47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

முந்தி இருப்பச் செயல்: வாசிப்புத் திறன் - 13

""தேனிருக்கும் இடத்தினைத் தேடி மொய்க்கும் வண்டுபோல்...  நல்ல நல்ல நூல்களை நாடி நாமும் பயிலுவோம்'' என்கிற அழ. வள்ளியப்பாவின் பாடலை என் தலைமுறைக் குழந்தைகள் பாடினோமே  தவிர, அனுபவித்தது கிடையாது.

News image
Updated On :8 செப்டம்பர் 2020, 12:30 am

சுப. உதயகுமாரன்


""தேனிருக்கும் இடத்தினைத் தேடி மொய்க்கும் வண்டுபோல்... நல்ல நல்ல நூல்களை நாடி நாமும் பயிலுவோம்'' என்கிற அழ. வள்ளியப்பாவின் பாடலை என் தலைமுறைக் குழந்தைகள் பாடினோமே தவிர, அனுபவித்தது கிடையாது. காரணம் அப்போதெல்லாம் இத்தனை பதிப்பகங்கள் இருக்கவில்லை. இவ்வளவு நூல்களும் வெளியிடப்படவில்லை. மக்களுக்கு புத்தகம் வாங்கும் திறனும் அமையப் பெறவில்லை. பள்ளிகளில் கூட நூலகங்கள் கிடையாது.
ஆனால் இவையனைத்தும் இன்றைய தலைமுறைக்கு அமைந்திருந்தாலும், புத்தகம் வாசிக்கும் பழக்கமில்லாமல் இருக்கிறீர்கள். நூல்களை வாசிக்கவிடாமல் தடுக்கும் பல்வேறு தடைகளும் உள்ளன.
வாழ்க்கையில் முன்னேற, வெற்றி பெற, வாழ்வின் இலக்கைச் சென்றடைய ஒரே வழி, புத்தகங்கள் வாசிப்பதுதான். நிறைய வாசிப்பது, கண்டதை எல்லாம் வாசிப்பது. மணற்கேணி போன்ற மனக்கேணியில் "கற்றனைத்தூறும் அறிவு' என்கிறார் வள்ளுவர். "கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்' என்கிறோம். பண்டிதன் ஆகிறோமோ இல்லையோ, தன்னம்பிக்கையும், தன்னிறைவும் கொண்ட தனித்துவமிக்க மனிதனாய் மிளிர, பரந்துபட்ட வாசிப்பு மிகவும் அவசியம்.
அறிவையும், ஞானத்தையும் தேக்கி வைத்திருக்கும் புத்தகங்களை வாசிப்பது, யாரோடும் ஓர் உரையாடலைத் தொடங்கித் தொடரும் திறன் உள்ளவராக, மக்கள் திறன் உள்ளவராக, சமூகத் திறன் உள்ளவராக உங்களை மாற்றும். நீங்கள் பேசும் பேச்சுகள், உங்களின் கருத்துகள், நிலைப்பாடுகள் ஆணித்தரமானவையாக இருக்கும். தொலைதூர இடங்களுக்கு நம்மை இட்டுச் சென்று, இதுவரை கேள்விப்படாத விடயங்களை நமக்குச் சொல்லித் தந்து, சிந்திக்காத கோணங்களில் நம்மைச் சிந்திக்க வைத்து, வளரச் செய்வதே வாசிப்புத் திறன்.
தொடர் வாசிப்பின் மூலம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும். நினைவாற்றலை, புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள முடியும். மனஉளைச்சலை, மனச்சோர்வை அகற்ற முடியும். ஆழமாகத் தூங்க முடியும். நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, மொழித்திறன், சிந்தனைத் திறன் போன்றவற்றை வளர்த்தெடுக்க முடியும். பிறரின் மதிப்பை, நம்பிக்கையைப் பெற முடியும். வயதாகும்போது மனதளவில் உங்களை விழிப்புடன் வைத்திருக்க முடியும்.
வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களை கல்வி, தனிமனித உணர்வுகள், சமூக உறவுகள் தொடர்பான பல பிரச்னைகள் பிடித்தாட்டுகின்றன. அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, போதாமை போன்ற உணர்வுகள் எழுகின்றன. கல்வித் தடை, இளவயதுக் குற்றம் போன்ற பல்வேறு பிரச்னைகளின் பின்னால் வாசிப்பின்மை இருக்கிறது.
"நிறைய வாசிப்பது கண்களைப் பாதிக்கும், ஓடியாடி வேலை செய்வதைத் தடுக்கும், சீரணப் பிரச்னையை எழச்செய்யும், உடல் எடையை அதிகரிக்கும், அயர்ச்சி அடையச் செய்யும்' என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், நீங்கள் தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரமும் வாசிக்க வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்தவில்லை. ஒரு நாளில் ஓரிரு மணி நேரங்கள் மட்டுமே வாசிப்பதால், இவை போன்ற எந்தக் குறைபாடும்வந்துவிடாது.
