பட்டதாரிகளே... உங்களுக்கு ஃபியூஸ் போடத் தெரியுமா?
"முதல் விஷயம், துன்பங்களுக்கு அஞ்சாதீர்கள்.இரண்டாவது, மரணத்துக்கு அஞ்சாதீர்கள்'


கடந்த ஞாயிறன்று நண்பர் ஒருவர் என்னை அலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு, ""என்ன சார்! ஞாயிறு விடுமுறைங்கறதால ஓய்வுல இருக்கீங்களா?'' என்று கேட்டார். உலக ஊரடங்கையே மறந்துவிட்டு இப்படிக் கேள்விகள் கேட்கமுடியுமா? என்று கிறுகிறுத்து... பின்னர் தெளிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
தண்ணீர் குழாய்கள், மின்சார சாதனங்கள் மற்றும் பயன்பாட்டுக் கருவிகளின் பழுது நீக்கும் பணிகள், இதர தொழிற்சாலைகள் மற்றும் உற்பத்தி கூடங்களின் பணியாளர்கள் யாருக்கும் வேலையில்லை. படித்தவர்களாக, பட்டதாரிகளாக, அரசு மற்றும் பொதுத்துறை ஊழியராக... உயர் அலுவலராக, மருத்துவராக, பொறியாளராக, ஊடகவியலாளராக, கலைத்துறையினராக ஓரளவு வசதியான வாழ்க்கை வாழும் நம்மில் எத்தனை பேருக்கு நம் வீட்டின் அவசர மின் பழுதுகள், தண்ணீர் குழாய் அடைப்புகள் போன்றவற்றைச் சரிசெய்யத் தெரியும்? சாதாராண "ஃபியுஸ்' போட வேண்டிய அவசரத்திற்குக் கூட அதற்கான ஊழியர்களைத் தேடி நாம் காத்திருக்கின்றோமே!
ஒரு பிளம்பரோ, ஓர் எலக்ட்ரீசியனோ தொழிற்சாலைக்கும் சரி, குடும்பத்துக்கும் சரி, மிகவும் பயன்படுகிறவர்கள். ஆனால் அவர்களுக்கு உரிய கெüரவம் இன்றுவரை கொடுக்கப்பட்டதில்லை. எப்படி கரோனா தொடங்கிய காலம் முதல் சுகாதார, தூய்மைப் பணியாளர்கள் முதன்முதலாக புனிதர்களாக, ஏன்... மனிதர்களாவும் கூடத்தான்... பார்க்கப்பட்டனரோ, அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும் கூட ... திறன் சார்ந்த இந்த அவசியப் பணியாளர்களுக்கான, தொழிலாளர்களுக்கான மரியாதையை இனியாவது கொடுக்க வேண்டிய அவசியமான சூழ்நிலையை இந்த கரோனா காலகட்டம் ஏற்படுத்தியிருக்கிறது.
இன்று இதுமாதிரியான திறன் சார்ந்த பணிக்கு ஆட்கள் அருகி வருகிறார்கள். இருப்பவர்களில் அனுபவத்தோடு கூடிய நேர்மையான உழைப்பாளிகளுக்கும் பற்றாக்குறையே இருக்கிறது. தங்களை மேலாண்மைப் பட்டதாரிகளாக, பொறியாளராக, முதுகலை மற்றும் அறிவியல் பட்டம் பெற்றவர்களாகவும் சொல்லிக் கொள்ளும் பல இளைஞர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலையோ... அல்லது வருமானத்திற்கான எந்த வேலையோ கூட இல்லாமல் இருக்கிறார்களே தவிர, பிளம்பர், எலக்ட்ரீசியன், கார்ப்பென்டர் போன்ற தொழிலை கற்றுக்கொள்வதற்கோ, தெரிந்துகொள்வதற்கோ விரும்புவதாகத் தெரியவில்லை.
ஒரு மனிதனின், ஒரு குடும்பத்தின் வாழ்விற்குத் தேவையான அடிப்படைத் திறன்களை வளர்த்துக்கொள்வதில் நாம் அசட்டையாக இருந்திருக்கின்றோம், இருக்கின்றோம் என்றால், அதற்கு என்ன... அல்லது யார் காரணம்? உழவுக்கு வந்தனை செய்வதாகச் சொல்லி உழவர்களை நாம் புறந்தள்ளியதுபோல அல்லாமல், தொழிலுக்கும், தொழில் திறனுக்கும், கை நுணுக்கத்துக்கும் ஊரார் கையெடுத்துக் கும்பிடும் மரியாதையையும், நன்றி மனப்பான்மையையும் மெல்ல மெல்ல உருவாக்கி வைப்பது இந்தத் தேசத்தின், மானுடத்தின் எதிர்காலத்திற்கு நல்லது.
