

உயர்ந்த கல்வி நிறுவனங்களின் மூலம் அனைத்து வகையிலும் படிப்பறிவைக் கொடுத்து சக வயதினரை ஒப்பிடுகையில் தங்கள் பிள்ளைகள் ஒருபடியாவது மேலே இருக்க வேண்டும்; இந்த உலகத்தில் வெகு சிலர் மட்டுமே எட்டக்கூடிய வெற்றியை அடைந்து பிள்ளைகள் தங்களை பெருமைப்படுத்த வேண்டும் என்பதுதான் இன்றைய பெற்றோரின் பெருங்கனவாக இருக்கிறது.
முன்பெல்லாம் கிராமங்களில் 5 வயதில்தான் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பார்கள். ஆனால் இன்றோ குழந்தை, கருவில் இருக்கும்போதே அதற்கு கற்றுக் கொடுக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். கரு உருவாகி 4 ஆவது மாதத்தில் குழந்தைக்கு கேட்கும், கவனிக்கும் திறன் வந்துவிடுவதாகவும் அப்போதிலிருந்தே குழந்தைகளுக்கு கதை சொல்லலாம், அறிவுபூர்வமான விஷயங்களைப் பகிரலாம் என்று இன்றைய மருத்துவர்களும் அறிவுரை கூறுகின்றனர்.
அடுத்ததாக, 2 வயதிலே குழந்தைகளுக்கென இருக்கும் பிரத்யேகப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள். அப்போதே மொழியைப் பேசவும் எழுதவும் கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர். ஒரு 5 வயதில் குழந்தைகளுக்கு அடிப்படை எழுத்துகள் தெரிந்திருக்க வேண்டும் என்பது குழந்தைகளின் இப்போதைய தகுதியாக இருக்கிறது.
அடுத்து எல்.கே.ஜி. முதலே உயர்தரக் கல்வி என்று கருதப்படும் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளியில் படிக்க வைப்பது, தாய் மொழியைத் தவிர்த்து கட்டாயமாக ஆங்கில அறிவைப் புகுத்துவது, உயர்கல்விக்காக பள்ளிப்பருவத்திலேயே இதர வகுப்புகளில் சேர்ப்பது என பிள்ளைகளின் அறிவைத் திணிக்க பெற்றோர்கள் பெரும்பாடுபடுகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வெளியில் ஓடியாடி விளையாடுவதில்லை. அதற்குப் பதிலாக, கட்டணம் செலுத்தி விளையாட்டுப் பயிற்சிகள், நீச்சல், கராத்தே... என பிள்ளைகளுக்கு விருப்பமில்லை எனினும் கூடுதல் செயல்பாடுகளில் அவர்களைப் புகுத்துகின்றனர். புத்தக அறிவு தவிர்த்து ஏதேனும் கூடுதல் செயல்பாட்டில், குழந்தைகள் ஈடுபட வேண்டும் என்பது நவீன கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.
இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி பெற்றோர்கள் தங்களின் கனவுகளை பிள்ளைகளின் மீது திணிக்கிறார்கள். தங்களால் படிக்க முடியவில்லை என்றும் தங்களுடைய பெற்றோர்கள் தங்களுக்கு இப்படியான ஒரு வசதி, வாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை என்றும் இன்றைய பெற்றோர்கள் அலட்டிக்கொள்கிறார்கள். இதனை சிறுவயதிலேயே பிள்ளைகளின் மனதிலும் விதைக்கிறார்கள். சிறு வயதில் இதனை ஆமோதிக்கும் குழந்தைகள், குறிப்பிட்ட வயது வந்ததும் சிந்தித்து செயல்படுகிறார்கள். அந்த நேரத்தில் பிள்ளைகளின் விருப்பங்கள் பல ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிக்கப்படுவதால்தான் பெற்றோர்கள் - பிள்ளைகளுக்கு இடையே பிரச்னைகளும் ஏற்படுகின்றன. கல்லூரியில் என்ன படிப்பு தேர்வு செய்வது, என்ன வேலைக்குச் செல்வது என்பதில்கூட இளம்பருவத்தினரால் தனித்து முடிவெடுக்கவில்லை.
இன்று படித்த படிப்புக்கு வேலை செய்வோர் மிகவும் குறைவு. ஏனெனில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ள வேளையில், படித்திருந்தாலும் போட்டி நிறைந்த உலகில், முட்டி மோதி முந்தி வருவது என்பது எல்லோராலும் சாத்தியப்படுவதில்லை. கிடைத்த வேலையைச் செய்யும் பலருக்கு மத்தியில், உயர்பதவிகளை துறந்துவிட்டு பிடித்த துறையில் கீழ்நிலையில் வேலை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைச் சார்ந்தது.
கல்லூரியில் ஒரு துறையை ஆர்வத்துடன் தேர்வு செய்து படித்து பின்னர் வேறு ஒரு துறையில் நாட்டம் ஏற்பட்டு அதன்வழிச் சென்று அந்தத் துறையில் வெற்றியும் கண்டுள்ளனர் இன்றைய சாதனையாளர்கள் பலர்.
