நவராத்திரி கொலுவுக்கு புதிய தீம்!
சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள "அன்னை தெராசா' மகளிர் வளாகத்தில் இந்த வருட நவராத்திரி கொலு கண்காட்சி தொடங்கியுள்ளது.


சென்னை வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள "அன்னை தெராசா' மகளிர் வளாகத்தில் இந்த வருட நவராத்திரி கொலு கண்காட்சி தொடங்கியுள்ளது. ஒருமாதம் நடக்கவிருக்கும் இந்த கண்காட்சியில் கண்ணைக் கவரும் கைவினைப் பொருட்களும், கருத்தை கவரும் கொலு பொம்மைகளும் திரும்பும் திசை எல்லாம் குவிந்து கிடக்கிறது. இந்தத் தயாரிப்புகள் எல்லாம் தமிழகம் முழுவதும் உள்ள மகளிர் சுய உதவிக்குழு பெண்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டவை. சமீபகாலமாக நவராத்திரி கொலு ஒவ்வொரு புதிய "தீமை' வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்காக ஒவ்வொரு ஆண்டும் கொலு பொம்மைகளில் இருந்து அலங்கார பொருட்கள் வரை பலவற்றிலும் புதிய "தீமை' வைத்து உருவாக்கி வருகிறார்கள் கைவினைக் கலைஞர்கள். அந்த வகையில், இந்த ஆண்டு புது வரவாக அலங்காரத்திற்கு பயன்படுத்தும் "பறவை மரம்' தயாரித்திருக்கின்றனர் திருவள்ளுர் மாவட்டம் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த "செவ்வந்தி' குழுப் பெண்கள். இது குறித்து குழு உறுப்பினரான ஆர்.மல்லிகா கூறியது:
""நான் கடந்த 2003-ஆம் ஆண்டில் இருந்து மகளிர் குழுவில் இருக்கிறேன். எங்கள் குழுவில் 12 பேர் இருக்கிறோம். அதில் 6 பேர் கைவினைப் பொருட்கள் செய்கிறோம். அதில் எல்லா வகையான பொம்மைகள், பேப்பர், ஜுட், கிரிஸ்டல்,திரேட், நவதானியம் போன்றவற்றில் நகைகள், கலைப் பொருட்கள் போன்றவற்றை தயாரித்து வருகிறோம்.
மேலும் பெண்கள் அணிந்து கொள்ள ஏற்ற வகையில் ஐம்பொன் நகைகள் செய்ய தேவையான மூலப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து அதனை செயினாகவோ, வளையலாகவோ, கம்மல்களாக
மிஷனில் கொடுத்து சீசனுக்கு ஏற்றவாறு வடிவமைத்து வாங்கிக் கொண்டு அதற்கு தங்க மூலாம் பூசி விற்பனை செய்து வருகிறோம். இதற்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதைத் தவிர ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் போது கொலுவில் வைப்பதற்கு ஏற்றவாறு ஏதாவது ஓர் அலங்காரப் பொருட்கள் செய்வோம். அந்த வகையில் இந்த ஆண்டு கொலுவிற்காக புதிதாக தயாரித்திருப்பது பறவை மரம். சமீபகாலமாக பறவை இனங்கள் அழிந்து வருவதாக சொல்கிறார்கள் அல்லவா? அதனால் அழிந்து வரும் பறவை இனங்களில் ஒன்றான சிட்டு குருவியைத் "தீம்'மாக வைத்து உருவாக்கியிருக்கிறோம். இந்த பறவை மரத்தை கொலு படிக்கட்டுகளில் வைத்து சிறிய சீரியல் பல்புகளால் அலங்கரித்தால் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும்.
இதற்காக மரத் தச்சர்களிடம் அவர்கள் தேவைக்கு போக கழிவாக ஒதுக்கும் மரத் துண்டுகளை தேவையான வடிவங்களில் வெட்டி வாங்கிக் கொண்டு கம்பி வைத்து தேவையான வடிவம் செய்து எங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு உருவாக்குகிறோம். தற்போது இங்கு நடக்கும் கொலு கண்காட்சியில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நிறையபேர் இதனை விரும்பி வாங்கிச் செல்வது சந்தோஷமாக இருக்கிறது'' என்றார்.
படங்கள்: ஏ.எஸ். கணேஷ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...