ஃபிரான்சிஸ் பேகன் எனும் ஆங்கில அறிஞர், "ஒரு சில புத்தகங்களை வெறுமனே ருசித்தால் போதும்; வேறு சில புத்தகங்களை அப்படியே விழுங்கி விடலாம்; ஆனால் குறிப்பிட்ட சில புத்தகங்களை நன்றாகச் சவைத்து, சுவைத்து, சீரணித்தாக வேண்டும்' என்கிறார். அதாவது சில நூல்களில் தேவையான பகுதிகளை மட்டும் மேலோட்டமாக மேய்ந்தால் போதும்; வேறு சில புத்தகங்களைப் பெரும் சிரத்தையின்றி பரந்துபட்டு வாசித்துவிட்டுக் கடந்துவிடலாம்; ஆனால் குறிப்பிட்ட சில புத்தகங்களை முழுவதுமாக, ஆழமாக, கவனமாகப் படித்தாக வேண்டும்.
படிப்பதற்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். காலக்கெடு எதுவும் இல்லாததால், யாரும் உங்களைக் கேள்வி கேட்கமாட்டார்கள் என்பதால், தள்ளிப் போடத் தோன்றலாம். எனவே காலை எழுந்தவுடன் அல்லது தூங்கப் போகும் முன், அல்லது மதிய உணவு இடைவேளையில் என எந்த நேரம் உங்களுக்கு வசதிப்படுகிறதோ, வாய்ப்பாக இருக்கிறதோ, அப்போது வாசிக்கலாம்.
படிப்பதற்கென ஓர் இடத்தைத் தேர்வு செய்து வைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் ஏதாவது ஓர் அறையில், வசதியான ஓர் இருக்கையில் அமர்ந்து வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம். தூங்கப் போகும் நேரத்தில் வாசிக்கிறவர்கள் படுக்கையில் படுத்தவாறே படிக்கலாம். வெளியூர் பயணங்களின்போது, கையில் ஒரு புத்தகத்தைஎடுத்துச் சென்று வாசியுங்கள்.
வரலாற்று நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், புதினங்கள் என உங்களுக்கு இயற்கையாகவே ஈடுபாடு இருக்கும் விடயம் குறித்த நூல்களை வாசிக்கத் தொடங்குங்கள்.
உங்களின் வாசிக்கும் வேகம், புரிதலின் ஆழம் போன்றவற்றை அவதானித்துக் கொண்டிருங்கள். வாசிக்கும்போது அருகே ஒரு குறிப்பேட்டையும், பேனாவையும் வைத்திருங்கள். புதிய சொற்கள், சொற்றொடர்கள், கருத்துகள், கேள்விகள் போன்றவற்றைக் குறித்துக் கொள்ள வசதியாக இருக்கும்.
நம்மில் பெரும்பாலானோர் வாசிக்கும்போது, உள்ளுக்குள் ஒரு குரலைக் கேட்கிறோம். அந்தக் குரலை அவதானிக்காமல், அதை உணரவே உணராமல் வாசித்துச் செல்வதுதான் உன்னதமானது. பள்ளிக் குழந்தைகளை உரக்க வாசிக்கச் சொல்வதற்கு காரணம் மொழியைச் சரியாக உச்சரிக்க உதவும் என்பதால்தான். ஆனால் நீங்கள் புத்தகங்கள் வாசிக்கும்போது, உரக்க வாசிக்க வேண்டிய தேவையில்லை.
வேகமாக வாசிக்க சில நுணுக்கங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு வார்த்தையாக வாசிக்காமல், வார்த்தைகளைச் சேர்த்து ஒரு தொகுப்பாக வாசிக்கப் பழகுங்கள். ஒருவர் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 200 முதல் 300 வார்த்தைகள் வரை வாசிக்க முடியும் என்று நம்புகிறோம். வேகமான வாசிப்பின் மூலம் 1500 வார்த்தைகள் வரை வாசிக்கலாம் என்கிறார்கள்.
அத்தனை வேகமாக வாசிக்கிறவர்கள் ஒரு பத்தியின் முதல் வாக்கியத்தையும், கடைசி வாக்கியத்தை மட்டுமே கவனமாக வாசித்து உள்வாங்கிவிட்டு, கண்களை நிலைகுத்திப் பார்க்கச் செய்யாமல், அப்படியே பரவலாகப் பார்த்துச் செல்கிறார்கள். வாசிக்கும்போது வேறு எந்த வேலையும் செய்யாமல் அதில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள்.
தொடர்ந்து வாசிப்பது உங்களுக்கேயான ஒரு வாசிப்புத் தன்மையை உருவாக்கித்தரும். மனக்குழப்பங்கள் ஏதுமின்றி, புறச்சூழல் அமைதியாக இருக்கும்போது, நாம் மன ஒருமைப்பாட்டுடன் வேகமாக வாசிக்க முடியும். உடல்நலம், மனநலம், புறச்சூழல் என பல விடயங்கள் வாசிப்பதில் அடங்கியிருப்பதால், வேகம், ஆழம் பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், தொடர்ந்து வாசியுங்கள். அதனை ஒரு வேலையாகச் செய்யாமல், மனமகிழ்வுக்காகச்செய்யுங்கள்.

