சமரசப் பேச்சுத் திறன் - 1
மூன்றாவது நபர் ஒருவரால் வழிநடத்தப்படும் பேரப்பேச்சுத்தான் சமரசப் பேச்சு (மீடியேஷன்) என்பது. அவர் தகராறு கட்சிகளோடு தனித்தனியாகப் பேசி, அவர்களிடையே ஒரு தொடர்புப் பாலமாக செயல்பட்டு, தேவைப்படும்போது அவர்களோடு அமர்ந்து சமரசம் பேசி, தகராறுக்குத் தீர்வு காண உதவுகிறார்.
சமரசம் பேசுபவர் எந்தத் தரப்பையும் சாராதவராக இருப்பார். அவருக்கு தகராறில் எந்தத் தொடர்பும் இருக்காது. அவருக்கு யாரையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கிடையாது. எந்த முடிவையும் அவர் எடுக்க மாட்டார். யார் குற்றவாளி, யார் நிரபராதி என்று முடிவு செய்வதும் அவருடைய வேலை அல்ல.
நமது கலாசாரத்தில் ஊர்ப் பஞ்சாயத்து நாட்டாமை செய்வதும், ஊர்ப் பெரியவர், அரசியல் தலைவர், மதகுரு, அல்லது மூத்தக் குடும்ப உறுப்பினர் என யாராவது ஒருவர் தலையிட்டு மத்தியஸ்தம் பேசுவதும் வழக்கம். ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் "அருகமை நீதி மையங்கள்' (நெய்பர்ஹுட் ஜஸ்டிஸ் சென்டர்ஸ்) போன்ற முறைப்படுத்தப்பட்ட "மாற்று தகராறு தீர்வு' (ஆல்டர்நேடிவ் டிஸ்பியூட் ரெசல்யூஷன்) முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
முறைப்படுத்தப்பட்ட சமரசப் பேச்சில் ஐந்து நிலைகள் உள்ளன:
(1) தொடக்கம்: தகராறு கட்சிகளை மேசைக்கு அழைத்துவந்து, மத்தியஸ்தர் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். சமரசப்பேச்சின் நடைமுறைகளையும், நிபந்தனைகளையும் தெளிவாக விளக்குகிறார்.
(2) தகவல்கள் சேகரித்தல்: இரண்டு கட்சிகளின் கதையாடல்களைக் கவனமாகக் கேட்கிறார். விளக்கங்கள் கோருகிறார். ஒருவர் பேசும்போது இன்னொருவர் இடைமறிக்காதிருக்க வேண்டுகிறார். அவர்கள் முன்வைக்கும் வாதங்களின் சாரங்களை எடுத்துச் சொல்லி, கேள்விகள் கேட்டு, தகவல் பரிமாற்றம் முறையாக நடக்கச் செய்து, பரஸ்பரம் ஒரு புரிதல் எழச்செய்து, இருவருக்குமிடையே ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த ஆவன அனைத்தும் செய்கிறார்.
(3) பிரச்னைகளைக் கண்டுணர்தல்: மறைந்து கிடந்த பிரச்னைகளை வெளிக் கொணர்ந்து, கட்சிகளின் ஈடுபாடுகளைக் கண்டுபிடித்து, தகராறை மறுஉருவாக்கம் செய்து, முரண்பாடுகளைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகக் கையிலெடுத்துப் பேச வைக்கிறார்.
(4) உடன்பாடு ஏற்படுத்துதல்: இருவரும் பல்வேறு தெரிவுகளை உருவாக்கவும், சிக்கல்களைத் தீர்க்கவும் உதவுகிறார். கூட்டாகவோ, தேவைப்பட்டால் தனித்தனியாகவோ பேசி சமரசம் செய்கிறார். தகராறு கட்சிகள் தேக்கநிலையைக் கடக்க உதவுகிறார். உடன்பாடு காணும்போது, ஒப்பந்தத்தை எழுத உதவுகிறார். அதில் காணும் ஓட்டைகளை அடைக்கிறார்.
(5) முடித்துக் கொள்ளுதல்: தகராறு கட்சிகளைப் பாராட்டி, எதிர்காலத்தில் மீண்டும் பிரச்னைகள் எழாதிருக்க கேட்டுக் கொண்டு, சமரசப்பேச்சை முடித்து வைக்கிறார்.
நேரடி பேரப்பேச்சில் மட்டுமே தகராறு கட்சிகள் தங்கள் சுதந்திரத்தை, இறையாண்மையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதையும், மூன்றாம் நபர் ஒருவரைத் தலையிட அனுமதிக்கும்போது, தகராறு அக்கட்சிகளின் கட்டுக்குள்ளிருந்து விடுபட்டு இன்னொருவர் ஆதிக்கத்துக்குள்ளாகிறது என்பதையும் நாம் ஏற்கெனவே விவாதித்திருக்கிறோம்.
ஒரு கணவன் மனைவிக்கு இடையே தங்களுக்குப் புதிதாய்ப் பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் தகராறு எழுந்தது. கணவனும், மனைவியும் தத்தம் தந்தையர் பெயரையே குழந்தைக்குச் சூட்ட வேண்டுமென வாதிட்டனர். இருவரும் ஓர் உடன்பாட்டினை எட்ட முடியாத நிலையில், பக்கத்துவீட்டுக்காரர் தலையிட்டார்.
