இந்திய செயற்கைக்கோளின் சாதனை கண்டுபிடிப்பு!

பூமியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து தீவிர புறஊதா கதிர்கள் உமிழப்படுவதை இந்திய செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட் தரவுகள் மூலம் கண்டறிந்து  சாதனை படைத்துள்ளனர்.
இந்திய செயற்கைக்கோளின் சாதனை கண்டுபிடிப்பு!
Updated on
2 min read


பூமியிலிருந்து தொலைதூரத்தில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து தீவிர புறஊதா கதிர்கள் உமிழப்படுவதை இந்திய செயற்கைக்கோளான ஆஸ்ட்ரோசாட் தரவுகள் மூலம் கண்டறிந்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். புணே வானியல் மற்றும் வானியற்பியல் பல்கலைக்கழக மையத்தின் (ஐயுஎல்ஏஏ) இணைப் பேராசிரியர் கனக் சாகா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளது.

இக்குழுவில் இந்தியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடம்பெற்றிருந்தனர்.
புறஊதா கதிர்கள் என்றால் என்ன? புறஊதா கதிர் என்பது பெரும்பாலும் கண்களால் பார்த்து உணர முடியாத மின்காந்த அலைகள் ஆகும். சூரியஒளியின் நிறமாலையில் கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா நிறம் வரையிலான வரிசையில், இது ஊதா நிறத்துக்கு அப்பால் இருப்பதால் புற ஊதா கதிர் எனப்படுகிறது. இக்கதிர்களால் உயிரினங்களுக்கு நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. பெரும்பாலும் வளிமண்டலத்திலிருந்து வரும் புறஊதா கதிர்களை ஓசோன் படலம் தடுத்துவிடுவதால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. சூரியனிலிருந்து வெளியாகும் ஒட்டுமொத்த ஒளியில் 10 சதவீதம் புறஊதா கதிரால் ஆனதுதான்.

கண்டுபிடித்தது எப்படி? தற்போதைய கண்டுபிடிப்புக்கு உதவிய ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் 2015, செப்டம்பர் 20-ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. வானியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட முதல் இந்திய செயற்கைக்கோள் ஆஸ்ட்ரோசாட். இந்த செயற்கைக்கோள் தரவுகளின் மூலம் கண்டறியப்பட்ட நட்சத்திர மண்டலத்துக்கு ஏயுடிஎஃப்எஸ்01 (அமஈஊள்01) எனப் பெயர். இந்த நட்சத்திர மண்டலம் பூமியிலிருந்து 9.30 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. இந்த நட்சத்திர மண்டலத்திலிருந்து தீவிர புற ஊதா கதிர்கள் உமிழப்படுவது ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் யு.வி. இமேஜிங் தொலைநோக்கி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஹபிள் விண்வெளி தொலைநோக்கியும் இதேபோன்ற ஆய்வை மேற்கொண்டது. ஆனால், இந்த நட்சத்திர மண்டலத்திலிருந்து புறஊதா கதிர்கள் உமிழப்படுவவதை ஹபிள் தொலைநோக்கியால் கண்டறிய முடியவில்லை. ஏனெனில் ஹபிள் கண்டறிந்ததில் பின்னணி இரைச்சல் மிக அதிகமாக இருந்தது. ஆனால், ஆஸ்ட்ரோசாட் கண்டுபிடிப்பில் பின்னணி இரைச்சல் மிகக் குறைவாக இருந்தது. இதன்மூலம் ஏயுடிஎஃப்எஸ்01 நட்சத்திர மண்டலத்திலிருந்துதான் புறஊதா கதிர்கள் வெளியாயின என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

இந்தக் கண்டுபிடிப்பு 2016, அக்டோபர் மாதமே நிகழ்த்தப்பட்டுவிட்டாலும், புறஊதா கதிர்கள் உண்மையிலேயே இந்த நட்சத்திர மண்டலத்திலிருந்துதான் வெளியானதா என்பதை பலகட்ட ஆய்வுகளுக்குப் பின் இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பிரிட்டனிலிருந்து வெளியாகும் "நேச்சர் அஸ்ட்ரானமி' இதழில் இதுகுறித்த ஆய்வுக் கட்டுரை வெளியானதைத் தொடர்ந்து இந்திய செயற்கைக்கோளின் சாதனை சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது.

பயன்கள் என்ன? "எவ்வாறு பிரபஞ்சத்தின் இருள் முடிவுக்கு வந்து ஒளி தோன்றியது என்பதற்கான முக்கியமான ஆதாரம்' என இந்தக் கண்டுபிடிப்பின் பயன் குறித்து கூறுகிறார் ஐயுசிஏஏ இயக்குநர் டாக்டர் சோமக் ராய்செளத்ரி. "இது எப்போது தொடங்கியது என்பதை நாம் ஆராய வேண்டும். ஆனால், ஒளியின் தோற்றம் குறித்து அறிவது கடினமான ஒன்றாக இருக்கும்' என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

""விஞ்ஞானம் என்பது உலகெங்கிலும் உள்ள கூட்டு முயற்சி. இதுபோன்ற கண்டுபிடிப்புகள் நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே செல்கிறோம், தனியாக இருக்கிறோமா என்பதைப் பற்றிய மனிதகுலத்தின் புரிதலை மேலும் அதிகப்படுத்துகின்றன'' என நாசா பாராட்டியுள்ளது.

சர்வதேச சமூகத்துக்கு மேலும் ஓர் அரிய கண்டுபிடிப்பைத் தந்து அறிவியல் உலகிற்கே பெரும் பங்களிப்பைச் செய்துள்ளது இந்திய விஞ்ஞானி தலைமையிலான குழு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com