வித்தியாசமான முகக்கவசம்!

முகக்கவசம் அணியாத முகங்களே இல்லை என்று சொல்லும் நிலை இப்போது  உலகம் முழுவதும் ஏற்பட்டுவிட்டது. எந்த வேதிப் பொருளும் பயன்படுத்தப்படாத,  மிகக் குறைந்த செலவிலான - அதேசமயத்தில் கரோனா
வித்தியாசமான முகக்கவசம்!

முகக்கவசம் அணியாத முகங்களே இல்லை என்று சொல்லும் நிலை இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுவிட்டது. எந்த வேதிப் பொருளும் பயன்படுத்தப்படாத, மிகக் குறைந்த செலவிலான - அதேசமயத்தில் கரோனா தீநுண்மியை அழிக்கக் கூடிய - முகக்கவசத்தை உருவாக்கியிருக்கிறார்கள் பெங்களூருவைச் சேர்ந்த "நானோ சாஃப்ட் மேட்டர் சயின்ஸஸ்' என்ற நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள். இந்த முகக்கவசத்துக்கு "ட்ரிபோ - இ மாஸ்க்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

""தற்போது மருத்துவப் பணியாளர்கள் பயன்படுத்தும் என்95 முகக்கவசம் பிற முகக்கவசங்களை விட அதிக அளவில் பாதுகாப்பைத் தரக் கூடியது. அது இரண்டு விதங்களில் பாதுகாப்பைத் தருகிறது. ஒன்று வைரஸ்கள், கிருமிகள் முகக்கவசத்துக்குள் செல்லாதவாறு தடுக்கும் முறை. அதற்கு மிகவும் நுண்ணிய நூலிழைகள் உள்ள துணி பயன்படுத்தப்படுகிறது.

இன்னொன்று முகக்கவசத்தில் நிலைமின்சாரத்தைப் பயன்படுத்தி வைரஸ்களை, கிருமிகளை அழிப்பது. முகக்கவசத்தில் உள்ள நிலைமின்சாரத்தால் வைரஸ்கள், கிருமிகள் ஈர்க்கப்பட்டு அழிக்கப்படுகின்றன. இந்த நிலைமின்சாரம் முகக்கவசம் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பொருத்து மாறுபடக் கூடியது.

காற்றில் உள்ள ஈரப்பதத்தால் வலுவிழக்கக்கூடியது. அதிலும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய முகக்கவசமாக இருந்தால் கிருமிகளை அழிக்கும் திறன் குறைந்து கொண்டே வந்து கடைசியில் இல்லாமல் போகிறது'' என்கிறார் ட்ரிபோ - இ மாஸ்க் கண்டுபிடிப்புக் குழுவின் தலைமை ஆராய்ச்சியாளரான பிரளய் சந்த்ரா.

ட்ரிபோ - இ மாஸ்க் கண்டுபிடிப்புக் குழுவில் பிரளய் சந்த்ராவுடன் இணைந்து, அஸýதோஷ் சிங், ஜி.யு.குல்கர்னி ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் கண்டுபிடித்த இந்த முகக்கவசத்தில் மின்சாரம் உருவாக்கப்படும் முறை வித்தியாசமானது.

""இந்த முகக்கவசத்தைத் தயாரிக்க மூன்று எளிய பொருள்கள் பயன்படுகின்றன. இதனால் முகக்கவசத்தை அணியும் ஒவ்வொரு தடவையும் மிக எளிதாக அதை மின்னேற்றம் செய்து கொள்ள முடியும். இதனால் கிருமிகள், வைரஸ்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்'' என்கிறார் பிரளய்.

இந்த ட்ரிபோ எலக்ட்ரிசிட்டி முகக்கவசம் அதன் மேல் படும் 95 சதவீதம் தீநுண்மிகளை அழித்துவிடுகிறது. 0.3 மைக்ரோன் அளவுள்ள கிருமிகளையும் கூட உள்நுழையாதபடி தடுத்துவிடுகிறது. இது எப்படி சாத்தியமாகிறது?

""கடந்த ஏப்ரல் மாதம் நாங்கள் ஒரு வித்தியாசமான முகக்கவசம் செய்ய வேண்டும் என தீர்மானித்து செயலில் இறங்கினோம்.

இந்த முகக்கவசத்தைத் தயாரிக்கப் பயன்படும் பொருள்களே மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியதாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதற்காக நைலான் துணி, பாலிதீன் துணி, பருத்தித்துணி ஆகியவற்றால் மூன்று அடுக்குகள் கொண்ட முகக்கவசம் தயாரிக்கத் திட்டமிட்டோம்.

முக்கோண வடிவில் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசம் மூக்கின் அருகில் குறுகலாகவும், உதடுகள் அருகில் அகலமாகவும் இருக்கும். முகக்கவசம் அணிந்து கொண்டு சிரமமில்லாமல் பேசுவதற்கே இந்த ஏற்பாடு. நைலான் துணிக்குப் பதிலாக பட்டுத்துணி அல்லது கம்பளித்துணியைக் கூட பயன்படுத்திக் கொள்ளலாம்.

நைலான், பாலிதீன், பருத்தித் துணிகளில் உராய்வு ஏற்படும்போது நிலைமின்சாரம் உருவாகிவிடுகிறது. இந்த மூன்று துணி வகைகளையும் பயன்படுத்தி மூன்று அடுக்குகள் உள்ளதாகத் தயாரிக்கப்பட்ட இந்த முகக்கவசத்தைக் கைகளால் தேய்த்தால் உராய்வு ஏற்பட்டுó முகக்கவசத்தில் நிலைமின்சாரம் உருவாகிவிடுகிறது. இந்த நிலைமின்சாரம் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் ஆகியவற்றை ஊடுருவவிடாமல் தடுத்துவிடுகிறது; அழித்துவிடுகிறது'' என்கிறார் பிரளய்.

இந்த ட்ரிபோ - இ மாஸ்க்கைத் தயாரித்த பின்னர் இது எந்த அளவுக்கு காற்றோட்டம் உள்ளதாக இருக்கிறது என்று சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். மூக்கு அருகே மிகவும் இறுக்கமாக முகத்துடன் ஒட்டியிருக்கும்வகையில் இந்த முகக்கவசம் இருக்குமாறு வடிவமைத்திருக்கிறார்கள்.

இதனால் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் இந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டு சுவாசிக்கும்போது மூச்சுக் காற்று வெளியே வந்து கண்ணாடியில் பனி படர்ந்தது போல ஆகி கண்களை மறைக்காது.

அடுத்து எந்த அளவுக்குக் கிருமிகளைத் தடுக்கும் திறன் இந்த முகக்கவசத்துக்கு உள்ளது என்பதையும் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள்.

முகக்கவசத்தைத் துவைத்து பயன்படுத்தினாலும், கிருமிகளை அழிக்கும் திறன் சிறிதளவும் குறையவில்லை என்கிறார்கள்.

இந்த முகக்கவசத்தைப் பெரிய அளவில் தயாரிக்க பெங்களூருவில் உள்ள "கேமல்லியா கிளாத்திங் லிமிடெட்' என்ற நிறுவனம் முன் வந்திருக்கிறது. ஒரு நாளைக்கு 1 லட்சத்துக்கும் அதிகமான ட்ரிபோ - இ மாஸ்குகளைத் தயாரித்து இந்தியா முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com