தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மன உணர்வுகளைக் கணக்கிடும் "செயலி'!

மனித வாழ்வுக்கான அடிப்படைகளுள் ஒன்று உணர்வுகள். மகிழ்ச்சி, துன்பம், சினம், கனிவு, அன்பு என உணர்வுகளின் அடிப்படையில் தனிமனிதர்களை வரையறுத்துவிடலாம்.

News image
Updated On :30 மார்ச் 2021, 12:30 am

சுரேந்தர் ரவி

மனித வாழ்வுக்கான அடிப்படைகளுள் ஒன்று உணர்வுகள். மகிழ்ச்சி, துன்பம், சினம், கனிவு, அன்பு என உணர்வுகளின் அடிப்படையில் தனிமனிதர்களை வரையறுத்துவிடலாம். ஆனால், அந்த உணர்வுகளைத் துல்லியமாகக் கணக்கிட முடியுமா? 

பொதுவாக மனிதர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்பதை அவர்களைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு கூற முடியும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மக்களில் பெரும்பாலானோர் மகிழ்ச்சியான உணர்வுகளைக் கொண்டிருப்பார்கள். உறவினர்களின் மறைவு, தேர்வில் தோல்வி உள்ளிட்ட தருணங்களில் அவர்களிடம் சோகம் குடி கொண்டுவிடும். 

மனிதர்கள் எத்தகைய உணர்வுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பொதுவாகவே கூற முடியும்; துல்லியமாகக் கணிப்பது கடினம். ஆனால், நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில்,  உணர்வுகளையும் துல்லியமாகக் கணக்கிட   செயலி ஒன்றை உருவாக்கியுள்ளனர், அமெரிக்காவின் வெர்மான்ட் பல்கலைக்கழக மாணவர்கள். 

அதன்படி, சமூக வலைதளங்களில் மக்கள் பதிவிடும் கருத்துகளை ஆராய்ந்து, அவர்கள் எத்தகைய மனநிலையில் இருக்கிறார்கள் என்பதைக் கணக்கிட முடியும். 

"ஹெடோனோமீட்டர்' என்ற அந்தச் செயலி,  டுவிட்டர் சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்ந்து, மக்களின் உணர்வுகளைக் கணக்கிடுகிறது. அந்த வலைதளத்தில் மக்கள் பதிவிடும் கருத்துகளில் உள்ள சொற்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் மனநிலையை அச்செயலி கணக்கிடுகிறது. 

அதற்காக மக்களின் துன்பம், இன்பம் ஆகிய உணர்வுகள் தொடர்பான சுமார் 5,000 சொற்கள் அச்செயலியில் பதிவேற்றப்பட்டுள்ளன. மக்கள் அடிக்கடி பயன்
படுத்தும் சொற்களைத் தேர்ந்தெடுத்து செயலியில் பதிவேற்றியுள்ளனர். 

அச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை மதிப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன. சமூக வலைதளத்தில் மக்கள் பதிவிடும் கருத்துகளில் உள்ள சொற்களைக் கண்டறிந்து அச்சொற்களுக்கான மதிப்பீட்டை செயலி வழங்குகிறது. 

ஒட்டுமொத்த மதிப்பீடு அதிகமாக இருந்தால், மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பது வெளிப்படுகிறது. மதிப்பீடு மிகவும் குறைவாக இருந்தால் மக்கள் சோகச் சூழலில் இருப்பதை அறிய முடிகிறது. 

ஒவ்வொரு நாளும் ட்விட்டர் வலைதளத்தில் பதிவிடப்படும் கோடிக்கணக்கான கருத்துகளை ஆய்வு செய்யும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அந்த ஆய்வின் அடிப்படையில் பெரும்பாலான மக்களின் மன உணர்வுகளை அச்செயலி கணக்கிடுகிறது. மக்கள் வசிக்கும் பகுதி, சமூக-பொருளாதார நிலை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் மக்களின் உணர்வுகள் மாறுவதாக இந்தச் செயலி மூலம் கண்டறிந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.  

தற்போது வரை மகிழ்ச்சி, சோகம் என்ற இரு உணர்வுகளை மட்டும் கணக்கிடும் வகையில் "ஹெடோனோமீட்டர்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் கோபம், அச்சம், வியப்பு உள்ளிட்ட உணர்வுகளையும் கணக்கிடும் வகையில் செயலி மேம்படுத்தப்படவுள்ளது. 

டுவிட்டர் சமூக வலைதளத்தை தினந்தோறும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருவதால், அதில் தரவுகள் அதிகமாக உருவாகின்றன. மக்களின் உணர்வுகளைக் கணக்கிடுவதற்கு அந்த வலைதளத்தில் அவர்கள் வெளியிடும் கருத்துகளே அடிப்படையானவை. எனவே, தற்போது அந்த வலைதளத்தில் வெளியாகும் கருத்துகளின் அடிப்படையில் மட்டுமே "ஹெடோனோமீட்டர்' செயலி செயல்பட்டு வருகிறது. 

தற்போது ஒவ்வொரு நாளும் டுவிட்டரில் பதிவிடப்படும் 500 மில்லியன் மெசேஜ்களில் 10 சதவீதம் (5 கோடி) மேசேஜ்களை ஆய்வுக்காகத் தேர்ந்தெடுத்து,  அவற்றில் காணப்படும் 200 மில்லியன்  சொற்களை தினம்தோறும் ஆராய்ச்சி செய்து  மக்கள் மகிழ்ச்சியான மனநிலையோடு இருப்பதாக  அது முடிவுக்கு வந்திருக்கிறது. 

டுவிட்டர் மட்டுமல்ல,  ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட மற்ற சமூக வலைதளங்களில் மக்களால் பதிவிடப்படும் கருத்துகளையும் ஆய்வு செய்யும் வகையில் அச்செயலி விரைவில் மேம்படுத்தப்படவுள்ளது. மேலும், சமூக வலைதளத்தில் ஆங்கிலத்தில் வெளியிடப்படும் கருத்துகளை மட்டுமே ஆராய்ந்து, மனிதர்களின் உணர்வுகளை செயலி தற்போது கணக்கிடுகிறது. 

தற்போது ஆங்கிலத்தில் பதிவிடப்படும் டுவிட்டர் பதிவுகளை மட்டுமே இந்தச் செயலி கணக்கிடுகிறது. வருங்காலத்தில் ஆங்கிலம் தவிர மேலும் 12 மொழிகளில் பதிவிடப்படும் பதிவுகளை ஆய்வு செய்யும் வகையில் இந்தச் செயலி மேம்படுத்தப்பட உள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.