தரத்திற்காக எதையும் செய்த சாம்சங்கின் லீ குன் ஹீ !

முயன்றால் முடியாதது எதுவுமில்லை. இது உயர்நிலையை அடைந்துள்ள அனைவருக்கும் பொருந்தும்.
தரத்திற்காக எதையும் செய்த சாம்சங்கின் லீ குன் ஹீ !


முயன்றால் முடியாதது எதுவுமில்லை. இது உயர்நிலையை அடைந்துள்ள அனைவருக்கும் பொருந்தும். அந்த வரிசையில் எலக்ட்ரானிக்ஸ் உலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் சாம்சங் குழுமத்தை உருவாக்கிய லீ குன் ஹீ. கடந்த அக்டோபர் மாதம் 25 - ஆம் தேதி,  நோய்வாய்ப்பட்டதன் காரணமாக அவர் இவ்வுலகை விட்டு நீங்கினார். எனினும் அவருடைய  உழைப்பின் பலன்கள் உலகெங்கும் பரவிக் கிடக்கின்றன.  

1938-இல் லீ குன் ஹீ தந்தையால் உருவாக்கப்பட்டதுதான் சாம்சங் என்ற சாம்ராஜ்யத்தின் விதை. தொடக்கத்தில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பு மட்டுமின்றி காய்கனிகள், உலர் மீன்களை பெய்ஜிங் உள்ளிட்ட நாடுகளுக்கு 
ஏற்றுமதி செய்யும் தொழிலையும் அந்நிறுவனம் செய்து வந்தது. 

1968 முதல் லீ குன் ஹீ அந்நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டு பணியாற்றத் தொடங்கினார்.1987 - இல் அவரது தந்தை இறந்த பின் சாம்சங் நிறுவனத்தில் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதில் சிறப்பு என்னவென்றால் அவர் அந்த குடும்பத்தில் மூன்றாவது மகன் என்பதுதான். 

பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற அவர்,   எம்பிஏ பட்டமும் பெற்றார்.  தனி ஒருவராக சாம்சங்-ஐ வழிநடத்த தொடங்கிய  அவருடைய காலகட்டத்தில்,   சாம்சங்கில் அவர் கொண்டு வந்த மாற்றங்கள் எண்ணிலடங்காதவை. அவர் காலத்தில் அது சர்வதேச அளவில் பெரிய நிறுவனமாக உருவெடுக்கத் தொடங்கியது.

"மாற்றம் ஒன்றே மாறாதது' என்பது லீ குன் ஹீ க்கு மிகவும் பிடித்தமான கருத்து. "மனைவி மற்றும் குழந்தைகளை தவிர மற்ற அனைத்தையும் மாற்றிக் கொண்டே இருங்கள் என்பதுதான்' அவர் தனக்கும் பிறருக்கும் சொன்ன வழிகாட்டும் மந்திரம். இன்றைய மின்னணு உலகத்தில் நொடிதோறும் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப அவர் தன்னை மாற்றிக்கொள்ளத் தயங்காதவர். 

1990 - களில் சாம்சங்கின் நிலைப்பாடு முற்றிலும் கொரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் அம்சங்களைக் கொண்டதாகவே அமைந்திருந்தது. அதாவது கொரிய நிபுணர்களை மட்டுமே பயன்படுத்தி சாம்சங் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இவை மலிவான விலையில் கிடைத்தாலும் தரத்திலும் சற்று குறைந்தே இருந்துள்ளன. 

ஆனால், தனது உற்பத்தி பொருள்கள் உலகம் முழுவதும் சந்தை படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நாடுகளில் உள்ள நிபுணர்களைப் பயன்படுத்தி உற்பத்தியைத் தொடங்கினார் லீ குன் ஹீ. 

1993 காலகட்டத்தில் சாம்சங்கில் பல மாற்றங்களை அவர் தொடங்கினார். முதலில் ஜெர்மனியில் உள்ள பல்வேறு தொழில்துறை நிபுணர்களைக் கொண்டு உற்பத்தியைத் தொடங்கினார். அதன் மூலம் நல்ல தரமான பொருட்களை உற்பத்தி செய்ய அவரால் முடிந்தது. தரமான பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவருக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. 

இத்தகு மாற்றங்களால் 1992- இல் கம்ப்யூட்டர் மெமரி சிப்ஸ் தயாரிப்பில் உலக அளவில்  சாம்சங் முதலிடம் பிடித்தது. அதுமட்டுமன்றி 64 மெகாபைட் டிராம் தயாரிப்பிலும் நிறுவனம் முதலிடம் பிடித்தது.

அவரின் அதீத உழைப்பும் முயற்சியும் அவருக்கு பெரும் வெற்றியை ஈட்டித் தந்தன.1987- இல் நிறுவனத்துக்கு கிடைத்த வருவாயை விட 39 மடங்கு வருவாயை உயர்த்தி அசத்தினார் லீ குன் ஹீ. கொரியாவின் உள்நாட்டு உற்பத்தி வருவாயில் (ஜிடிபி வருவாயில் )20% சாம்சங் நிறுவனத்தின் மூலம் அந்நாட்டிற்கு கிடைக்கும் அளவிற்கு நிறுவனத்தின் வருவாயை பெருக்கினார் அவர். 

