வாழுங்கள்... நிகழ்காலத்தில்!
எண்ணங்களும் கனவுகளும் வாழ்வை அழகாக்குகின்றன.பெரும்பாலானோர் கனவுலகத்திலேயே அதிகம் வாழ்கின்றனர்.


எண்ணங்களும் கனவுகளும் வாழ்வை அழகாக்குகின்றன.
பெரும்பாலானோர் கனவுலகத்திலேயே அதிகம் வாழ்கின்றனர். நிகழ்காலத்தைப் பற்றி பெரிதாக அவர்கள் எடுத்துக் கொள்வதில்லை. எதுவெல்லாம் தங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற கனவிலேயே அவர்கள் நாள்களைக் கடத்துகின்றனர்.
எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை அனைவருக்குமே இருப்பதுதான். பொருள்களை வாங்க வேண்டும்; வீடு கட்ட வேண்டும்; பதவி உயர்வு வேண்டும்; சமூகத்தில் அந்தஸ்து வேண்டும்; குழந்தைகளைத் தரமான பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
நேர்மறையாளர்:
எதிர்காலத்தில் ஒரு விஷயம் நடைபெற வேண்டும் என விரும்பும் பலர், அது நிச்சயமாக நடைபெறும் என நம்பிக்கை கொண்டு நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
"எதிர்காலத்தில் நடக்கும் அனைத்தும் சிறப்பாகவேஇருக்கும்; நாம் நினைப்பவை நடக்கும்' என்ற சிந்தனை கொண்டவர்கள்தான் நேர்மறையாளர்கள். இதுபோன்ற சிந்தனைகள் சிறப்பானவை. அவை வாழ்க்கைக்கேற்ற இலக்கை நிர்ணயிக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், அந்த இலக்கை அடைவதற்காகப் போராட வேண்டிய தன்னம்பிக்கையையும் வழங்கும்.
"நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம்' என்ற துணிவே பாதி வெற்றியைத் தந்துவிடும். எதிர்காலத்தைப் பற்றி நேர்மறையாகவே சிந்திப்பவர்கள் குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்து அதை நோக்கிப் பயணிப்பர். அவர்களது மனதில் எப்போதும் நேர்மறை எண்ணங்களே உதிக்கும்.
எதிர்மறையாளர்:
ஒரு சிலர் எதிர்மறை எண்ணங்களுடையவராக இருப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி நினைத்தாலே அவர்களுக்கு எதிர்மறையாகவே அனைத்தும் தோன்றும். குறிப்பிட்ட விஷயம் நடக்காது, பல்வேறு பிரச்னைகள் வரும் என எதிர்மறை சிந்தனைகளே அவர்களது மனதை ஆக்கிரமித்திருக்கும்.
உதாரணமாக, இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். நேர்மறைச் சிந்தனையாளர்கள், போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி இளைஞர்களை மேலும் ஊக்குவிக்கும் வேலையில் ஈடுபடுவர். ""தொடர்ந்து போராடு. தினமும் உழைத்துக் கொண்டிரு. நிச்சயம் வெற்றி கிடைக்கும்'' என அவர்கள் பேசுவார்கள்.
ஆனால் எதிர்மறைச் சிந்தனையாளர்கள், ""போட்டித் தேர்வுகளில் எல்லாம் முற்றிலும் ஊழல். அவை நேர்மையாக நடைபெறு வதில்லை. தற்காலத்தில் போட்டி அதிகமாகிவிட்டது. கடினமாகப் படித்தாலும் வெற்றி பெற முடியாது'' எனப் பேசுவார்கள்.
இதில் யாருடைய பேச்சைக் கேட்க வேண்டும் என்பது வேறு விஷயம். ஆனால், நாம் யாராக இருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
நேர்மறையாளராகவா? எதிர்மறையாளராகவா?
நேர்மறையாளராக இருக்கிறோம் என்றால், அது முற்றிலும் சரியா? எதிர்மறையாளராக இருக்கிறோம் என்றால், அது முற்றிலும் தவறா? இரண்டுக்கும் பதில் இல்லை என்பதுதான் உண்மை. கண்மூடித்தனமான நேர்மறையாளராக இருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட விஷயத்தை செய்யத் துணிந்து, நேர்மறை எண்ணங்களைக் கொண்டிருப்பது தவறல்ல. ஆனால், அது எந்த மாதிரியான விஷயம், அதைச் செய்வதற்கான மன தைரியம், உடல்தகுதி ஆகிய அனைத்தும் நம்மிடம் உள்ளனவா என்பதை முழுமையாக ஆராய்ந்த பிறகே களத்தில் இறங்க வேண்டும். "நான் நேர்மறைச் சிந்தனை கொண்டவன். நான் நினைக்கும் அனைத்தும் சிறப்பாகவே நடந்தேறும்' என்று கண் மூடித் தனமாக நடந்து கொள்வது அறிவுடைமை ஆகாது.
எதிர்மறையாளராக இருப்பது சில நன்மைகளைத் தரும். எதிர்மறைச் சிந்தனைகளானது குறிப்பிட்ட விஷயத்தில் எந்த மாதிரியான பிரச்னைகள் வரும் என்பதை சிந்திக்கத் தூண்டும். நேர்மறையாளராக இருக்கும்போது கண்ணில் படாத சில விஷயங்கள், எதிர்மறைச் சிந்தனையாளரின் கண்களில் படக்கூடும். அது எதிர்கால ஆபத்துகளில் இருந்து நம்மை முன்கூட்டியே காப்பதற்கு உதவும்.
நேர்மறைச் சிந்தனையாளராக இருக்கும்போதிலும், குறிப்பிட்ட விவகாரங்களில் ஏற்படப் போகும் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் முன்பே தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதில் எதிர்மறைச் சிந்தனைகள் சற்று பலனளிக்கும். ஒட்டுமொத்தமாக, நேர்மறைச் சிந்தனையாளராக இருந்து பிரச்னைகளைச் சரியாகக் கணிக்க வேண்டும்.
நிகழ்காலத்தில் வாழுங்கள்!
இவற்றையெல்லாம் கடந்து, முதலில் நிகழ்காலத்தில் வாழ வேண்டியது அவசியம். எதிர்காலத்தைக் குறித்த சிந்தனைகளும் கனவுகளும் அவசியம்தான். ஆனால், அவை மட்டுமே வாழ்வாகிவிடாது. குறிப்பிட்ட இலக்கை நிர்ணயித்த பிறகு அதை அடைவதற்கு நிகழ்காலத்தில்தான் உழைத்தாக வேண்டும்.
இலக்கை நிர்ணயித்துவிட்டு வெறும் சிந்தனையாளராக மட்டுமே இருந்தால், இலக்குகள் தொடர்ந்து இலக்குகளாகவே இருக்கும். அதனருகினில் கூட செல்ல முடியாது. எனவே, சிந்தனையாளராக மட்டும் இல்லாமல், நிகழ்காலத்திலும் கவனம் செலுத்தும் செயல்பாட்டாளராக இருப்பதும் அவசியம். அதுவே வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...