மகிழுந்து ஓட்டும்போதோ, நடைப்பயிற்சியின்போதோ "ஆடியோ' புத்தகங்களைக் கேட்கலாம். அதேபோல, "கிண்டில்,' இணையதளம் போன்ற பல வழிகளில் நூல்களை வாசிக்கமுடியும். "உணவே உடலுக்கு மருந்து' என்பது போல, நூல்களே உள்ளத்துக்கு அருமருந்து.
உண்மையில் நூல்களை மருந்தாகவும் பயன்படுத்துகிறார்கள்.

பாக்ஸ்டர் எனும் ஓர் அமெரிக்கர் "பிப்ளியோபதிக்' நிறுவனம் ஒன்றை நடத்தி, தன்னிடம் உதவி நாடி வருகிறவர்களுக்கு உகந்த நூல்களைப் பரிந்துரை செய்திருக்கிறார். இந்த சிகிச்சை முறையை 1916-ஆம் ஆண்டு "அட்லாண்டிக் மந்த்லி' எனும் இதழில் வெளிவந்த கட்டுரை ஒன்று "பிப்ளியோதெரபி' என்றழைத்தது. பிசியோதெரபி உடலுக்கு உதவுவது போல, பிப்ளியோதெரபி உள்ளத்துக்கு உதவுகிறது.
பல்சுவை உணவுகளை உங்கள் முன் பரப்பி, அருகே ஒருவர் கையில் சாட்டையுடன் நின்று, அரை மணி நேரத்தில் அனைத்தையும் உண்டு, உடல்நலம் பெறுக என்று வற்புறுத்துவது ஏற்புடையதா? அல்லது அந்த உணவு வகைகளில் உங்களுக்குப் பிடித்தமான, உங்கள் உடலுக்குத் தேவையான உணவுகளைத் தேர்ந்து ரசித்து, ருசித்து உண்டு மகிழுங்கள் என்று கேட்டுக் கொள்வது சிறந்ததா? படிப்புக்காக வாசிப்பதைவிட, வாழ்வின் மீதான பிடிப்புக்காக வாசியுங்கள்!

(தொடரும்)

கட்டுரையாளர்: சுற்றுச்சூழல் ஆர்வலர்.

தொடர்புக்கு: spuk2020@hotmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.