"ஒரு மனிதன் தன் வாழ்நாளில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் பேரின் உழைப்பையாவது பயன்படுத்தியிருப்பான்' என்கிறது ஒரு கிரேக்கத் தத்துவம். சந்தைகளில் காய்கறி வாசத்தோடு மூட்டை தூக்கி வாழும் உழைப்பாளிகள் முதல் நம் வீட்டில் தண்ணீர் குழாய் ஒழுகலைச் சரிசெய்து கொடுக்க ஓடோடி வரும் தொழிலாளர்கள் வரை எல்லாருமே உழைப்பாளிகள்தாம். திறன்சார்ந்த தொழிலாளிகள்தாம். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்காக இவர்களைப் போன்றோரில் யாரோ ஒருவர் ஏதோ ஓர் உழைப்பை நமக்கு கொடுத்திருப்பார்கள்.
காலையில் செய்தித்தாள் போடும் பையனில் தொடங்கி இரவுத் தூக்கத்திற்கு நாம் தட்டிவிடும் மின்விசிறி வரை யாரோ ஒருவருடைய உழைப்பு நமக்கு இன்றியமையாததாகிறது. நாம் நிம்மதியாக வாழ உழைக்கும் மனிதர்களை, போகிற போக்கில் நாம் சந்தித்துவிட்டு பின்னர் மறந்துவிடுவது, அவர்களுக்கான மரியாதையை, அங்கீகாரத்தைக் கொடுக்காமல் விடுவதின் விளைவே இதுபோன்று திறன் உழைப்பு சார்ந்த பணிகள் பக்கம் பாராமுகம் காட்டிக் கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைஞர்களும், மாணவர்களும்.
திரைப்பட இயக்குநர் நடிகர் தங்கர் பச்சான் ஒருமுறை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவரிடம், "எதுக்குப் படிக்கிறே?' என்று கேட்டாராம். ""அப்பத்தான் ஏ.சி., ரூம்ல உட்காருகிற மாதிரி வேலை கிடைக்கும்'' என்று சொன்னானாம் அந்த புத்திசாலித் தம்பி.
""சரி! அந்த ஏ.சி., பழுதானா, அதைச் சரி செய்ய... யாரு தம்பி வருவா? அதுக்கு யாரு படிப்பா?'' என்கிற கேள்வியை நாம் இத்தகைய மாணவர்களின் முன்வைக்க நிர்பந்திக்கப்படுகிறோம். ""மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் இந்த மனப்பான்மைக்கு நம் ஆசிரியர்களும், பெற்றோர்களுமே பொறுப்பு'' என்கிறார் தங்கர் பச்சான். ஆசிரியர், மாணவர், பெற்றோர், ஊர், நாம் என்று எல்லாரும் இந்தத் தொழில்களை நோக்கிய ஆரோக்கியமான மனப்பான்மைக்கு மாறும் காலநெருக்கடியில் இருக்கிறோம்.
மனித நாகரிக வரலாற்றின் பக்கங்களில் இந்தக் கரோனா கால மாற்றங்கள் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திவிட்டு செல்லவிருக்கிறது. அதன்படி, தரமான திறன்சார்ந்த பணிகளையும், யுக்திகளையும், தொழில்களையும் தங்களுடைய பிரதான பட்டப்படிப்புகளோடு சேர்த்தே ஆர்வத்தோடு படித்தும், கற்றும் வைத்து கொள்ளத் தயாராக இருக்கும் இன்றைய மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கே நாளை நல்லதொரு வரவேற்பும், எதிர்காலமும் காத்திருக்கிறது. கற்றுக் கொள்ளத் துடிக்கிற ஒவ்வோர் இளைஞருக்கும், மாணவருக்கும் அவர்களுக்கு வேண்டிய பொன்னான காலத்தை, நேரத்தை இந்த கரோனா தீநுண்மி சோதனையோடு பெருங்கொடையாக கொடுத்திருக்கிறது.
"கைவினை கரவேல்', என்கிற தலைப்பில் கையில் ஒரு கைத்தொழில் இருக்க, என்றும் நீ ஒரு முதலாளி, என்று சொல்லப்பட்டிருக்கும் கருத்தின்படி, இது திறன் சார்ந்த இதரப் பணிகளுக்கும் பொருந்தும் என்பதை ஆணித்தரமாக நாம் நம்புவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...