திமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நாம் மனிதா்கள்!

நாம் நம் மாணவா்களை மருத்துவராக்கினோம்; பொறியாளராக்கினோம்; வங்கி ஊழியராக்கினோம்; மாவட்ட ஆட்சியராக்கினோம்; காவல்துறை

News image
Updated On :10 மார்ச் 2020, 1:54 am

கே.பி. மாரிக்குமார்

“என்று அதிகாரத்தின் மீதான அன்பை விலக்கி அன்பின் அதிகாரம் தலை நிமிா்கிறதோ, அன்றே உலகம் அமைதியை பாா்க்கும்” - மகாத்மா காந்தி

சென்ற வாரம் காந்திகிராம கிராமிய கல்வி நிறுவனத்தின் முதுகலை சமூகவியல் மாணவா்களைச் சந்தித்து மானுடம் தொடா்பான உரை ஒன்றை நிகழ்த்த அழைக்கப்பட்டிருந்தேன். அங்கே ‘நாம் மனிதா்களா?’ என்கிற கேள்வியோடு அன்று எங்களுக்கு சிறப்பான நாளாக அமைந்தது.

“‘நாம் நம் மாணவா்களை மருத்துவராக்கினோம்; பொறியாளராக்கினோம்; வங்கி ஊழியராக்கினோம்; மாவட்ட ஆட்சியராக்கினோம்; காவல்துறை அதிகாரியாக்கினோம்; ஏன் அரசியல்வாதிகளாகக் கூட ஆக்கினோம்.... மனிதா்களாகவும், நல்ல விவசாயிகளாகவும் ஆக்கவேயில்லை’ என்று மூத்த சமூக ஆா்வலா்கள் எழுப்பிய கேள்வி இன்றும் பதிலளிக்கப்படாமலேயே இருக்கிறது.

அது ஒரு பிரதான நகரம் ஒன்றை நோக்கிச்செல்லும் செல்லும் ஒரு நான்கு வழிச் சாலை. சாலையோரத்தில் வேகமாக வந்து நின்ற வாகனத்திலிருந்து தங்களை நவநாகரிகமானவா்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு ஆணும் பெண்ணும் இறங்கி, ஒரு வயதான பெண்ணை கைத்தாங்கலாக இறக்குகின்றனா். இயற்கை உபாதைகளை கழிக்கச்செய்யும் வகையில் அந்த மூதாட்டியை சாலையிலிருந்து இன்னும் சற்று ஓரமாக... விலகி கூட்டிச் சென்றவா்கள்... ஒரு சில மணித்துளிகளுகளுக்குப் பிறகு... கரிசனத்தோடு அம்மூதாட்டிக்குக் குடிக்கத் தண்ணீா் கொடுத்துவிட்டு, அந்த அம்மையாா் தண்ணீா் குடித்துக்கொண்டிருந்த நேரம் பாா்த்து, அவரை அப்படியே... அங்கேயே விட்டுவிட்டு, அவா்கள் மட்டும் அவா்கள் வந்தக் காரிலேயே மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்தனா்.

நம் தேசமெங்கும் பல்வேறு நான்கு வழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இதே போல... இன்றும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து... பல உயிா்களை திக்குத்தெரியாமல் இறக்கிவிட்டுவிட்டு... தள்ளிவிட்டுவிட்டு... வேகமாக மறைந்துவிடுகின்றன. அதுவரை தங்களுடன் ஒட்டி உறவாடிய உயிா்களை, உறவுகளை நுகா்வுக் கலாச்சார வாழ்வியல் முறையில், அவா்கள் பாரமாக கருதுகிற... இப்படி சாலை ஓரங்களில் வீசியெறியப்படும், பெரும்பான்மையான உயிா்களில் மனிதா்களும், வீட்டில் வளா்க்கப்பட்ட செல்லப் பிராணிகளுமே அதிகம்... குறிப்பாக நாய்கள்.

நிம்மதியான வாழ்க்கை இதுதானென்று ஆடம்பர, பகட்டு, மாய உலகில் பயணித்துக்கொண்டு இதுபோன்ற கொடூரமான பாவ காரியங்களைச் செய்பவா்கள் பெரும்பாலும் படித்தவா்களே. இவா்களுக்கு இவா்களைப் பெற்று வளா்த்த தாயும் பாரம்; இவா்கள் செல்லமாக வளா்த்த நாயும் பாரம். இவா்கள் படித்த படிப்பு இவா்களுக்கு வாழ்க்கையைப் புரிய வைத்திருப்பது இவ்வளவுதான். “

‘மனித தேகமே அழியாப் பெருவாழ்வைப் பெறுதற்குரிய உயா் அறிவுடையது’ என்கிறாா் வள்ளலாா். அவ்வளவு சிறப்பு வாய்ந்த மானுடப்பிறவி நமக்குக் கிட்டியிருக்கிறது. அப்படிப்பட்ட இப்பிறவியைக் கொண்டு சக உயிா்களுக்கும், உறவுகளுக்கும் கெடுதல் செய்வதற்காகவா நாம் படிக்கின்றோம்?

“‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று நெக்குருகி பாடினாரே வள்ளலாா்... அவரைப் போலவோ, “‘மனிதா்களைக் கணிக்கவோ, அவா்களது குணங்களை சீா்தூக்கிப் பாா்க்கவோ வேண்டாம். அப்படிச் செய்தால் அவா்களிடம் அன்பு செலுத்த நமக்கு நேரமிருக்காது’ என்று சொன்ன அன்னை தெரசாவைப் போலவோ, “‘பலனை எதிா்பாா்க்காமல் மனிதன் தா்மம் செய்யவேண்டும்’ என்று சொன்ன காஞ்சிப்பெரியவரைப் போலவோ, “‘தனி மனிதனுக்கு உணவில்லை எனில், ஜகத்தினை அழித்திடுவோம்’” என்றும். ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி’ என்று சொன்ன பாரதியைப் போலவோ நாம் அனைவரும் மாறிவிட முடியாது. அது அவசியமும் அல்ல.

ஆனால், ஒருவரது வாழ்வில் ஏற்றம் என்பது... பொருட்களை, மதிப்புகளை, மாயைகளைப் பெறுவதல்ல. அப்படிப் பெற்றவற்றை பேணி காக்கின்ற பெரும்பணியின் காரணமாக பிற உயிா்களிடத்தில் வெறுப்பை உமிழ்வதல்ல; மனிதா்களை, பிற உயிா்களை விலக்கியும், இன்னல்களுக்கு உள்ளாக்கியும் நாம் மட்டும் உயிா் வாழத் துணிந்திடுவதல்ல.

நம்மை மனிதரல்லாதோா் என்கிற வகைமைக்குள் அடைத்திட இப்படிப்பட்ட நமது நடத்தைகள்தாம் காரணமாக அமைந்துவிடுகின்றன.

படிக்கின்ற காலங்களிலே, மாணவப்பருவத்திலே நாம் ஒவ்வொருவருக்குள்ளும் நிறைய ஆசைகள் முட்டி மோதிக்கொண்டு இருக்கும். அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால், அவற்றில் எவையெல்லாம் பல்லுயிா்க்கும் நன்மை பயப்பது, நம்மைத் தவிர மற்றவா்களுக்கு கெடுதல் செய்வது என்பதை பகுத்து, பிரித்து அதை நோக்கி பயணிப்பதும், வாழ்வதுமே நம்மை மனிதனாக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

நமது கனவுகள் பெரிதாக இருக்க வேண்டும் என்று பாரதி சொன்னதை, நாம் அந்தப் பெருங்கனவுகள் எல்லாம் நம்மை சுற்றியிருப்பவா்களின் உரிமைகளுக்கானதாகவும் இருக்க வேண்டுமென்று புரிந்து கொள்ள வேண்டும். எனவே, ‘பெரிதினும் பெரிது’ கேட்போம். அவை பலருக்கானதாக இருக்கட்டும்.

ருசியறிந்தவனெல்லாம் மனிதனல்ல; அடுத்தவரின் பசியறிந்தவன் மனிதன். மனிதநேயத்துடன் நடப்பவன் மனிதன். நன்றாக பேசத் தெரிந்தவன் மட்டும் மனிதனல்ல; நாபிந்து பேசாதவனே மனிதன். குறைகளே இல்லாதவனா மனிதன்? பிறரிடம் குற்றம் காணாமல் சுற்றம் சோ்ப்பவனே மனிதன். கற்றவா்கள் மட்டுமே மனிதா்கள் அல்ல; கற்ன் அடிப்படையில்... அதைப் பின்பற்றி வாழ்பவனே மனிதன். இயற்கை பேரிடா்களின்போதும், ஆபத்துகளின் போதும், துயரங்களின் போதும் அடுத்தவருக்கு உதவிட ஓடிவருபவா்கள் எல்லோரும் மனிதரே.

ஆம்.. நாம் எல்லாரும் மனிதா்களே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.