அற்ப வெற்றிகளும்... அற்புதமான தோல்விகளும்!
1987 - ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் லாகூரில் நடந்த கடைசி கால் இறுதி போட்டியில் மோதின.


1987 - ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் லாகூரில் நடந்த கடைசி கால் இறுதி போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் வெற்றி பெறுகிற அணியே அரையிறுதியில் விளையாடத் தகுதி பெறும் என்கிற நிலையில், முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் மூன்று பந்துகள் எஞ்சியிருக்கின்ற நிலையில், அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 216 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி ஒரு கட்டத்தில் 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, ஒருவழியாக ஆட்டத்தின் கடைசிப் பந்து வரை போட்டியை நீட்டித்தது.
கடைசி 50- ஆவது ஓவரில் பாகிஸ்தான் எடுக்கவேண்டிய ரன்களோ 14. ஆறு பந்துகளில் பதினான்கு ஓட்டங்கள்... இருப்பதோ ஒரு விக்கெட். பாகிஸ்தானின் கடைசி ஆட்டக்காரராக ஜாஃபார் இறங்கி களத்தில் நின்ற அப்துல் க்வாதிருடன் இணைகிறார். ஆட்டத்தின் முக்கியமான இந்த கடைசி ஓவரை கார்ட்னி வால்ஷ் வீச... 1,1,2,6,2 என்கிற ஓட்ட கணக்கோடு கடைசி ஓவரின் முதல் ஐந்து பந்துகள் கடந்துவிடுகின்றன.
கடைசி ஒரே பந்து... தேவையான ரன்கள் இரண்டு மட்டுமே. பந்தை எதிர்கொள்ள க்வாதிர் தயாராக, பந்தை வீச வால்ஷ் வருவதற்கு முன்னரே எதிர்முனையில் நின்ற ஜாஃபார், ஆடுகளத்தின் பாதி தூரத்தில் வந்து நிற்கிறார். வெற்றி மட்டுமே குறி என்கிற வெறியற்ற நெறியோடு கூடிய விளையாட்டு வீரராக வால்ஷ்... ஜாஃபாரை ஆட்டமிழக்கச் செய்யாமல், அவரை மீண்டும் அவரது எல்லைக்குள் வந்து நிற்க புன்முறுவலோடு அவகாசம் கொடுத்து... நிதானமாக கடைசிப் பந்தை வீசுகிறார். அதில் க்வாதிர் இரண்டு ரன்களை எடுக்க, அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான். உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி ஆட்டத்திற்கு தகுதி பெறாமலேயே வெஸ்ட் இண்டீஸ் வெளியேறியது. கண்ணியமான கார்ட்னி வால்ஷின் செய்கையால், வெஸ்ட் இண்டீஸ் அணி பெற்ற இந்த அற்புதமான தோல்வி, இன்றும்... என்றும் வரலாறு.
கெவின் கார்ட்டர் - உலக புகழ்பெற்ற புகைப்படக்காரர். 1993 - இல் சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது. குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, வறண்ட பூமியில் பசி தாகத்தில்கருகிக் கொண்டிருந்தனர். உள்ளத்தை உலுக்கக்கூடிய படத்துக்கான காட்சியைத் தேடி, தன் கேமராவோடு சூடான் வீதிகளில் அலைந்து காத்திருந்தபோது மனதை பிசையும் அந்தக் காட்சி கெவினின் கண்ணில் பட்டது.
நீண்ட நாட்கள் நீரும் ஆகாரமும் கிட்டாத ஒரு நோஞ்சான் சிறுமி... ஒரு எலும்புக்கூட்டின் தோற்றத்தோடு தவழ்ந்து வருகிறாள். அவள் தவழும் திசை அருகிலிருக்கும் உணவு முகாமை நோக்கியதாக இருக்கிறது. ஏதோ புதுமையான பதிவை நாம் செய்யப்போகிறோம் என்பதை கெவினின் உள்ளுணர்வு சொல்ல, தனது கேமராவை ஆவலோடு தயார் செய்கிறார் கெவின். இந்நிலையில் அவருக்கு இன்னோர் ஆச்சரியமும் காத்திருந்தது. வெறும் உயிர் தாங்கிய பிணமாக தவழ்ந்து கொண்டிருந்த அந்தச் சிறுமியின் பின்னாலேயே ஒரு பெரிய பிணந்தின்னி கழுகும் வந்துகொண்டிருந்தது.
கேமரா கோணம் பார்த்தார் கெவின். கெவின் கார்ட்டரின் கேமராவின் ஒரே பிரமிற்குள் கச்சிதமாக கழுகும் சிறுமியும் பொருந்த "க்ளிக்' செய்தார் கெவின்.
இதற்கடுத்து நடந்ததெல்லாம் வரலாறு.
தான் எடுத்த அந்த அரிதான படத்தை "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு விற்றார் கெவின். இந்தப் படம் பிரபலமான அந்தப் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகிறது. 1994, மே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கிடையே இந்த அரிதான புகைப்படத்திற்காக, புகைப்படத்துறையில் நோபல் பரிசுக்கு இணையாக கருதப்படுகிற "புலிட்சர் விருதி'னைப் பெறுகிறார் கெவின். விருது பெற்ற இரண்டு மாதங்களுக்குப் பின் கெவினின் கார் கடற்கரைக்கு அருகில் அநாமதேயமாக நின்றுகொண்டிருக்கிறது. அதில் பிணமாகிக் கிடந்தார் கெவின். ஆம். உலகப் புகழ் பெற்ற அந்தப் புகைப்படக்காரர் கெவின் கார்ட்டர் தற்கொலை செய்துகொண்டார்.
"நான் மிக மிகப்பெரிய பாவம் செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்' என்கிற வரிகளோடு காவல்துறையினருக்கு அவர் எழுதிய கடிதம் ஒன்று அவரது உடலுக்கு அருகில் கிடந்தது.
பஞ்சத்தால், பசியால் துயருற்ற, சாகக்கிடந்த ஓர் உயிரை அந்த பிணந்தின்னி கழுகிடமிருந்து காப்பாற்றுகிற வாய்ப்பு தனக்குக் கிடைத்தும், அதைச் செய்யாமல், தனக்கு கிடைக்கவிருந்த பெயர், பணம், புகழுக்காக - ஒரு புகைப்படத் தேவைக்காக - ஓர் உயிரை கொன்றுவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சியில் தன்னுயிரை கெவின் மாய்த்துக்கொண்டது அற்ப வெற்றிக்குப் பின் நிகழ்ந்த சோகம்.
வாழ்க்கை எனும் பயணத்தில், நல்வாழ்விற்கான வாய்ப்புகள் அருகி வரும் போட்டி உலகில், குறுக்கு வழியில் வெற்றியைத் தேடாமல் அல்லது நமது வெற்றிக்கு சக போட்டியாளர்கள், மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு இன்னலைத் தராமல் அறத்தோடு, விழுமியங்களோடு நாம் பெறுகின்ற வெற்றியே தரமானது... உண்மையானது. அப்படியில்லாத பட்சத்தில்... கெவின் கார்ட்டரைப் போல அற்ப வெற்றிகளைப் பெறுவதற்குப் பதிலாக வரலாற்றில் நிற்கின்ற கார்ட்னி வால்ஷின் அற்புதமான தோல்வியே மேல் என்பதில் உறுதியாக நிற்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...