பளு தூக்கும் போட்டி...: பதக்கம் பெற்ற இளைஞர்!

இது கணிப்பொறி காலம் என்பதால் ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்ய இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அரசுப் பணி செய்வதையும் விரும்புகிறார்கள்.
பளு தூக்கும் போட்டி...: பதக்கம் பெற்ற இளைஞர்!
Published on
Updated on
2 min read


இது கணிப்பொறி காலம் என்பதால் ஐ.டி நிறுவனங்களில் வேலை செய்ய இளைஞர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். அரசுப் பணி செய்வதையும் விரும்புகிறார்கள். ஆனால், இதற்கு மத்தியில் இளைஞர்களின் கவனம் விளையாட்டுக்குத் திரும்புவதையும் காண முடிகிறது.

அரசு வேலையில் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கீடு உள்ளதால், பளுதூக்கும் பயிற்சியில் பங்கேற்று ஆர்வத்துடன் போட்டிகளில் பங்கேற்கும் இளைஞர்கள் அதிகரித்து வருகின்றனர். அதேபோல், தேசிய அளவிலான போட்டிகளிலும் சிறப்பு இடங்களையும் பெற்று வருகின்றனர்.

இதில் சென்னை திருவள்ளூர் பகுதியில் பளு தூக்கும் பயிற்சியின் முன்னோடிகளாக பலர் இருந்துள்ளனர். அதனால், இப்பகுதியில் ரயில்வே இன்ஸ்டிடியூட், ராயல் கிளப், டைகர் ஜிம்னாஸ்டிக், தீனதயாளன் கிளப் உள்ளிட்ட பல பளு தூக்கும் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளப்புகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் மாநில அளவிலான போட்டிகளில் குறைந்த அளவிலேயே இளைஞர்கள் பங்கேற்று வந்தனர். தற்போது, தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்ற பலர் சிறப்பிடம் பெற்று ரயில்வே, அஞ்சல் மற்றும் காவல்துறை பணிகளுக்குச் செல்கின்றனர்.

இதில் கடந்த வாரம் அகில இந்திய பளுதூக்கும் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இருபாலருக்கும் ஆன தேசிய அளவிலான பளுதூக்கும் போட்டி பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள விளையாட்டு மையத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அளவில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் தமிழகத்திலிருந்து 6 பெண்கள் உள்பட 13 பேர் கலந்து கொண்டனர். இதில் திருவள்ளூர் அருகே ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த டி.பிருத்திவி ராஜ் என்ற இளைஞரும் பங்கேற்றார். ஐ.டி.ஐ மாணவரான அவர், திருவள்ளூர் ரயில்வே இன்ஸ்டிடியூட்டில் பளுதூக்கும் பயிற்சி பெற்று வந்தார்.

இப்போட்டியில் பங்கேற்று தேசிய அளவில் 3 ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை செய்துள்ளார். இவர் ஏற்கெனவே மாநில அளவிலான போட்டியில் வெண்கலம் பதக்கம் பெற்றவர்.

""எங்கள் கிராமம் மற்றும் எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பளு தூக்கும் போட்டியில் பதக்கம் பெற்ற சிலர் ரயில்வே, அஞ்சல் பணியில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களைப் பார்த்து பளு தூக்கும் போட்டியில் பங்கேற்க எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே பயிற்சி மையத்தில் பயிற்சிக்குச் சேர்ந்தேன். பல போட்டிகளில் பங்கேற்று சிறப்பிடமும் பெற்று வருகிறேன். இப்பயிற்சியில் ஈடுபடும்போது கை வலி, தசை வலி மற்றும் தசைச் சிதைவு, மூட்டு வலி போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற பாதிப்புகளைக் கடந்துதான் சாதனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது'' என்கிறார் பிருத்திவிராஜ்.

இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட பளுதூக்கும் சங்க செயலாளர் நவநீதவரதனிடம் கேட்டோம்.

""திருவள்ளூர் மாவட்டத்தில் பத்துக்கும் பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் பயிற்சி பெறுபவர்கள் குறைவாகவே இருந்தார்கள். தற்போது இங்கு நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த பயிற்சி பெறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காவல்துறை பணியில் இப்பயிற்சி பெற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். அரசின் 3 சதவீத ஒதுக்கீடு இந்த விளையாட்டில் பலரைக் கவனம் பெற வைக்கிறது.

தனியார் துறைகளில் இப்பயிற்சியில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் அளித்தால், மேலும் பலர் பளுதூக்கும் விளையாட்டில் பயிற்சி பெற வாய்ப்பு உண்டு.

மற்ற விளையாட்டுக்களுக்கு நிதி உதவி கிடைக்கிறது. ஆனால், இப்போட்டியில் பங்கேற்போருக்கு நிதி உதவி கிடைப்பதில்லை. நிதி உதவி, தனியார்துறை வேலைவாய்ப்பு ஆகியவை கிடைத்தால் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கம் பெறுவதற்கு வாய்ப்புள்ளது'' என்கிறார் நவநீதவரதன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com