விரட்டுவோம்... மனச்சோர்வை!

உடல் சோர்வை விட மனச்சோர்வு என்பது உலகளாவிய பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
விரட்டுவோம்... மனச்சோர்வை!
Updated on
2 min read


உடல் சோர்வை விட மனச்சோர்வு என்பது உலகளாவிய பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அதிலும் வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்ப உலகத்தில் மனரீதியாகஅதிக அளவில் பாதிக்கப்படுவது பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களே.

வாழ்வின் வளர்ச்சியைக் குலைக்கும் மனச்சோர்விலிருந்து இளைஞர்களை மீட்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், சுகாதார வல்லுநர்கள் பல வழிகளில் போராடிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

சமீபமாக பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களின் மனச்சோர்வுக்கு கரோனா பொதுமுடக்கமும் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். சமூகத்தில் தனிமைப்பட்டிருப்பது, பொருளாதாரரீதியாக பின்னடைவு என பல காரணிகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இந்தியாவில் 10 வயது -17 வயதுடைய கிட்டத்தட்ட 50% குழந்தைகள் கரோனா காலத்தில் மன உளைச்சலுக்கு ஆளானதாக ஓர் இந்திய நிறுவனம் மேற்கொண்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு என்ற டிஜிட்டல் கல்வி முறையால் ஓர் ஆண்டுக்கும் மேலாக வீட்டில் முடங்கியுள்ளனர். கரோனா பரவல் குறைந்து, கடந்த சில மாதங்களாக ஓரளவுக்கு பழைய நிலைமைக்குத் திரும்பும் இந்த வேளையில், இரண்டாம் அலை என்ற பெயரில் கரோனா மறுஉருவம் எடுத்து வருகிறது. இதனால் மாணவர்கள் எப்போது நேரடி வகுப்புகளுக்குச் செல்வார்கள் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

நாள் முழுவதும் ஓர் அறைக்குள் அமர்ந்து கணினித்திரை வழியாக ஆசிரியர்கள் பேசுவதை மட்டும் கேட்டுக்கொண்டு கல்வி கற்பதில் பெரும்பாலான மாணவர்களுக்கு ஈடுபாடில்லை என்றே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அவர்களுக்கு பாடம் புரியவில்லை என்பதோடு மனரீதியாகப் பாதிக்கப்படுவதும் பல்வேறு ஆய்வுகளின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆய்வகச் சோதனைகள், குழுவாகப் படித்தல், செயல்முறை விளக்கம் என எதுவுமின்றி அவர்களுக்கு கல்வி போதிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், கற்கும்திறன் குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்களின் மனரீதியான பிரச்னையில் டிஜிட்டல் கல்வி முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

இந்தியாவில் 4 இளைஞர்களில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது. 15 வயது -29 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினர், இளைஞர்களிடையே தற்கொலை அதிகம் நிகழ்கிறது என்றும் நாட்டில் ஒரு மணி நேரத்திற்கு இந்த வயதுடைய 15-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நிகழ்வதாக இந்த அறிக்கை கூறுகிறது.

எனவே, கடந்த சில ஆண்டுகளாகப் பள்ளிகள், கல்லூரிகளில் இதுகுறித்த விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள், மனநல நிபுணர்கள் மூலமாக மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் இளைஞர்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள் இதோ...

பிரச்னையை அடையாளம்காணுதல்:

எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண்பதற்கான வழி, அந்த பிரச்னைக்கான காரணத்தை அடையாளம் காண்பது; பின்னர் அதை ஏற்றுக் கொள்வது. அந்தவகையில் உங்களுடைய மனச் சோர்வுக்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். எதை நினைத்து நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டால் அதிலிருந்து விடுபடுவது சுலபம்.

இளம் வயதில் மன ஆரோக்கியம் முக்கியம் என்பதை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிரச்னைகளைத் தெரிந்துகொள்வதில் பெற்றோர்கள், நண்பர்களின் உதவியை நாடலாம்.

