தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

துணிச்சலான முடிவு... தலைகீழ் மாற்றம்!

ஒவ்வொரு சமயத்திலும் நாம் எடுக்கும் முடிவே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது.

News image
Updated On :3 நவம்பர் 2020, 12:30 am

சுரேந்தர் ரவி

ஒவ்வொரு சமயத்திலும் நாம் எடுக்கும் முடிவே நமது வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அதே வேளையில், முடிவுகளை எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல. ஏனெனில் ஒரு தவறான முடிவு வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டிப் போடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே தான் ஒவ்வொரு முடிவையும் ஒருமுறைக்குப் பல முறை தீர ஆராய்ந்து எடுக்க வேண்டும் என்று முன்னோர்கள் வலியுறுத்துகின்றனர்.

முடிவுகளை எடுப்பதற்கு மனதைரியமே அடிப்படையாக உள்ளது. ஒரு சிலர் மிக எளிதான விஷயத்தை மட்டுமே செய்ய விரும்புவார்கள். சிறிது கடினமாகத் தோன்றினாலும் அதைச் செய்வதற்கு அவர்களுக்குத் தைரியமே வராது. அவர்களைச் சுற்றி ஒரு பாதுகாப்பான வளையத்தை உருவாக்கிக் கொண்டு அந்த வளையத்துக்கு வெளியே செல்லாமல், கிடைத்தது போதும் என்று வாழ்க்கையை நடத்திச் செல்வார்கள்.

ஒரு சிலருக்கு மிகக் கடினமான செயல்களைச் செய்வதில் ஆர்வம் அதிகமிருக்கும். உதாரணத்துக்கு அதிக சம்பளம் அளிக்கும் பணியை உதறித் தள்ளிவிட்டு புதிய தொழில் தொடங்க முனைவது, லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்பதற்காக வேலையை விடுவது, குடும்பச் சூழல் சரியில்லாமல், பணியேதும் இல்லாமல் இருந்தபோதும் அதீத கனவுகளுடன் பட்ட மேற்படிப்பைத் தொடர்வது, பணிக்குச் செல்லாமல் கனவுகளைத் துரத்திக் கொண்டிருப்பது ஆகியவற்றை மேற்கொள்ளும் நபர்களைக் குறிப்பிடலாம்.

எந்தவொரு செயலையும் துணிந்து செய்வதற்கு தைரியம் மட்டுமே போதும் என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால், தைரியம் இருந்தால் மட்டும் வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட முடியாது. அதை அவர்கள் உணர்வதே இல்லை.

கடந்த 1990}களில் நாட்டின் பொருளாதாரத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் புகுத்தப்பட்டன.

அவற்றின் காரணமாக புதிய தொழிலைத் தொடங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. தற்போது வரை புதிய தொழிலைத் தொடங்குவதில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், புதிய தொழில் தொடங்கிய அனைவரும் அதில் வெற்றி பெறுவதில்லை.

தொழிலைத் தொடங்கும்போது அதீத துணிச்சலுடன் அவர்கள் ஆரம்பித்திருப்பார்கள். ஆனால், போகப்போக அத்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் வராமல் போகவே வேறு தொழிலுக்கு மாறிவிடுவார்கள். இவ்வாறு மனதைரியம் அதிகமாக இருந்தாலும் நிலையான மனநிலை அவர்களிடம் காணப்படாததால் அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெறவே முடிவதில்லை. இந்த நிலைமை, போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களுக்கும் பொருந்தும்.

மனதைரியம் இருந்தால் ஒரு விஷயத்தில் துணிச்சலுடன் இறங்கி விடலாம். ஆனால், அதைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு வேறு சில விஷயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.

முதலில், எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்பாகவும் அதை நாம் ஏன் செய்கிறோம், எதற்காகச் செய்கிறோம் என்ற கேள்விகளை உங்களுக்கு உள்ளேயே எழுப்பிக் கொள்ள வேண்டும். நீங்கள் செய்யும் செயல் குறித்து உங்களுக்குள்ளேயே விழிப்புணர்வு ஏற்பட வேண்டியது அவசியம். அந்த விழிப்புணர்வு இருந்தால் தான் அதே செயலைத் தொடர்ந்து செய்வதற்கான மனதைரியம் ஏற்படும்.

அடுத்ததாக நீங்கள் தைரியத்துடன் செய்யும் செயலை அவ்வப்போது மறுஆய்வு செய்ய வேண்டும். இதற்காக உங்கள் மீது அக்கறை கொண்ட நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ நீங்கள் ஆலோசனை நடத்தலாம். உங்கள் செயல் குறித்து அவர்களிடம் ஆலோசிக்கும்போது நீங்கள் சரியான திசையில் பயணிக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும். இது உங்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும். அதே வேளையில், நீங்கள் ஆலோசனை நடத்தும் நபர் நடுநிலையான மனநிலை கொண்டவராக இருக்க வேண்டும். இல்லையெனில் அவரே உங்களைத் திசைதிருப்பி விட வாய்ப்புள்ளது.

ஓரிலக்கில் வெற்றி பெறுவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்ளக் கூடாது. உங்கள் கடின உழைப்பின் மூலமாக அந்த வெற்றி ஒருநாள் கிடைக்கத்தான் போகிறது. அதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால், அந்த வெற்றியை அடைவதற்கு நீங்கள் கடந்து வந்த பாதை மிகவும் முக்கியமானது. எனவே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அதீத கவனத்துடன் செய்ய வேண்டும்.

நீங்கள் செய்யும் செயல் வெற்றி பெற்றாலோ அல்லது தோல்வி அடைந்தாலோ அது குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும். அந்த விவகாரத்தில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்பதை நீங்கள் ஆராய வேண்டும். அது மிகப் பெரிய வெற்றிக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

நமது இலக்கை அடைவதற்குப் பல்வேறு வாய்ப்புகள் காணப்படும். ஆனால், அவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது உங்களைப் பொருத்ததே. எனவே, நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் முழுமுதற் காரணம் நீங்களாகவே இருக்க முடியும். அதை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும்.

தைரியம் என்பதற்கு பயமில்லாமல் இருப்பது என்று பொருள் கிடையாது. நாம் செய்யும் விஷயத்தில் பயம் இருக்க வேண்டும். பயத்தை மதித்து, அதை ஏற்றுக்கொண்டு அதனுடன் பயணிப்பதே தைரியம். பயத்தைத் தனியாக விட்டுவிட்டு பயணிப்பது தைரியமாகாது. எனவே, தைரியமாக செயலைத் தொடங்குவது மட்டுமல்லாமல், அதற்குப் பிறகும் வெற்றி பெறுவதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆராய வேண்டும். தைரியத்துடன் துணிந்து செய்வோம். வாழ்வில் வெற்றி பெறுவோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.