பெட்ரோல் வாகனம்... 4 மணி நேரம்... மின்சார வாகனம்!

பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி ஓடுகிற வாகனங்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் குறைந்து கொண்டே போகும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
பெட்ரோல் வாகனம்... 4 மணி நேரம்... மின்சார வாகனம்!


பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தி ஓடுகிற வாகனங்களின் எண்ணிக்கை வருங்காலத்தில் குறைந்து கொண்டே போகும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை, காற்றை மாசுபடுத்துகிறது.

இன்னொருபுறம் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்களின் விலை ஏற்றம்.

இதற்கான மாற்று பெட்ரோல், டீசல் வாகனங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிட்டு, மின்சார வாகனங்களுக்கு மாறுவதுதான்.

ஆனால் ஏற்கெனவே உள்ள பழைய பெட்ரோல் வாகனங்களை என்ன செய்வது? அவற்றைப் பயன்படுத்தாமல் தூக்கியெறிந்துவிட முடியுமா?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தர வந்திருக்கிறது, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஸூயிங் ரீட்ரோஃபிட் நிறுவனம்.

உங்கள் வீட்டில் உள்ள பெட்ரோல் இருசக்கர வாகனத்தை நான்கே மணி நேரங்களில் மின்சார இருசக்கர வாகனமாக அது மாற்றித் தந்துவிடுகிறது. இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் சச்சின் ஷெனாய் இது தொடர்பாக கூறியதிலிருந்து...

""ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை நூறு ரூபாயைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய இருசக்கர வாகனத்தை வீட்டில் நிறுத்திவிட்டு, பேருந்து, மின்சார ரயில் பயணத்தை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெட்ரோல் வாகனத்துக்குப் பதிலாக மின்சார இருசக்கர வாகனத்தை வாங்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். தற்போது தயாராகி மார்க்கெட்டுக்கு வந்திருக்கும் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை இருக்கிறது. விலை அதிகம் என்பதால், புதிய மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவதைப் பற்றி பலரால் நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை.

இந்நிலையில் பெட்ரோல் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றான மின்சார இருசக்கர வாகனத்தை மக்கள் பயன்படுத்த என்ன செய்வது என்று யோசித்தேன். அதன் விளைவாக உருவானதுதான் ஸூயிங் ரீட்ரோஃபிட்.

ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் அதிகமாகப் பயன்படுத்தும் இருசக்கர வாகனமாக இருப்பது ஸ்கூட்டிகள்தாம். ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஸ்கூட்டிகளை நிறைய பெண்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே இந்த பெட்ரோல் ஸ்கூட்டிகளுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டிகளை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். இதற்காக பெட்ரோல் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றக் கூடிய கருவிகள் அடங்கிய தொகுப்பை தயாரித்தோம்.

பெட்ரோல் இருசக்கர வாகனத்தை மின்சார வாகனமாக மாற்ற எங்களிடம் ஒருவர் கொடுத்தால், முதலில் அந்த பெட்ரோல் வாகனத்தில் உள்ள பெட்ரோல் என்ஜின், பெட்ரோல் டேங்க், சைலன்ஸர் ஆகியவற்றை நீக்கிவிடுவோம். அதற்குப் பதிலாக, மின்சார வாகனமாக மாற்ற உதவக் கூடிய கருவிகளைப் பொருத்துவோம். பாதுகாப்பான பயணத்துக்குத் தேவையான வயரிங் வேலைகளைச் செய்வோம். கூடவே, 2 கிலோவாட் திறனுள்ள லித்தியம் அயன் பேட்டரியைப் பொருத்துவோம்.

ஒரு பெட்ரோல் இருசக்கர வாகனத்தை குறைந்தபட்சம் 4 மணி நேரங்களில் மின்சார வாகனமாக மாற்றிக் கொடுத்துவிடுவோம். காலையில் எங்களிடம் கொடுக்கப்பட்ட பெட்ரோல் இருசக்கர வாகனம் மதியத்துக்குள் மின்சார இருசக்கர வாகனமாக மாறிவிடும்.

பெட்ரோல் வாகனம் என்றால் தேவைப்படும்போது உடனே பெட்ரோல் போட்டுக் கொள்ள முடியும். இந்த மின்சார வாகனத்தில் மின்சாரம் தீர்ந்து விட்டால் என்ன செய்வது? என்று நிறையப் பேர் நினைப்பார்கள். நாங்கள் தயாரித்துக் கொடுக்கிற மின்சார வாகனத்தை ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ.தூரம் வரை ஓட்ட முடியும். பிறரை வாகனத்தில் ஏற்றாமல் தனியாளாக மின்சார வாகனத்தை ஓட்டிச் சென்றால் 80 கி.மீ. தூரம் வரை பயணம் செய்ய முடியும்.

நிறைய மின்னேற்றம் செய்யும் நிலையங்களையும் பெங்களூருவில் அமைத்திருக்கிறோம். உதாரணமாக பெங்களூருவில் சுமார் 700 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. நாங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 லட்சம் மின்சாரம் சார்ஜ் செய்யும் மையங்களை அமைத்திருக்கிறோம்.

பெட்ரோல் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றும்போது வாகனத்துக்குச் சொந்தக்காரர், மின்சார வாகனத்துக்கான பேட்டரியைச் சொந்தமாக வாங்க வேண்டியதில்லை. பேட்டரிக்கான மாத வாடகையாக ரூ.80-ஐ எங்களிடம் கொடுத்தால் போதும்.

அடுத்து ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்ய பல மணி நேரங்கள் ஆகும் என்ற கருத்து பரவலாக இருக்கிறது. ஆனால் 3 நிமிடங்களில் பேட்டரியை சார்ஜ் செய்துவிட முடியும்.

பெட்ரோல் வாகனத்தை மின்சார வாகனமாக மாற்றுவதற்கு மிகக் குறைந்த நேரமே ஆகும். என்றாலும், மின்சார வாகனத்தை சாலையில் ஓட்டிச் செல்ல அதை அந்தப் பகுதியில் உள்ள ரீஜினல் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வதற்கு உதவுவதற்காக பல அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் உள்ளன. அவற்றுடன் நாங்கள் தொடர்பு ஏற்படுத்தித் தருகிறோம்.

பெட்ரோல் இருசக்கர வாகனத்தை மின்சார இருசக்கர வாகனமாக மாற்ற ரூ.26,999 ஆகும். இதை மாதத் தவணை முறையில் கூட எளிதில் செலுத்திவிடலாம். பெட்ரோல் வாகனமாக இருந்தபோது வாங்கிய பெட்ரோலுக்கான செலவில், பாதிதான் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்ய ஆகும். அதை வைத்து இந்த மாதத் தவணையைச் செலுத்திவிடலாம்'' என்கிறார் சச்சின் ஷெனாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com