இணைய வெளியினிலே...

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்தத்திற்குரியவர்கள்.
இணைய வெளியினிலே...

முக நூலிலிருந்து....


மரம் எழுதுகிறது
தன் தவத்தை...
குழந்தையின் கைப்பிடித்த
பென்சிலில் வரமாக.

கவிதா விலாசம்

ஒரு நொடிப்பொழுதில் தோன்றும் எண்ணங்களே
வாழ்க்கையைப் புரட்டிப் போட்டு விடுகின்றன.
மனம் தெளிவடைவதும் கூட
அந்த ஒரு நொடிப்பொழுதில்தான்.

நிம்மி சிவா

பந்தயக் குதிரைக்கு இலக்கு மட்டுமே தெரியும்.
ஏன் ஓடுகிறோம்?
எதற்கு ஓடுகிறோம்?
என்பது தெரியாது.
அப்படித்தான் வாழ்க்கை,
பல நேரங்களில் பல மனிதர்களை ஓடவிடுகிறது.

வழிப்போக்கன்

எல்லா உறவுகளும்
கண்ணாடி போலதான்...
உடையாத வரை ஒரு முகம்,
உடைந்துவிட்டால்
பல முகம்.

லீலா லோகநாதன்


சுட்டுரையிலிருந்து...


நான் இருக்கிறேன் என்று "வீர வசனம்' பேசுபவர்கள்
எல்லாம் பிரச்னை எல்லை மீறும்போது
காற்றோடு காற்றாய்  கரைந்து போவார்கள்.
மனிதர்களே, நீங்கள் உங்களை மட்டுமே நம்புங்கள்.

ஜெய் சக்தி

தகுந்த காரணம் இன்றி
எதையும் செய்யமாட்டார்
என்ற புரிதல் இருந்தாலே போதும்....
உறவுகள் நீடிப்பதற்கு.

பாவை

அன்பாக இருந்தாலும்,
உதவியாக இருந்தாலும்,
அதன் அர்த்தம்
தெரிந்தவரிடம் காட்டவும்.
அப்போதுதான்...
மதிப்பு தெரியும்.

அகல்யா

வலிமை என்பது அனுசரித்து வாழ்பவர்களை அடக்கி ஆள்வது அல்ல...
தன்னை விட வலிமையானவராக அவர்களை உருவாக்கி மகிழ்வது.

 சிறகுகள்


வலைதளத்திலிருந்து...

தனக்குத்தான் உலகத்திலேயே அதிக வேலையிருப்பதாக காட்டிக் கொள்பவர்கள் உண்மையில் வருத்தத்திற்குரியவர்கள். அவர்களால் அவர்களைச் சேர்ந்தவர்களுக்கு  சிறிய அளவிலான சந்தோசத்தை  கூட கொடுக்க இயலாது. "பிசி...  பிசி'  என்று தானும் தொலைந்து அவர்களை நேசிப்பவர்களின் நேசத்தையும்  அலட்சியம் செய்கிறார்கள்.

பரப்பரப்பான வேலைக்கு நடுவிலும் சிறு புன்னகையைக் கூட காட்டாமல் வாழும் வாழ்க்கை உண்மையில் நரகம். "பிசி' என்ற முகமூடியை போட்டுக் கொண்டு அன்பானவர்களிடம் தோற்றுப் போகிறோம். பகிரப் படாத அன்பும் கவனிக்கப் படாத நேசமும் யாருக்கும் பிரயோசனம் இன்றி விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது.

இயந்திர உலகில் எல்லோருக்கும் தான் வேலை, பிரச்னை இருக்கிறது. அத்தனைக்கும் நடுவிலும் உறவுகள் நட்புகளுடன் தொடர்பில் இருப்பதுதான் உயிர்ப்பான வாழ்க்கை. பிறரை நேசிப்பதை விட பிறரால் நாம் நேசிக்கப்படுவது பேரின்பம். இதனை அலட்சியப்படுத்தி வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்?  

நட்புகள் உறவுகளை நேரில் சந்தித்துப் பேச இயலாவிட்டாலும் போனில் தொடர்பு கொண்டு பேசலாம். ஆனால் சமூக வலைதளங்கள் வந்த  பின் அதற்கும் நேரமில்லாமல், "அப்புறம் கூப்டுறேன்' என்று சொல்லிவிட்டு, வாட்ஸ்அப், பேஸ்புக்கில் நுழைந்து,  "ஹாய் சொல்லுடா... கூப்டியே' என்று டைப் பண்ற அளவுக்கு போய்விட்டது. போனில்   இரண்டு வார்த்தை பேச வழியில்லை. ஆனால் பேஸ்புக்கில் அன்பொழுக பேசுவது வேடிக்கை.

அப்புறம் இன்னொன்றும் புரிய மாட்டேங்குது... போன்ல பேச நேரம் இல்ல... "பிசி...  பிசி'   சொல்ற ஆட்கள், பேஸ்புக் ஸ்டேடஸ் ஒரு பக்கத்துக்கு டைப் பண்ண எப்படி முடியுது? "லைக்' கிடைக்குதுங்கிறதுக்காவா ?  என்னவோ போங்க ... அன்பு, நேசம் பாசம் நட்பு எல்லாம் விரல் நுனிக்குள் அடங்கிவிட்டன.  

 https://www.kousalyaraj.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com