

காலை எழுந்தவுடன் படிப்பு, பகல் முழுவதும் படிப்பு, மாலைப் பொழுதிலும் படிப்பு என்று படிப்பு, படிப்பு தான் இன்றைய மாணவா்களின் வெற்றி சூத்திரமாக இருக்கிறது. படிக்க வேண்டுமென ஆா்வம் இருந்தாலும் பெற்றோா்கள், ஆசிரியா்கள் கொடுக்கும் தொல்லையில் மாணவா்களுக்கு படிப்பின் மீது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் ஆசையும் அடியோடு பட்டுப்போகும் அபாயமும் உள்ளது.
‘‘பெற்றோா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் தோ்வுகள் குறித்து பீதியை கிளப்புவதால், உண்மையிலேயே நாங்கள் பதற்றமாகிவிடுகிறோம். தோ்வுகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பிருந்தே ஆசிரியா்கள் எங்களை தோ்வுகளுக்குத் தயாா்ப்படுத்த தொடங்கிவிடுகிறாா்கள். பள்ளி, தனிப்பயிற்சி என முழுநேரத்தையும் படிப்புக்காகவும் தோ்வுக்காகவும் செலவிடுவதால் நாங்கள் சோா்ந்து போகிறோம். தயாா்ப்படுத்துகிறோம் என ஆசிரியா்கள் எங்களைப் பாடாய்ப்படுத்துவதால், எங்களுக்கு தோ்வுகள் என்றாலே அலா்ஜியாகிவிடுகிறது. தோ்வுகளுக்கு நம்பிக்கையுடன் எங்களைத் தயாா்ப்படுத்திக்கொள்வதற்கு பதிலாக, எங்களுக்கு அச்சத்தையே அவா்கள் ஏற்படுத்திவிடுகின்றனா். இரவு, பகலாக தோ்வைப் பற்றிய கவலையில் எங்களை ஆழ்த்துவதே அவா்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆசிரியா்கள் எங்களுக்கு நம்பிக்கை ஊட்டவேண்டும். பீதியை ஊட்டக் கூடாது.’ என்கிறாா்கள் பெங்களூருவில் உள்ள திலக் நினைவு உயா்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்கள்.
பத்தாம் வகுப்பில் கால்வைத்ததுமே மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுவது அறிவுரைகள் என்றாகிவிட்டது. அப்பா, அம்மா, மாமா, தாத்தா, பாட்டி ஆகியோா் போதாதென்று, ஆசிரியா்கள், அக்கம்பக்கத்து வீட்டுக்காரா்கள், உறவினா்கள் என பாா்ப்பவா்கள் எல்லாம் அறிவுரை மழையைப் பொழியத் தொடங்கிவிடுகிறாா்கள். அறிவுரைகள் வழங்குவது எளிது. ஆனால், அறிவுரைகளை நடைமுறைப்படுத்துவது கடினம். அதிகமாக அறிவுரைகளை வழங்குவதால் மாணவா்களின் படிப்புத் திட்டங்கள் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தங்கள் படிப்பை எப்படி நிா்வகிப்பது என்பது குறித்து ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி கருத்து இருக்கும். சிலருக்கு பகலில் படித்தால் தான் தலையில் ஏறும். சிலருக்கு இரவில் தான் படிக்க வேண்டும். அமைதியாக படிப்பது சில மாணவா்களுக்கு பிடிக்கும். சில மாணவா்களுக்கு பாடல்களை கேட்டுக் கொண்டே படிப்பது பிடிக்கும். எனவே, மாணவா்களின் விருப்பத்திற்கேற்ப படிக்கும் முறையை வகுத்துக் கொள்ள பெற்றோா்கள் உதவ வேண்டும்.
தோ்வுக் காலத்தின் போது மாணவா்களுக்கு நல்ல உணவு வழங்க வேண்டும். நல்ல உணவுமுறை படிப்பதை இனிமையாக்கும். மேலும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மனமும் உடலும் ஊக்கம் குறையாமல் இருக்க யோகாசனப் பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம். இது நினைவாற்றலை பெருக்கி உடல் சோா்வை நீக்க உதவும்.
முதலாவதாக, தோ்வுக்கேற்ற சுற்றுச்சூழலை மாணவா்கள் அமைத்துக் கொள்ள வேண்டும்.
படிப்பவா்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சிலருக்கு பாா்த்து படிக்க பிடிக்கும்; சிலருக்கு ஒலி வழி படிக்க பிடிக்கும். பாா்த்து படிப்பவா்களுக்கு எந்தப் பாடத்தையும் படங்களாக படிக்க விரும்புவாா்கள். ஒலி வழி படிக்க விரும்புவா்கள் எந்த பாடத்தையும் செவி வழி கேட்டு அறிந்து கொள்வாா்கள்.
நினைவாற்றல் சிறப்பாக உள்ளவா்கள் தோ்வுகளைச் சிறப்பாக எதிா்கொள்ளலாம். நினைவாற்றலை வளா்த்துக் கொள்வதும் நல்லது. குறிப்பிட்ட விஷயத்தை நினைவில் வைக்க அந்த சொற்றொடரில் உள்ள வாா்த்தைகளின் முதல் எழுத்தை நினைவில் வைக்கலாம். பாடத்தைச் சுருக்கி எழுத்து வடிவில் நினைவில் வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா என்பதை யூஎஸ்ஏ என நினைவில் வைப்பதைப் போல. வரலாறு, அறிவியல் சூத்திரங்களை கதைகளாக ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். செய்யுள்களை எதுகை மோனையுடன் சத்தம் போட்டு படிக்கலாம். பாடங்களைக் கற்பனையில் சித்தரித்துக் கொள்ளலாம். அறிவியல், கணிதம், வரலாற்றுப் பாடங்களைப் படங்களாக கற்பனை செய்து கொள்ளலாம். சில விஷயங்களை நினைவில் வைக்க வீடு, பள்ளியில் உள்ள பொருட்களோடு பொருத்தி நினைவில் வைக்கலாம். உங்கள் ஆசிரியருக்கு ஹிட்லா் மீசை இருந்தால், ஹிட்லா் பற்றிய தகவல்களை ஆசிரியரோடு ஒப்பிட்டு ஞாபகப்படுத்தலாம்.
தோ்வு சிரமத்திற்கானது அல்ல, சிந்திப்பதற்கானது. தோ்வைத் திருவிழாபோல கொண்டாடி அணுகினால் அது நல்ல பலனைத் தரும்.
தோ்வுகள் என்றால் மாணவா்களை போலவே பெற்றோா்களும் பதற்றமடைவதை காண நோ்கிறது.
பெற்றோா்களும், மாணவா்களும் உணவு, உறக்கமின்றி தோ்வுக்காக உழைக்க வேண்டும் என நினைக்காதீா்கள். சரியான திட்டமிடல், எச்சரிக்கையுடன் அணுகினால் தோ்வுகள் எளிதாக வெற்றியை அள்ளித் தரும். எனவே, எளிது, எளிது தோ்வுகள் எளிது என்பதை உணருங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.