தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

எங்கேயும்... எப்போதும்!

ஜப்பானில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டோக்கியோவின் ஆராய்ச்சியாளர்கள், முகக்கவசம் எந்த அளவுக்கு கரோனா தீநுண்மித் தொற்றைத் தடுக்கிறது என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

News image
Updated On :3 நவம்பர் 2020, 12:30 am

DIN


முகக்கவசம்... எந்த அளவுக்குப் பாதுகாப்பு?

ஜப்பானில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டோக்கியோவின் ஆராய்ச்சியாளர்கள், முகக்கவசம் எந்த அளவுக்கு கரோனா தீநுண்மித் தொற்றைத் தடுக்கிறது என்று ஆராய்ந்திருக்கிறார்கள்.

முகக்கவசம் அணியாதவர்களை விட, பருத்தித்துணியிலான சாதாரண முகக்கவசம் அணிந்திருப்பது 40 சதவீதம் பாதுகாப்பானது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். மருத்துவப் பணியாளர்கள் அணியும் என்95 முகக் கவசம் 90 சதவீதமான கரோனாத் தொற்றைத் தடுக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர். அதேசமயம் அந்த முகக்கவசம் முகத்துடன் இறுக்கமாகப் பொருந்தியிருக்க வேண்டுமாம். முகக்கவசங்களில் தேவையில்லாமல் கை வைப்பது, அடிக்கடி கழற்றி மாட்டுவது எல்லாம் கரோனா தொற்றுக்கு வழி வகுக்கும் என்றும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

எஸ்கலேட்டரின் கைப்பிடியில் தீநுண்மித் தொற்று!



தென்கொரியாவைச் சேர்ந்தவர் கிம் கியாங் யியான். இவருடைய 13 வயது மகள் ஒரு முறை எஸ்கலேட்டரில் செல்லும்போது தவறி விழுந்ததால் அவருக்குக் காயம் ஏற்பட்டது. எஸ்கலேட்டரின் கைப்பிடியை பிடிக்காமல் அவர் சென்றதால்தான் அந்த விபத்து ஏற்பட்டது.

கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, வெளியே வரவே பலரும் பயப்பட்டநிலையில், பல நாடுகளில் பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டிருக்கிறது. மக்கள் வணிக வளாகங்கள், அலுவலகங்கள், ரயில்நிலையங்கள் என பல இடங்களுக்குச் சென்று வருகிறார்கள். எஸ்கலேட்டரில் செல்லும்போது, அதன் கைப்பிடியில் கை வைக்காமல் ஒருவிதத் துணிச்சலுடன் இதற்கு முன்பு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சென்ற இளம் தலைமுறையினர், இப்போது கைப்பிடியில் கை வைத்தால் கரோனா தொற்றிக் கொள்ளுமோ என்ற அச்சத்தில் கைப்பிடியைத் தொடுவதில்லை.

தன் மகளுக்கு ஏற்பட்ட நிலை பிறருக்கும் ஏற்படக் கூடாது என்று நினைத்த கிம் கியாங் யியான், எஸ்கலேட்டரின் கைப்பிடியைத் தூய்மைப்படுத்தும் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார். இதை எஸ்கலேட்டரில் பொருத்திவிட்டால், எப்போதும் நகர்ந்து கொண்டிருக்கும் அதன் கைப்பிடி தூய்மையாகிக் கொண்டே இருக்கும்.

அதற்கு புற ஊதாக்கதிர் } சி பயன்படுத்தப்படுகிறது. எஸ்கலேட்டரின் கைப்பிடியைத் தூய்மைப்படுத்தும் இந்தக் கருவியின் பெயர் "கிளியர்வின்'. இது அனைத்துவிதமான தீநுண்மிகள், பாக்டீரியாக்கள் ஆகியவற்றை அளிக்கும் திறன் உடையது.

