விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

முந்தி இருப்பச் செயல்: வாழ்க்கைத் திறன்கள்! - 2

நம் நாட்டில் கல்வி தரமிழந்து கிடக்கிறது. வேலைவாய்ப்பு அருகிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது.

News image
Updated On :24 ஜூன் 2020, 10:19 am

சுப. உதயகுமாரன்

நம் நாட்டில் கல்வி தரமிழந்து கிடக்கிறது. வேலைவாய்ப்பு அருகிக் கொண்டிருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலம் இருண்டு கிடக்கிறது. "என்ன செய்யப் போகிறார்கள் நம் இளைஞர்கள்?' என்கிற கேள்வி ஒவ்வோர் உண்மையான நாட்டுப்பற்றாளர் மனதிலும் ஊடாடிக் கொண்டிருக்கிறது. 
பல்கலைக்கழகங்கள் பல்கிப் பெருகிவிட்டிருக்கும் நிலையில், பணம் கொடுத்து உயர் மதிப்பெண்கள் வாங்குவதும், வாடகை எழுத்தாளர்களை அமர்த்தி முனைவர் பட்டத்திற்கான ஆய்வுக் கட்டுரைகளை எழுதிச் சமர்ப்பிப்பதும், அதிகாரிகளைப் பிடித்து பட்டங்கள் வாங்குவதுமாக கல்வி வெறும் கடைச்சரக்காக மாறிவிட்டிருக்கிறது.
இன்றைய இளைஞர்களைப் பார்க்கும்போது, ஒருவித பரிதாப உணர்வு ஏற்படுகிறது. காரணம் தகுதியும், தரமுமிக்க, உணர்வுபூர்வமான ஆசிரியர்கள் அரிதாகிவிட்டனர். மாணவர் நலன்களுக்காக நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும் குறைந்து விட்டன.  
எல்லாவற்றுக்கும் மேலாக, இளைஞர்களை திசைதிருப்பவும், இடரச் செய்யவும் ஏராளமான விடயங்கள் பரந்து விரிந்துக் கிடக்கின்றன. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சிச் சானல்கள், மேசைக் கணினி, மடிக்கணினி, கைப்பேசி, முகநூல், வாட்சப், இன்ஸ்டாகிராம் என்று என்னென்னவோ  தளங்கள், அவற்றுக்குள் ஆயிரமாயிரம் வேண்டாத விடயங்கள் என இளைஞர்களின் கவனத்தைச் சிதறடிக்கும் பற்பல விடயங்கள் பரவிக் கிடக்கின்றன. 
தனக்கு என்ன வேண்டும் என்கிற தெளிவும், அதை அடைந்தே தீருவேன் என்கிற விடாப்பிடியான உறுதியும், அயரா உழைப்பும் கொண்ட இளைஞர்கள் மட்டுமே தப்பிக்க முடியும் என்பதுதான் இன்றைய நிலைமை.  
தங்களை வழிநடத்துவதற்கும், வேலைக்கமர்த்துவதற்குமான செம்மையான திறன்கள் செழுமையாகப் பெற்றவர்களே மேலோங்கி நிற்க முடியும் என்பதுதான் இன்றைய யதார்த்தம்.  
இன்னோரன்ன வாழ்க்கைத் திறன்களை, மென்திறன்கள் என்றும் அழைக்கிறோம். இவற்றை வழக்கமான  பாடங்களாக மாற்றி, பள்ளிகளில், கல்லூரிகளில் பயிற்றுவிக்கும்போது இவை எதிர்பார்க்கும் பலன்களைத் தரவில்லை. இளைஞர்களின் பலமாக மாறுவதற்கு பதிலாக, இவை பலவீனங்களாக மாறிவிடுகின்றன. 
வாழ்க்கைத் திறன்களை சில பல்கலைக்கழகங்களில் பாடமாக்கினார்கள். ஆனால் நேர்த்தியான  பாடத்திட்டம் வரையறுக்கப்படவில்லை; போதிய வகுப்பு நேரம் ஒதுக்கப்படவில்லை; மாணவர்களுக்கு முறையான  பயிற்சிகள் வழங்கப்படவில்லை;  அந்த தேர்வுத் தாள்களை திருத்திய ஆசிரியர்களுக்கு பாடம் பற்றிய  பரிச்சயம் இருக்கவில்லை.  
அதன் விளைவு, பல மாணவர்கள் ஆளுமை மேம்பாட்டுத்  தேர்வில் தோற்றுப் போனார்கள். இந்தப் பாடத்தில் மதிப்பெண் குறைந்ததால், அல்லது தோல்வியுற்றதால், விருதுகள் வாங்க வேண்டிய மாணவர்கள் பலருக்கு அவ்விருதுகள் கைவிட்டுப்போயின. 
என்னுடைய தலைமுறை,  கல்லூரி மாணவர்களாக இருந்தபோது, நாங்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்று அளவிடுவதற்கு சில நிறுவனங்கள் சில தேர்வு முறைகளை வகுத்திருந்தன. இந்தத் தேர்வுகள் வெறும் மொழித்திறன் மற்றும் தர்க்கத் திறனையும் மட்டுமே பரிசோதித்தன. இறுதியில் சிலர் மற்றவர்களை விட அறிவாளிகள் என்றும், அறிவு என்பது தலைவிதி போல மாற்றப்பட முடியாதது என்றும் சொன்னார்கள். 