புரிதலுக்குப் பின்னர் தீர்வு: உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பதே தனிமைக்கும் மன உளைச்சலுக்கும் காரணமாக அமைகிறது. எனவே, நீங்கள் எதை நினைத்து வருத்தப்படுகிறீர்கள் என்று தெரிந்துகொண்டு அதை உங்கள் பெற்றோர் அல்லது நண்பர்களிடம் வெளிப்படுத்துங்கள். இது பிரச்னை குறித்த புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தும்.

இதன் பின்னர் அதற்கான தீர்வை நீங்கள் எளிதில் அடையலாம். நண்பர்கள், பெற்றோர்களும் உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வுவழங்கலாம்.

கவனத்தை திசை திருப்புங்கள்: நீங்கள் மன அழுத்தத்தில் இருக்கும்போது உங்களுக்கான குறுகிய கால இலக்குகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அதை நோக்கிய பயணத்தைத் தொடங்குங்கள். அந்த இலக்கை நோக்கி உங்கள் கவனம் இருக்கும்பட்சத்தில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். மேலும் எதிர்கால வளர்ச்சிக்கு இந்த குறுகிய கால இலக்கு உதவும், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உங்களுக்காக நேரம்செலவிடுங்கள்:

ஒருவருடைய இன்பத்தில் இல்லாவிட்டாலும் துன்பத்தில் உடன் இருப்பவனே நண்பன்என நண்பனுக்கு இலக்கணம்கூறுவார்கள்.

எனவே நீங்கள் மன உளைச்சலில் இருக்கும்போது குடும்பத்தினர், நண்பர்கள் அல்லது மனதுக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவழியுங்கள்.

நண்பர்களுடன் வெளியில் செல்வது, வெளியூர் பயணம் மேற்கொள்வது, இயற்கையை ரசிப்பது, விளையாடுவது, வீட்டு வேலைகளைச் செய்வது என உங்களுக்குப் பிடித்தவற்றில் நேரத்தைச் செலவழியுங்கள். இது உங்களை மன அழுத்தத்தில் இருந்து விடுபட பெரிதும்உதவும்.

குறிக்கோளை நினைவுபடுத்துங்கள்: கஷ்டத்தில் இருந்து மீண்டு வர ஒரே உந்துசக்தி குறிக்கோள். வாழ்க்கையில் எல்லாருக்கும் எதாவது ஒரு குறிக்கோள் இருக்கும். அதை அடைய வேண்டுமெனில் நாம் பல தடைகளைத் தாண்டி வர வேண்டும்.

எனவே, இம்மாதிரியான மன உளைச்சலுக்கு ஆளாகும் நேரத்தில் குறிக்கோள்களைநினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.

பதின்ம வயது என்பது சாதனை வாழ்க்கையின் ஆரம்பக்கட்டம். சாதனை எனும் மரம் வளர விதை விதைக்க வேண்டிய நேரம். எதிர்கால கட்டடத்துக்கு அடித்தளமிடும் நேரம் இது என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக் கொள்ளுங்கள்.

மருத்துவ உதவியை நாடுங்கள்: சாதாரணமாக வாழ்க்கையில் கஷ்டம் வரும்போது எல்லாருக்குமே மனச்சோர்வு ஏற்படும். அவ்வாறான பிரச்னைகள் எனில் மேற்குறிப்பிட்ட வழிகளில் சரியாகிவிடும்.

மேற்குறிப்பிட்ட யோசனைகள் செயல்படாத பட்சத்தில்மருத்துவர் உதவியை நாடலாம். மனநல ஆலோசகர்களிடம் சென்று உங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணலாம்.

சில சந்தர்ப்பங்களில் மருந்துகள் மற்றும் குறுகிய அல்லது நீண்ட கால சிகிச்சைகள் தேவைப்படலாம். மனநல சிகிச்சையா என்று யோசிக்காமல் உங்களுடைய நலனுக்காக சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

மனச்சோர்வை விரட்டுவோம்! இலக்கை நோக்கிப் பயணிப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com