எஸ்கலேட்டரின் இயக்கத்தை வைத்து இந்தக் கருவியில் உள்ள டைனமோ இயங்குகிறது. அதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை வைத்து புற ஊதாக்கதிர்கள் உற்பத்தியாகின்றன. லண்டன் ஸ்டேன்ஸ்டெட் விமான நிலையத்தில் இந்தக் கருவி இப்போது பொருத்தப்பட்டுள்ளது.


இதய நோய்கள்... குளிர்பானங்கள்!

பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களை அருந்துவது தற்போது பேஷனாகிவிட்டது. இளம்வயதினர் உணவு உண்ணும்போது தண்ணீருக்குப் பதிலாக குளிர்பானங்களை அருந்தும் பழக்கம் உள்ளது. இந்த குளிர்பானங்களைப் பற்றிய விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது வந்து அவற்றை அருந்தும் விருப்பத்தை ஏற்படுத்துகின்றன.

செயற்கையாக அதிகமான இனிப்பூட்டப்பட்ட இந்த குளிர்பானங்களை அருந்துவதால் ஏற்படும் உடல்நலக் கேடுகளைப் பற்றி பிரான்சின் பாரீஸ் நகரில் உள்ள சர்போனே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். 2009- ஆம் ஆண்டிலிருந்து 2019 } ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 1 லட்சத்து 4 ஆயிரம் பேர்களை இந்த ஆராய்ச்சிக்கு அவர்கள் உட்படுத்தியிருக்கிறார்கள்.

ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களை மூன்று பிரிவுகளாக அவர்கள் பிரித்துள்ளனர். குளிர்பானங்களை அருந்தாதவர்கள், எப்போதாவது அருந்துபவர்கள், அதிக அளவில் அருந்துபவர்கள் என வகைப்படுத்தி ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்த ஆறுமாதத்தில் ஒவ்வொரு நாளும் அவர்கள் எடுத்துக் கொண்ட உணவுகளைப் பற்றிய தகவல்களைத் தந்தனர்.

இந்த பத்து ஆண்டுகளில் பக்கவாதம், மாரடைப்பு, இதய ரத்த நாளங்களில் அடைப்பு போன்ற பலவிதமான நோய்களால் இவர்களில் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டனர் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிந்து கொண்டனர். இந்த ஆராய்ச்சியின் மூலம், செயற்கை இனிப்பூட்டப்பட்ட குளிர் பானங்களை அதிக அளவில் அருந்துவதால், பல்வேறு இதயம் தொடர்புடைய நோய்கள் ஏற்படுவதாக அவர்கள் கண்டறிந்துள்ளனர்.

கருப்பின மக்களை அதிகமாகத் தாக்கும் கரோனா!

அமெரிக்காவில் வாழும் மக்களில் கரோனா தொற்றால் அதிகமாக கருப்பின மக்களே பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வாழும் வெள்ளையின மக்கள், ஆசிய நாட்டுகளைச் சேர்ந்தவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை விட, இரண்டு மடங்கு அதிகமான கருப்பின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஏபிஎம் ரிசர்ச் லேப் என்ற ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதற்கு கருப்பின மக்கள் கரோனாவைப் பற்றி அதிகம் கவலைப்படாததும் ஒரு காரணமாக இருக்கிறது. பொழுதுபோக்கு இடங்களில் கூடும் கருப்பின மக்கள் பலர் முகக்கவசம் அணியாமல் இருப்பதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பதும் காரணமாக இருக்கிறது. "எதையும் தாங்கும்' மனப்பான்மை கருப்பின மக்களுக்கு அதிகம் இருப்பதால், கரோனா தொற்றின் தொடக்கநிலையிலேயே அவர்கள் மருத்துவமனைகளுக்கு வராமல் இருப்பதும் தொற்று அதிக அளவில் அவர்களைத் தாக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இன்னொருபுறத்தில் வெள்ளையின மக்களுக்குத் தரப்படும் அளவுக்குத் தரமான மருத்துவவசதிகள் கறுப்பின மக்களுக்குத் தரப்படுவதில்லை என்றும் இனரீதியான பாரபட்சம் காட்டப்படுவதாகவும், அதனால் கறுப்பின மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அந்த ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.