கணவனின் தந்தையார் பெயர் சிவன் என்றும், மனைவியின் தந்தையாரின் பெயர் கிருஷ்ணன் என்றும் கேட்டறிந்த அந்த மத்தியஸ்தர், குழந்தைக்கு "சிவராமகிருஷ்ணன்' என்று பெயர் சூட்டிவிட்டு, "அடுத்த வேலையைப் பாருங்கள்' என்று அறிவுரைத்தார். நீண்டகால பெயர் பிரச்னை நொடிப்பொழுதில் தீர்க்கப்பட்டதால் தம்பதியர் பெரிதும் நிம்மதியடைந்தனர். ஆனாலும் இருவர் மனங்களிலும் ஒரு கேள்வி எழுந்தது.
அவர்கள் மத்தியஸ்தரிடம் கேட்டார்கள்: ""சிவனும், கிருஷ்ணனும் எங்கள் தந்தையர் பெயர்கள்; ஆனால் அந்த ராமன் பெயர் எப்படி வந்தது?''
மத்தியஸ்தர் சட்டென்று பதில் சொன்னார்: "அது என்னுடைய தந்தையார் பெயர்!''
மூன்றாவது நபரின் தலையீடு தகராறை அவரது ஆதிக்கத்திற்குள் கொண்டுவருவதால், இயன்ற வரை அதைத் தவிர்க்கவே விழைகிறோம். இதனால்தான் காஷ்மீர் பிரச்னையில் அமெரிக்காவின் தலையீட்டை இந்தியா தொடர்ந்து தவிர்க்கிறது; எதிர்க்கிறது.
தவறான மூன்றாவது நபர் ஒருவரிடம் ஒரு தகராறு சிக்கும்போது, அந்தத் தகராறு இன்னும் சிக்கலாகிப் போவதால்தான், "சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட, சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்' என்றெல்லாம் அறிவுரைக்கிறோம்.
ஆனாலும் தகராறு கட்சிகள் ஒருவரோடொருவர் நேரடியாகப் பேசிக்கொள்ளும் சூழ்நிலை இல்லாத நிலையில், சமரசம் பேச தேர்ந்த நடுநிலையாளர் ஒருவரைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறேதுமில்லை. உண்மையில் இதைத் தவிர வேறு வழியுமில்லை.
நமது சமூகத்தில் "கண்ட வழக்கு',"காணா வழக்கு' என்று வகைப்படுத்துகிறோம். எல்லா வழக்குகளையும் நாம் நேரில் கண்டு, சரி-தவறு என்பனவற்றைச் சரியாக உணர்ந்து, சமரசப்பேச்சு நடத்தி, பேசித் தீர்க்க முடியாது. ஆனால் "காணா' வழக்குகளையும் மனக்கண்ணால் பார்த்து, மாந்தநேயத்தில் தோய்த்து, நடுவு நிலை தவறாது, "கண்ட' வழக்குகளாக மாற்றிக் கையாள்வது சிறப்பு.
சமரசப்பேச்சில் ஈடுபடுவோர் நீதிமான்களாகவும், நியாய உணர்வு கொண்டவர்களாகவும் இருப்பது மிகவும் அவசியம். அய்யா வைகுண்டர் அழகாகச் சொல்கிறார்:
"வலியோருக்கு ஒரு வழக்கு வைத்து நீ பேசாதே,
மெலியோருக்கு ஒரு வழக்கு வீணாய் பறையாதே!
பணம் படைத்தவர், அதிகாரம் மிக்கவர், வலிமையுடையவர் என்றும், ஏழ்மையில் தவிப்பவர், அதிகாரம் குன்றியவர், வலிமையில்லாதவர் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் நடுநிலைமை வகுத்தே வழக்குப் பேசவேண்டும்' என்கிறார் அய்யா.
என்னுடைய தந்தையார் பொதுவாழ்வில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தக் காலத்தில், எங்கள் வீட்டிற்கு ஏராளமான வழக்குகள் வந்துசேரும். சிறு பிள்ளையான நான் தகராறு கட்சிகளின் வாத-பிரதிவாதங்களையும், அப்பாவின் சமரசப்பேச்சையும் வேடிக்கை பார்ப்பது வழக்கம். அப்போதெல்லாம் நான் ஒன்றைக் கவனித்தேன். யார் அப்பாவிடம் வழக்கை முதலில் கொண்டுவந்தார்களோ, அவரையே எதிர்த்தரப்பின் முன்னால் வைத்து கடுமையாகச் சாடுவார் அப்பா. "இவரை அணுகி உதவி கேட்டவரையே இப்படித் திட்டுகிறாரே அப்பா?'' என்று எனக்குள்ளேயே நான் குழம்பியது உண்டு. போகப் போகத்தான் அந்த சூட்சுமம் எனக்கு விளங்கியது.
முதலில் அணுகி உதவி கேட்டவருக்கு இவர் சார்பாக இல்லை என்கிற நம்பிக்கையை எதிர்த்தரப்பின் மனதில் ஏற்படுத்தவும், நியாயமாகப் பேசுகிறார் என்கிற நம்பிக்கையை உருவாக்கவும், சமரசப்பேச்சை வெற்றி பெறச் செய்யவும் அப்பாவுக்கு இந்த உத்தி உதவி செய்வதைக் கண்டுணர்ந்தேன்.இம்மாதிரி மத்தியஸ்தங்களில் தலையிடுகிறவர்களுக்கு ஆபத்துகளும் எழுகின்றன. அவர்கள் ஒரு தரப்புக்கு சார்பாக, அநியாயமாக வழக்குப் பேசினால், விபரீத விளைவுகள் ஏற்படலாம்.

