திக் கொண்டுள்ளோம்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. பிரச்னை இல்லாத மனிதன் யார்தான் இருக்கிறார்கள்? அதை எதிர்த்துப் போராவடுதன் மூலமே நமது ஆற்றலும் மனவலிமையும் வெளிப்படும். அதற்கு புன்னகையைத் துணையாக அழைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், மனம் மகிழ்வுடன் இருந்தால், எவ்வளவு பெரிய பிரச்னையையும் எதிர்த்துப் போராடக் கூடிய மனதைரியம் உண்டாகும். மனம் மகிழ்ச்சியில் திளைக்க வேண்டுமெனில் புன்னகை ஒன்றைக் கைக்கொண்டாலே போதுமானது.
துன்பமான சூழ்நிலையிலும் சற்று புன்னகை செய்யக் கற்றுக் கொண்டால், அந்தச் சூழலிலிருந்து விடுபடுவதற்கான மனவலிமை கிடைக்கும். வாழ்க்கை முழுவதும் கவலைகளை சேமித்து வைத்து, அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தால் எதையும் சாதிப்பது அரிதாகிவிடும். வாழ்க்கை எனும் நீர்த்தேக்கத்தில் கவலைகளை புன்னகை என்ற மடை மூலமாக வெளியேற்றிவிட்டு, மகிழ்ச்சியை மட்டும் தேக்கி வைப்போம். புன்னகைப்போம்; மகிழ்வோம்; மற்றவர்களையும் மகிழ்விப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்த வார ஓடிடி படங்கள்!

அதிமுக கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு?

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
முதல் நாளே ரூ. 200 கோடி வசூலிக்கும் துரந்தர் - 2?
வீடியோக்கள்

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

"வெறுப்பு அரசியல் என்ற முள்ளை எடுக்கும் மலர்": சா.பீட்டர் அல்போன்ஸ் புகழாரம்
தினமணி வீடியோ செய்தி...

