பெண்களுக்கென சிறப்புத் தகுதிகள் உண்டா? - தொகுப்புரை டாக்டர் சுதா சேஷய்யன்
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தினமணி "மகளிர்மணி' மற்றும் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய சிறப்புக் கருத்தரங்கத்தின் இறுதியுரை.


சர்வதேச மகளிர் தினத்தையொட்டி தினமணி "மகளிர்மணி' மற்றும் எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய சிறப்புக் கருத்தரங்கத்தின் இறுதியுரை.
மாணவிகளின் கலந்துரையாடல் தொகுப்பு:
சுதா சேஷய்யன்: நாங்கள் அனைவரும் எங்களது கருத்துக்களைப் பதிவு செய்துவிட்டோம். இதிலிருந்து உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ நீங்கள் கேள்வி கேட்கலாம்.
சோஷியாலாஜி மாணவி பிரியங்கா: எனக்கு சுமதி மேம் பேச்சைக் கேட்கும்போது ஒரு ஞான உதயம் வந்தது போன்று இருந்தது. "பெண்கள் சுதந்திரத்திற்காக' நாம் இன்னும் ஆண்களிடம் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆண்கள் இன்னும் பெண்களின் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆண், பெண் சமம் என்று சொல்வதற்கே நாம் இன்னமும் போராட வேண்டிதானே இருக்கிறது. இதில் பெண்கள் சுதந்திரமாக இருப்பது எங்கே?
சுதா சேஷய்யன்: பிரியங்கா, இவர்கள் எல்லாரும் இங்கே பேசினது அதைப்பற்றிதான். சுதந்திரம் என்பதை யாரும் நமக்கு தரமாட்டார்கள். சுதந்திரம் என்பது உங்களிடம் தான் இருக்கிறது. அதை நீங்கள் சரியாக பயன்படுத்தினால் யாரிடமும் சுதந்திரத்தைக் கொடுக்கும்படி கெஞ்சவோ, கையேந்தவோ தேவையில்லை. புரிகிறதா?
கிருத்திகா சோஷியாலாஜி முதலாம் ஆண்டு: ஸ்ரீமதி மேம் பேசியதிலிருந்து எனக்கு ஒரு பாஸிட்டீவ் எனர்ஜி கிடைத்தது. நீங்கள் சொன்னதில் இருந்து அப்பா சப்போர்ட் இல்லையென்றால் நாம் எதையும் செய்யமுடியாது என்பதை புரிந்து கொண்டோம்.
ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் இருந்து வந்திருப்பதால் அவரவர் துறையில் சந்தித்த பிரச்னைகளையும், வெற்றிகளையும் எங்களோடுப் பகிர்ந்து கொண்டதில் இருந்து நாங்கள் வருங்காலத்தைப் எப்படி சந்திக்கவேண்டும் என்பதற்கான ஒரு பாஸிட்டிவ் நோட்ஸ் கிடைத்தது.
ஸ்ரீமதி : கிருத்திகா, நான் சொல்ல வந்தது அப்பா சப்போர்ட் மாத்திரம் இருந்தால் போதாது. என் வாழ்க்கையைப் பொருத்தவரை ஒரு லைஃப் சைக்கிள் அமைத்துக் கொண்டேன். அதனால் எந்தவொரு காரணத்துக்காகவும் நான் என் கேரியரை விட்டுக் கொடுத்ததும் இல்லை. கேரியரில் பிரேக் எடுத்துக் கொள்ளவும் இல்லை.
எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தபோது கூட நான் பிரேக் எடுக்காமல்தான் வேலை செய்தேன். இதற்கு காரணம், எனக்கு பின்னாடி யாராவது ஒருவர் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப எனக்கு சப்போர்ட்டாக இருந்திருக்கிறார்கள். அதனால்தான் என்னால் என் கேரியரில் சக்சஸாக இருக்க முடிந்தது.
என் வீட்டில் சமைப்பவரை நான் என் மேனேஜர் போன்று பாவித்து மதிப்பதனால் தான் என் வீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லாமல் சாப்பாடு கிடைக்கிறது. இல்லையென்றால் நான் டிராவலில் இருக்கும்போது எப்படி என் குழந்தைகளுக்கு சாப்பாடு கிடைக்கும்.
இன்னொரு விஷயம் அந்தக் காலத்தில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கு குழந்தைகள் காப்பகம் எல்லாம் கிடையாது. என்னுடைய பாட்டி, சித்தி என வாரம் ஒருவரை அழைத்துவந்து என்னுடன் தங்க வைத்துக் கொள்வேன் என் வீட்டை கவனித்துக் கொள்ள. அவர்களுடைய உதவி இல்லை என்றால் இவைஎல்லாம் இன்று எனக்கு சாத்தியப்பட்டிருக்குமா என்பது நிச்சயமில்லை.