அப்படியெல்லாம் நடக்காமல் இருப்பதற்காகத்தான் இம்மாதிரி வாழ்வியல் வித்தைகளை எல்லாம் "இளமையில் கல்' என்கிறோம். எனது மனைவி நடத்தும் உயர்நிலைப் பள்ளியில் "சரியிணை சமரசம்' ( பீர் மீடியேஷன்) எனும் ஒரு நடவடிக்கையை மேற்கொள்கிறார். அதாவது பள்ளிக் குழந்தைகளில் ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் விசேட அங்கி ஒன்றை அணியச் செய்து, அவர்களை சமரசப்பேச்சு நிபுணர்கள் என்று அறிவிக்கிறார். பள்ளிக் குழந்தைகள் தங்கள் தகராறுகளை இந்த நிபுணர்களிடம் எடுத்துச் செல்லலாம். இவர்கள் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, நல்லிணக்கத்தை, நல்லுறவைப் பாதுகாக்கின்றனர்.
இந்த "சரியிணை சமரச முறை'யில் பல்வேறு பயன்கள் உள்ளன. குழந்தைகளின் உலகில் ஓர் ஓங்கி வளர்ந்த, உரக்கப் பேசுகிற பெரியவரின் தலையீடு மற்றும் மிரட்டல் தொனி முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. குழந்தைகள் தங்கள் தரப்பு நியாயங்களைக் கோரி, பேரப்பேச்சு நடத்தும் ஆற்றலைப் பெறுகின்றனர். தகராறுகள் பேசித் தீர்க்கப்படக் கூடியவை எனும் மனப்பாங்கை இளம் வயதிலேயே உள்வாங்குகின்றனர். மேற்படி சமரச நிபுணர்கள் மிகுந்த தன்னம்பிக்கையோடு, தலைமைத்துவத்தோடு, சிறந்த நாளையத் தலைவர்களாக முகிழ்க்கின்றனர்.
(தொடரும்)
கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.
தொடர்புக்கு: spuk2020@hotmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இளைஞா் உயிரிழந்த விவகாரம்: தனிப்பிரிவு போலீஸாா் இட மாற்றம்

சிவகங்கை மாவட்டத்தில் 2,773 பேருக்கு வீடுகள் கட்ட ஆணை

மயிலாடுதுறை-காரைக்குடி பயணிகள் ரயிலுக்கு வரவேற்பு

போலீஸ் விசாரணையில் இளைஞா் உயிரிழந்த விவகாரம் - உயா்நீதிமன்ற உத்தரவால் முடிவுக்கு வந்தது சாலை மறியல்
வீடியோக்கள்

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

சட்டென்று மாறுது வானிலை பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

"உங்க கனவு நிறைவேறியாச்சு! இனி மக்கள் கனவை நினைவாக்குங்கள்!": MK Stalin Speech | DMK
தினமணி வீடியோ செய்தி...

மன அழுத்தமா? காரணங்கள் என்ன? மன நலனுக்கு என்ன செய்ய வேண்டும்?
தினமணி வீடியோ செய்தி...