இளைஞர்களுக்கு ஒருகட்டத்தில் முதிர்ச்சி ஏற்பட்டு தனக்கு என்ன தேவை, எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்று தெளிவுடன் முடிவெடுக்கிறார்கள். ஆனால், அவர்களை அந்த கனவை நோக்கிச் செல்ல பெரும்பாலான பெற்றோர்கள் அனுமதிப்பதில்லை. பெற்றோரின் விருப்பத்தின்பேரில் அவர்கள் ஒரு வேலையில் ஈடுபடும்போது அதன் பலனும் பெரிதாக இருக்காது. மாறாக, வெறுப்பும் மனஅழுத்தமும்தான் ஏற்படும்.
பணம், பதவி இவற்றை எல்லாம் தாண்டி மனதுக்குப் பிடித்த வேலையைச் செய்யும்போது அதில் இருக்கும் திருப்தியும் மகிழ்ச்சியும் அதனால் கிடைக்கும் நம்பிக்கையும் விலை மதிப்பில்லாதது. விருப்பமான ஒன்றைத் தேடிச் செல்லும்போது தோல்விகளும் வரலாம். ஆனால், அவை வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான அனுபவங்கள். பிள்ளைகளுக்கு அவர்கள் வழியில் செல்ல அனுமதிப்பதுடன், தொடர்ந்து ஊக்கப்படுத்துவதே நல்ல பெற்றோரின் பண்பு. பிள்ளைகள் செல்லும் வழியில் இருக்கும் நிறை, குறைகளை ஆராய்ந்து எடுத்துக்கூற வேண்டிய பொறுப்பு மட்டுமே பெற்றோருக்கு இருக்கிறது. மாறாக, அவர்களின் வழியின் குறுக்கே நிற்பது சரியானது அல்ல.
கடந்த 10-15 ஆண்டுகளில் உலகம் தொழில்நுட்ப ரீதியாக அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது. உலக அறிவுகளும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளும் கொட்டிக்கிடக்கின்றன. பெற்றோராகிய நீங்கள் இருந்த காலத்தில் பெரிதாக வாய்ப்புகளும் அறிவுரைகளும் இல்லை என்ற காரணத்திற்காக உங்கள் பிள்ளைகளின் மீது உங்கள் ஆசைகளைத் திணிப்பது எந்தவிதத்தில் சரியாக முடியும்?
மேலும், அனைத்துத் துறைகளிலும் ஒருவரால் சாதிக்க முடியாது, ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு துறையில் ஆர்வம் இருக்கும். அதனை பெற்றோர்கள் தெரிந்துகொண்டு அவர்களை அதில் ஈடுபடுத்த வேண்டும்.
இப்போதெல்லாம் குழந்தைகள் மீது அதிகப்படியான கல்வி திணிக்கப்படுவதால் அவர்கள் அதிகமாக மன அழுத்தத்திற்கும் ஆளாகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இதன் எதிரொலியாக தவறான வழிகளில் செல்வது முதல் தற்கொலை வரை விளைவுகளை பெற்றோர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
பெற்றோரின் சரியான ஆதரவு, கவனிப்பு, ஊக்கப்படுத்துதல் என கிடைக்கும்போது அந்த பிள்ளைகளுக்கு எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் சமாளிக்க உதவும். ஆனால், இன்று வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களினால் குழந்தைகளைக் கவனிப்பது, அவர்களிடம் பேசுவதற்குக்கூட நேரமில்லாமல் இருக்கின்றனர் நவீன பெற்றோர். குழந்தைகளுக்காகத்தான் கஷ்டப்பட்டு வேலைக்குச் செல்கிறோம், சம்பாத்திக்கிறோம் என்று கூறும் பெற்றோர், உங்கள் குழந்தைகளிடம் ஒரு சில நிமிடங்களாவது மனம்விட்டு பேசுங்கள். அவர்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு அவர்களின் கனவுகள் என்னவென்று கேளுங்கள். ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருங்கள்.
தாங்கள் வாழாத ஒரு நல்ல வாழ்க்கையை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைப்பதில் ஒரு தவறும் இல்லை. ஆனால், அப்படி ஒரு வாழ்க்கை பிள்ளைகளுக்கு பிடிக்காதபோது அதை அவர்களிடம் திணிப்பதுதான் கொடூரத்தின் உச்சகட்டம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விடுங்கள். தவறு செய்யும்போது திருத்துங்கள்; துவண்டுவிடும்போது உற்சாக வார்த்தைகளைக் கூறுங்கள். உங்கள் ஆலோசனைகளை வழங்குங்கள். ஆனால், அவர்கள் என்னவாக ஆக வேண்டும், எதைச் செய்ய வேண்டும் என நீங்கள் தீர்மானிக்க வேண்டாம். அவர்களுக்கும் ஒரு கனவு இருக்கிறது; அது அவர்களுக்கானது மட்டுமே. அதனை நிறைவேற்ற உடன் இருங்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.