நான் உங்களுக்கு சொல்ல நினைப்பதெல்லாம் ஒன்றுதான். சந்தோஷமாக இருங்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உதவியாக இருப்பவர்களிடம் நன்றியுடன் இருங்கள். ஏனென்றால் உங்களுக்கு யாரும் உதவ முன் வரவில்லையென்றால் நிச்சயம் உங்களால் சாதிக்க முடியாது.
வைஷ்ணவி: பெண்ணியம் என்பதே என்னைப் பொருத்தவரை முற்போக்கான விஷயமாக தோன்றுகிறது. காரணம், ஒரு ஆண், பெண்ணை டாமினேட் செய்வதைவிட, பெண்களை பெண்களேதான் அதிகம் டாமினேட் செய்கிறார்கள். வீட்ல அம்மா பெண்ணை டாமினேட் செய்வது, பாட்டி பேத்தியை டாமினேட் செய்வது எல்லாம் பெரும்பாலான வீடுகளில் நடக்கிறது. அப்படியிருக்கும்போது பெண்ணியம் என்கிற கான்சப்ட்டை ஓவராக யோசித்து நாம் தவறாக புரிந்து கொண்டு கொண்டோமா? எல்லா இடத்திலேயும் பெண்களை முன்னிலை படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பெண்ணியம் என்கிற கோட்பாட்டையே தப்பாக பயன்படுத்துகிறோமோ என்று தோன்றுகிறது?
சுதா சேஷய்யன்: யத்தீஸ்வரி அம்மா ஆரம்பத்திலேயே ஒரு விஷயம் சொன்னாங்க, அதில் நிறைய பொருள் அடங்கியிருக்கு. அதாவது "ஞான செருக்கு' அப்படி என்கிற ஒரு விஷயத்தை சொன்னாங்க. ஸ்ரீமதியும், அர்ச்சனாவும் கூட அதை சொன்னார்கள். அதை உங்களில் எத்தனை பேர் எப்படி புரிந்து கொண்டீர்கள் என்று புரியவில்லை.
ஒரு பெண் சரியில்லை, அவள் அழகாக இல்லை, அவளுக்கு இதற்கு தகுதி இல்லை, அதற்கு தகுதி இல்லை இப்படி எல்லாம் சொல்லி பெண்ணை தள்ளுகிறவர்கள். வாயை முடிக் கொள்வார்கள் ஒரு கட்டத்தில்.
அது எப்போது என்றால் அந்தப் பெண் தன் சொந்த திறமையால் சாதித்துக் காட்டும்போது. அதைத்தான் அவர்கள் "ஞான செருக்கு' என்றார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் அவரவருக்கு இருக்கக் கூடிய திறமையை டெவலப் செய்ய வேண்டிய அவசியம் இருக்கு. நீங்கள் ஒரு பெண் என்பதால் உங்களுடைய காலகட்டத்தில் எத்தனை பேர் இந்த விஷயத்தை எதிர் கொண்டீர்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் எங்களுடைய காலத்தில் பெரும்பாலான பெண்கள் இந்த விஷயத்தை எதிர் கொண்டிருக்கிறோம்.
அதாவது, அந்த காலத்தில் நாங்கள் கஷ்டப்பட்டு படித்து பள்ளிக் கூடத்தில் பரீட்சையில் நல்ல மார்க் வாங்கினால், உடனே எல்லாரும் என்ன சொல்லுவாங்க தெரியுமா, அவ பொண்ணு என்பதால மார்க் போட்டுட்டாங்கன்னு வாய் கூசாம சொல்லுவாங்க, ஒரு பொண்ணு ஏதாவது போட்டியில பரிசு வாங்கிட்டா, அவ பொண்ணுன்னு கொடுத்துட்டாங்கன்னு என்கிற கருத்து இருந்தது.
அதைப் புரிந்து கொண்டால், நாம நம்ம காலில் நிக்கமுடியும்ன்னு சொன்னால், நம்முடைய திறமை சரியாக இருக்கும் என்று சொன்னால் அனைவரின் வாயையையும் நம்மால் எளிதில் மூடிவிட முடியும். வாயைப் பிளந்து நம்மை அண்ணாந்து பார்க்க வைக்க முடியும். இதைத்தான் இங்கு வந்திருக்கும் அனைவரும் சொன்னார்கள்.
இதில் என்னுடைய சொந்த அனுபவம் ஒன்றை சொல்கிறேன். நானிருக்கும் மருத்துவத் துறையைப் பொருத்தவரைக்கும் மருத்துவக் கல்லூரியின் உடற்கூறு இயல் துறையில் தலைமை பதவியில் இருக்கிறேன்.
எனக்கு கீழே வேலை செய்யும் ஆண்களில் பலர் என்னைக் காட்டிலும் வயதில் மூத்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நான் வேலையைப் பணிக்கும் போது அவர்கள் அதை செய்ய வேண்டும்.
அதே சமயம் அவர்களுக்கு இயற்கையாகவே தோன்றும் "என்னடா ஒரு சின்னப் பொண்ணு வந்து நமக்கே இன்ஸ்ட்ரக்ன்ஸ் கொடுக்கிறான்னு' தோன்றாமல் இருக்க வேண்டும். நான் சொல்வது 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள நிலையை சொல்கிறேன்.