ஆனால் இப்போது அந்தச் சிந்தனை முற்றிலுமாக மறுதலிக்கப்படுகிறது. மனித மூளை பல்வேறு அறிவுகளைப் பெற்றிருக்கிறது; எல்லா மனிதர்களுக்குள்ளும் இவற்றில் சில அறிவுகள் நிறைந்திருக்கின்றன என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம். 
ஒவ்வொருவருக்குள்ளும் எந்தெந்த அறிவுகள் நிறைந்திருக்கின்றன என்பதைக் கண்டுணர்ந்து, தகுந்த பயிற்சிகளின் மூலமாகவும், தளரா முயற்சிகளின் மூலமாகவும் அவற்றை இன்னும் மேம்படுத்திக்கொள்ளலாம் என்று இப்போது ஏற்றுக் கொள்கிறோம். 
எந்தெந்த அறிவுத்திறன் யார் யாரிடம் காணப்படுகிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம்: 
மொழியறிவு: வழக்குரைஞர்கள், எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் போன்றோர். 
கணித, தர்க்க அறிவு: பொறியாளர்கள், அறிவியலாளர்கள், மருத்துவர்கள், பகுத்தறிவாளர்கள் முதலானோர். 
இடம்சார் அறிவு: மனதளவில் மாதிரிகள் உருவாக்குகிறவர்கள், கட்டடவியல் நிபுணர்கள், சிற்பிகள், ஓவியர்கள் உள்ளிட்டோர். 
இசையறிவு: பாடகர்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள் போன்றோர். 
உடலறிவு: விளையாட்டு வீரர்கள், தடகள வீரர்கள், கைவினைஞர்கள் போன்றவர்கள். 
மக்களறிவு: விற்பனையாளர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள் போன்றோர். 
உள்ளறிவு: தன்னை உணர்ந்து, தனது திறமைகளை வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறவர்கள், மகிழ்ச்சியாகவும், எல்லோரோடும் இணக்கமாகவும் வாழ்கிறவர்கள். 
இயற்கைசார் அறிவு: வடிவங்கள், உருவங்கள் போன்றவற்றைப் புரிந்து, சீரமைக்கும் வல்லுநர்கள். 
மேற்குறிப்பிட்டவற்றுள் எந்த அறிவு உங்களுக்கு அதிகம் வாய்த்திருக்கிறது என்பதை இனம்கண்டு, அதனை வளர்த்தெடுப்பது முதற்படி.  
அந்த அறிவுக்குக் கைகொடுக்கும், அதனைக் குன்றிலிட்ட விளக்காக மிளிரச் செய்யும் உள்ளார்ந்த மென்திறன்களுக்கு மெருகூட்டுவது இரண்டாவது படி.
இந்த மென்திறன்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். 
மொழி, மொழி சார்ந்த  திறன்கள்: தெளிவாகப் பேசுவது, எழுதுவது, குறிப்பெடுப்பது, கருத்துப்பரிமாற்றம் செய்வது, கேட்பது, சிந்திப்பது, புரிந்துகொள்வது உள்ளிட்டவை. 
தனிமனிதத் திறன்கள்: நடை, உடை, பாவனைத் திறன்கள்; கடமையுணர்வு, பொறுப்புணர்வு, நேர மேலாண்மை, கோப மேலாண்மை, வெறுப்பு மேலாண்மை, பாலியல் மேலாண்மை, படைப்புத்திறன், பரிந்துணர்வு, தலைமைத்துவம், ஆளுமைத் திறன், கூட்டம் நடத்துதல், முடிவெடுத்தல் போன்றவை. 
உறவுத் திறன்கள்: கருத்துப்பரிமாற்றம், தகராறு மேலாண்மை, மீளிணக்கம், மனஅழுத்தம், மேலாண்மை, சமூகம் பேணல், கூட்டுச் செயல்பாடு என்பன. 
தொழில் திறன்கள்: தொழிற்நுட்ப அறிவைப் புதுப்பித்தல், உலக நடப்புக்களை அறிதல், தொடர்ந்த வாசிப்பு, பிற ஈடுபாடுகளை வளர்த்தல், பன்முக செயல்பாடுகள் முதலானவை. 
உலக வாழ்வுத் திறன்கள்: சூழல் அறிதல், அரசியல் புரிதல், மனித உரிமைகள் போற்றல், அகிம்சை பேணல், உயிர்நேயம் காட்டல், நீதி-நியாயம் காத்தல் இன்னபிற. 
மேலே குறிப்பிட்டிருக்கும் திறன்களையும், அவற்றோடு தொடர்புடைய விடயங்களையும் ஒவ்வொன்றாக நாம் படிக்கலாம். 
இயலும்போதெல்லாம், செய்முறைப் பயிற்சிகளையும் இணைத்தே எழுதுகிறேன். இளைஞர்கள் சிறு சிறு குழுக்களாக இணைந்து, அவற்றைச் செய்துபார்ப்பதன் மூலம் இம்மென்திறன்களில் மேலும் பாண்டித்தியம் பெறலாம்.  சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், மென்திறனும் மனப்பழக்கம்.

(தொடரும்)

கட்டுரையாசிரியர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.