வாட்ஸ் ஆப் குழுத் தொல்லை... தப்பிக்கலாம் இனிமேல்!
பள்ளி, கல்லூரி, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு என தனித்தனி குழுக்கள் அனைவரின் வாட்ஸ்ஆப்களிலும் வழக்கமாக இடம் பெற்றிருக்கின்றன.


பள்ளி, கல்லூரி, குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு என தனித்தனி குழுக்கள் அனைவரின் வாட்ஸ்ஆப்களிலும் வழக்கமாக இடம் பெற்றிருக்கின்றன. எனினும், கடந்த சில ஆண்டுகளாக வர்த்தகம், தொழில், அரசியல், புத்தக வாசிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக வாட்ஸ்ஆப் குழுக்கள் உருவாக்கப்படுகின்றன.
இதில் ஈடுபாடில்லாதவர்களின் அனுமதி இல்லாமலேயே அவர்களை வாட்ஸ்ஆப் குழுக்களில் சேர்க்கும் போது பிரச்னை ஆரம்பிக்கிறது. இது கடந்த சில ஆண்டுகளாக வேகமாக அதிகரித்து விட்டது.
இந்தக் குழுக்களில் இருந்து வெளியேறவும் முடியாமல், அதில் வரும் தகவல் தொல்லைகளைத் தாங்கவும் முடியாமல் தவிப்பவர்கள்தாம் ஏராளம். பலர், "நமக்கு ஏன் வம்பு?' என்று மியூட் செய்துவிடுகிறார்கள்.
நீண்ட நாள்களாக வாட்ஸ்ஆப் வாடிக்கையாளர்கள் சந்தித்து வந்த இந்த பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. இனி வாடிக்கையாளர்களின் அனுமதி இல்லாமல் குழுக்களில் அவர்களைச் சேர்க்க முடியாதபடி புதிய வசதியை வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. இதைச் செயல்படுத்த முதலில் வாட்ஸ்ஆப்பின் இடது ஓரத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்து, செட்டிங்ஸ் -அக்கவுண்ட் - பிரைவேஸி - குரூப்ஸ் என்பதற்குள் சென்றால், "எவ்ரிஒன்', "மை காண்டாக்ட்ஸ்', "மை காண்டாக்ட்ஸ் எக்சப்ட்' என்ற மூன்று தேர்வு இருக்கும்.
இதில், " எவ்ரிஒன்'-ஐத் தேர்வு செய்தால், யார் வேண்டுமானாலும் உங்கள் தொலைபேசி எண்ணை வைத்து குழுக்களில் உங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். "மை காண்டாக்ட்ஸ்' -ஐத் தேர்வு செய்தால் உங்கள் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள எண்களில் உள்ளவர்கள் மட்டும் குழுக்களில் உங்களைச் சேர்க்க முடியும். "மை காண்டாக்ட்ஸ் எக்சப்ட்'-ஐத் தேர்வு செய்தால் உங்கள் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள எண்களில் யார் யார் எல்லாம் உங்களை குழுக்களில் இடம் பெறச் செய்யலாம் என்பதை நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். இந்தத் தேர்வின் மூலம் உங்கள் குடும்பத்தினர், நம்பகத் தன்மை வாய்ந்தவர்களின் எண்களை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம். எனினும், இதில் எதைத் தேர்வு செய்தாலும் குழுத் தலைவரின் சேர்க்கை அறிவிப்பு வந்து கொண்டுதான் இருக்கும்.
ஒரு முறை மட்டும் பார்க்கும் வசதி: இதேபோல், பிறருக்கு அனுப்பும் புகைப்படம், விடியோக்களை ஒருமுறை மட்டும் பார்க்கும் புதிய வசதியையும் வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி நாம் தேர்வு செய்யும் போட்டோ அல்லது விடியோக்களை அனுப்பும் கடைசிக் கட்டத்தில் "1' என்ற சிறிய எண் அனுப்பும் பொத்தானுக்கு அருகே இருக்கும். அதை கிளிக் செய்து அனுப்பினால் எதிரே உள்ளவர் ஒரு முறை பார்த்துவிட்டால் தானாக அந்த போட்டோ, விடியோ உடனடியாக அழிந்துவிடும். அனுப்பியவருக்கும் இது மறைந்துவிடும். இந்தப் புதிய சேவையின் மூலம் தனிநபர் ரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்று வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...