2008- இல் நிறுவனத்தில் சில பிரச்னைகளால் அவர் பதவி விலக நேர்ந்தது. பின்னர் அரசு அவருக்கு மன்னிப்பு வழங்கியது.அதையடுத்து 2010-இல் மீண்டும் அந் நிறுவனத்தின் தலைவராக தன்னை இணைத்துக் கொண்டு அவர் செயல்படத் தொடங்கினார். இதற்கிடையே அவரது மகன் லீ ஜெய் யோங் சாம்சங்கின் துணைத்தலைவராக பணியேற்றார். அவரது இரு மகள்களில் ஒருவர் மிகச்சிறந்த ஆடம்பர ஹோட்டலில் சிஇஓவாக வும் , மற்றொரு மகள் சாம்சங் நிறுவனத்தின் துணை நிறுவனமான சாம்சங் எவர் லேண்ட் நிறுவனத்தின் தலைவராகவும் பணி செய்ய அனுமதித்தார் லீ. 

தென்கொரியாவின் ஒரு பகுதியில் இருந்த சாம்சங் நிறுவனத்தின் உற்பத்தி பொருள்களை உலக அளவில் சந்தை படுத்திய பெருமை லீக்கு மட்டுமே சேரும். அதையும் தாண்டி ஸ்மார்ட் போன்கள், தொலைக்காட்சிப் பெட்டிகள் , நினைவக சில்லுகள் (மெமரி சிப்) போன்றவற்றின் மிகப்பெரிய உற்பத்தியாளர் ஆகவும் அவர் திகழ்ந்தார் என்பது வரலாற்று உண்மை.

பிற தொழில்நிறுவனங்களின் போட்டிகளை  எதிர்கொண்டு வெற்றியை ஈட்டுவதற்கு ஒரே வழி "புதிய மாற்றங்களைப் பயன்படுத்தி பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவது தான்' என்பது லீ - இன் பார்வையாக இருந்தது.  

பிற்காலத்தில் பல்வேறு நிறுவனங்கள் பெரும் சரிவைச் சந்தித்த சூழ்நிலையிலும் லீஜன் திட்டமிடல்களால் ஆன்லைன் வர்த்தகம் மூலம் சுமார் 300 பில்லியன் டாலர் அளவிற்கு வருவாய் கிடைத்துள்ளது. அன்றைய நிலையில் செமி கண்டக்டர்கள், ஸ்மார்ட்போன்கள் போன்றவை உலக அளவில் பெருமளவில் விற்பனை செய்யப்பட்டன. அதன்மூலம் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்தது.

இதற்கிடையே சாம்சங் நிறுவனத்தின் வாரிசுதாரர்கள் பல்வேறு பிரச்னை
களில் சிக்கி இருப்பதாக கூறப்பட்டாலும் அவர்கள் அதைத் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

எங்கோ ஒரு மூலையில் தொடங்கிய சாம்சங் சாம்ராஜ்ஜியத்தில் இப்பொழுது 62 நிறுவனங்கள் உள்ளன. அதை உருவாக்கிய பெருமை லீ குன் ஹீ யை மட்டுமே சாரும்.  

தரத்திற்காக அவர் எதையும் செய்வார். அதற்கு ஒரு உதாரணம் 1995- இல் சாம்சங் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட போன்கள் பேக்ஸ் மெஷின்கள் போன்றவற்றின் தரம் குறைவாக இருப்பதாக கருதி 2000 தொழிலாளர்கள் முன்னிலையில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின்னணு சாதனங்களை எரித்து சாம்பலாக்கினார்.இது தரமான பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை ஊழியர்களுக்கு ஏற்படுத்தியது. இந்தச் செயல் 2006-இல் மிகப்பெரிய வெற்றியை நிறுவனத்துக்கு ஏற்படுத்தித் தந்தது என்றே சொல்லலாம். அந்த ஆண்டில் சாம்சங் நிறுவனம் உற்பத்தி செய்த பிளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சிப் பெட்டி விற்பனையில் பெரும் சாதனை படைத்து மற்ற முன்னணி நிறுவனங்களைப் பின்னுக்கு தள்ளியது.நிறுவனத்தின் சந்தை மதிப்பும் 100 பில்லியன் டாலரைத் தாண்டியது. 2010இல் கேலக்ஸி பிராண்டட் ஸ்மார்ட்போன்களை நிறுவனம் உற்பத்தி செய்தது. ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்துடன் இணைந்து செயல்படக்கூடிய அந்த தயாரிப்பு மற்ற ஸ்மார்ட்போன்களின் விற்பனையை விட அதிகரித்து நிறுவனத்தின் வருவாயை பெருக்கியது. 

மின்னணு சாதனங்கள் மட்டுமின்றி கார் உற்பத்தி, சுகாதார பொருட்கள் உற்பத்தி, அழகுசாதன பொருட்கள் உற்பத்தி, சூரிய பேட்டரிகள் உற்பத்தி போன்றவற்றிலும் கவனம் செலுத்த தொடங்கினார் லீ. அத் துறையிலும் அவர் தனி முத்திரை பதித்தார். 

2005இல் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. அத்துடன் நிமோனியா காய்ச்சல் உள்ளிட்ட சில தொற்றுக்கள் இருப்பதும் தெரியவந்தது. 

1948 ஜனவரி 9 ல் பிறந்த லீ குன் ஹீ 2020 அக்டோபர் 25ஆம் தேதி  உயிரிழந்தார்.
சாம்சங் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்ட லீ குன் ஹீ இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணம் என்றால் அது மிகையில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com