

காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் தங்களுடைய அறிவையும் திறனையும் வளர்த்துக்கொண்டு நம்மை நாமே செம்மைப்படுத்துவது என்பது இக்காலகட்டத்தில்முக்கியமான ஒன்று. அவ்வாறு புதியனவற்றைக் கற்றுக்கொள்ளும்போது மனதில் பல கேள்விகள் எழலாம், பல தடைகள் வரலாம். சிலருக்கு ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். சிலருக்கு சோம்பேறித்தனமாக இருக்கலாம். ஆனால், புதியனவற்றைக் கற்பது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் அதனை உடனே செயல்படுத்திவிடுங்கள்.
நீங்கள் புதிய மொழியைக் கற்றுக்கொள்ள விரும்பினாலும், புதிய பயிற்சியை எடுத்துக் கொள்ள விரும்பினாலும் அல்லது ஒரு வேலையை முடிக்க விரும்பினாலும் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை முடித்துவிட வேண்டும் என்பதை முதலில் மனதில் நிறுத்துங்கள்.
ஒரேநேரத்தில் பல வேலைகளைத் துல்லியமாகச் செய்யும் ஒரு கணினியைப் பார்த்து ஆச்சரியப்படும் நாம், மனிதனின் மூளை, கணினியையே தூக்கி சாப்பிடும் சக்தி கொண்டது என்பதைத் தெரியாமலேயே இருக்கிறோம். கணினியைவிட நம்முடைய மூளையை வேகமாக இயக்க வைக்க முடியும். மனிதனின் மூளை 10,000 கோடி நியூரான்களால் ஆனது. கணினியின் நினைவுத்திறன் கணக்கீட்டில் சொல்ல வேண்டுமெனில் இரண்டாயிரம் டெராபைட் வரை மனிதமூளையில் சேமித்துவைக்க முடியும்.
விரைவாக கற்றல் என்பது மூளையை விரைவாக செயல்படுத்துவதுதான். எவ்வாறாயினும் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்து விட்டால் அதனை ஆர்வத்துடன் விரைவாக கற்றுக்கொள்வது எப்படி? சில யோசனைகள் இதோ:
திட்டமிடுதல்
"உங்களின் உழைப்பை 80 சதவிகிதம் திட்டமிடவும், 20 சதவிகிதம் திட்டமிட்டப்படி செயல்படுத்தவும் தொடங்கினால் நீங்கள் நிச்சயம் வெற்றியாளர்தான்' - இது ஆபிரஹாம் லிங்கனின் கூற்று.
புதிதாக ஒரு விஷயத்தை/திறனைக் கற்றுக்கொள்ளும்போது கண்டிப்பாக பெரும்பாலானோருக்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனினும் முடிந்தவரை திட்டமிட்டு செயல்படுத்தினால் நேரம் குறையும். அதாவது நீங்கள் கற்றுக்கொள்ளும் திறன் குறித்த முழு தகவல்களைத் தெரிந்துகொண்டு அதில் இறங்குவது நல்லது.
மேலும் ஒன்றைக் கற்றுக்கொள்ள பல வழிகள் இருக்கும். அதில் எளிதாக விரைவாக கற்றுக்கொள்ளும் முறை எதுவென தெரிந்துகொண்டு அதன் வழியே கற்றுக்கொள்வது நேரம் விரயமாவதைத் தடுக்கும்.
ஆர்வம்... ஈடுபாடு
எந்த ஒரு செயலையும் ஆர்வத்துடன் செய்தால் மட்டுமே அது முழுமைபெறும். ஆர்வமின்றி செய்யும் ஒரு செயலானது எப்போதும் நல்ல பலனைத் தராது.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருப்பவர்களுக்கு அது எவ்வளவு கடினமாக இருந்தாலும் பெரிதாகத் தெரியாது. ஆர்வத்துடன் ஈடுபாட்டுடன் கற்றுக்கொள்ளும்பட்சத்தில் தெளிவான அறிவு கிடைக்கும். ஆர்வம் இருக்கும் விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்; அல்லது கற்றுக்கொள்ளும் விஷயத்தில்ஆர்வத்தை ஏற்படுத்துங்கள்.
அனுபவசாலிகளின் அனுபவம்
நீங்கள் புதிதாக ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ளும்போது அடிப்படைப் புரிதல் எதுவும் இல்லையெனில், அதுகுறித்து தெரிந்தவர்களிடம் கருத்து கேட்கலாம்.
நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பும் துறை சார்ந்த முழு அனுபவம் பெற்றவர்களின் உதவியுடன் கற்கும் பட்சத்தில் வெகு சுலபமாக அறிவைப் பெறுவதுடன் அதிலுள்ள நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ளலாம்.
குறைந்த உழைப்பு... அதிக பலன்!
வளர்ந்துவிட்ட தொழில்நுட்ப உலகில் கடின உழைப்பை விட புத்திசாலித்தனமாக செயல்படுவது எப்படி என்று பார்க்க வேண்டும்.
உதாரணமாக அறிவியல் குறித்த ஒரு புதிய விஷயத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு ஏராளமான புத்தகங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு புத்தகத்தையும் படித்து முடித்து நீங்கள் ஒரு முடிவுக்கு வர பல ஆண்டுகள் ஆகிவிடும். எனவே, நீங்கள் கற்றுக்கொள்ளப்போகும் அந்த ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான சரியான ஒரு புத்தகத்தை மட்டும் தேர்வு செய்ய அறிவியலில் புலமைவாய்ந்த ஒருவரிடம் அது குறித்து கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரே குறிக்கோள்
ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக புதிய கற்றலுக்கு அதற்கென காலத்தைத் திட்டமிட்டுக்கொண்டு அது முற்றும்வரை அந்த ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். இது அந்த புதிய கற்றலின் மீதான ஆர்வத்தையும், ஆழத்தையும் அதிகரிக்கும். ஒரு கற்றலை முடித்து செயல்பாட்டிற்கு வந்த பின்னர் அடுத்தவற்றைத் தொடங்குவது நல்லது. மாறாக ஒரே நேரத்தில் பலவற்றைக் கற்பது நேரத்தை வீணடிக்கும்.
கற்பதற்குப் பல வழிகள்!
ஒன்றைக் கற்பதற்கு புத்தகங்களை மட்டும் படிக்காமல், ஆசிரியரிடம் தெரிந்து கொள்ளுதல், விடியோ வடிவில் பார்ப்பது, செய்முறை கற்றல், குழுவுடன், நண்பர்களுடன் அது குறித்த கலந்துரையாடல், கற்றவற்றை நினைவுபடுத்திப் பார்த்தல் என பல முறைகளைக் கையாள வேண்டும்.
பயிற்சியாளரும் தேவை
சிலவற்றை நாமே கற்றுக் கொள்ள முடியாது. அதற்கு முறையான பயிற்சியாளர்கள் அவசியம் குறிப்பாக ஒரு விளையாட்டுப் பயிற்சி என்றால் அதற்கு பயிற்சியாளர் அவசியம். அதிலும் நல்ல பயிற்சியாளர் வேண்டும். ஒரு விஷயத்தை முழுமையாகக் கற்றுக் கொள்வதே நம்மைத் திருப்திப்படுத்தும். எனவே, உங்களுடைய ஆர்வத்தைத் தூண்டவும் நீங்கள் கற்றுக் கொள்ளும் திறனில் திறமையுள்ளவராக மாறவும் சிறந்த பயிற்சியாளரை தேர்வு செய்ய வேண்டும்.
மதிப்பீடு செய்வது
நீங்கள் எழுதும் தேர்வை எவ்வாறு ஆசிரியர் மதிப்பிடுகிறாரோ அதுபோல உங்களுடைய வேலைக்கான / கற்றலுக்கான மதிப்பீடை நீங்களே அளிக்க வேண்டும்.
நீங்கள் எதிர்பார்த்த அளவு கற்றுக்கொண்டு விட்டீர்களா, புதிய கற்றலில் தெளிவான அறிவு கிடைத்ததா, ஏதேனும் சந்தேகங்கள் உள்ளதா? என பார்த்து சந்தேகங்கள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும். நீங்கள் புதிதாக கற்றுக்கொண்டது செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே நீங்கள் கற்றுக் கொண்டதன் பலன் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும்.
உடல்நலன்
"சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்பதற்கேற்ப உடல்நலனில் அக்கறை செலுத்துவது முக்கியம்.
மூன்று வேளை சத்தான உணவு, 8 மணி நேர உறக்கம், குறிப்பிட்ட நேர இடைவெளியில் தண்ணீர் அருந்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பசியுடன் இருக்கும்போது, உங்கள் மூளை எந்த தகவலையும் உறிஞ்சுவது கடினம். மேலும் தினமும் காலை அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்பவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.