ஸ்ரீமதி சொன்னது போன்று அங்கே என்னைச் சுற்றி ஒரு அன்பான சூழ்நிலையை நான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். என் துறை குறித்த எனது திறமையை நான் நிரூபிக்க வேண்டும், என் நிர்வாகத் திறமையை நான் நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் என் மீதும், என் வார்த்தைகள் மீதும் அவர்களுக்கு மரியாதை வரும்.
இதனால் தான் ஆரம்பத்திலேயே நான் அந்தக் கேள்வியை எழுப்பினேன். பெண்களுக்கு என்று சில தனிப்பட்ட குணங்கள் உண்டா? பெண்களுக்கென்று எக்ஸ்குளுஸிவ் தகுதிகள் உண்டா? நமக்கிருக்கும் திறமையை எவ்வளவு தூரம் வைத்துக் கொள்கிறோம்? எவ்வளவு தூரம் தூக்கிப்போடுகிறோம்?
நம்மகிட்ட திறமை இருந்ததுன்னா, நம்மகிட்ட கான்சியஸ்னஸ் சரியாக இருந்ததுன்னா நம்மையாரும் தள்ள முடியாது.
சுமதி பேசும்போது சொன்னாங்க உறவுகளுக்குள் உள்ள நட்பு எப்படி தோற்றுப்போகிறது என்று, அதே சமயத்துல ஸ்ரீமதி இன்னொரு விஷயம் சொன்னாங்க உங்கள் உறவுகளை நீங்கள் நேசியுங்கள் என்று. உறவுகளுக்குள் உள்ள உண்மைத்தன்மை கெட்டு போகும்போதுதான் அங்கே விரிசல் ஏற்படுகிறது.
நீங்க கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இங்கே ஒரு இரண்டு வயது ஆண், பெண் என இரண்டு குழந்தைகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு குழந்தையையும் மேடையில் விட்டுவிட்டு அவர்கள் எதிரில் ஒரு 50 பொம்மைகள் வாங்கி வைத்துவிட்டு, உனக்கு என்ன பொம்மை வேண்டுமோ? அதை எடுத்துக் கொள் என்று சொன்னால், ஆண், பெண் என்று புரிதல் இல்லாத வயதில் இருக்கும் அந்த குழந்தைகள் என்ன செய்யும்?
பெண் குழந்தை அருகில் வரும் பொம்மையை எடுப்பதற்கு முன்பு சுற்றிலும் ஒருமுறை எல்லாருடைய முகத்தையும் பார்க்கும். ஒருவேளை பொம்மையை எடுத்தால் யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ? என்று தயங்கும். பிறகு 2-3 முறை மீண்டும் பொம்மைகளைச் சுற்றி வரும். அதன்பிறகுதான் எடுக்கும். அப்படியே எடுக்கும்போது நல்ல கலர்புல்லாக உள்ள பொம்மையோ அல்லது ரெண்டு பொருள் ஒன்றாக இணைந்து இருப்பது போன்ற பொம்மையைத் தான் இயற்கையாகவே தேர்ந்தெடுக்கும்.
ஆண் குழந்தை என்ன செய்யும் தெரியுமா? காத்திருக்காது நேரே வந்து அங்கே இருப்பதிலேயே பெரியதாக உள்ள பொம்மையை அதி வேகமாக எடுக்கும். அது எடுக்கும் வேகத்திலேயே பொம்மை தனித்தனியாக வந்துவிடும்.
அதன்பிறகு திரும்பி கடைசியில் யார் அமர்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது குறிப்பார்த்து வீசியடிக்கும். இது பயோலாஜிக்கலான விஷயம். அது நமது க்ரோமோசோமிலேயே அமைந்துள்ள ஒன்று. இதை யாரும் மாற்ற முடியாது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் சிலவற்றை நாம் இயற்கையாகவே ஏற்றுக் கொள்வதற்கும், ஏற்றுக் கொள்ள முடியாததற்கும் காரணம் அதுதான்.
கடந்த 30 ஆண்டுகளாக மனித உடல்கூறு பற்றி தான் பாடம் எடுத்து வருகிறேன். அதனால் தினம் தினம் இதுபோன்ற விஷயங்களை சந்திக்கிறேன்.
பொதுவாக ஒரு மனித மூளையைப் பார்த்து அது ஆணின் மூளையா? பெண்ணின் மூளையா? என்று பிரித்து பார்க்க முடியாது. அதுவே சில மனித எலும்புகளைக் கொடுத்தால் இது ஆணுக்குரியது, பெண்ணுக்குரியது என்று பிரித்து பார்க்க முடியும். உதாரணமாக ஒரு தாடை எலும்பு எடுத்துக் கொண்டால் ஒரு சின்ன "அங்கலரிஷன்' ஆணின் எலும்பில் இருக்கும். அது பெண்ணின் எலும்பில் இருக்காது. "மாஸ்க்குலர் மார்க்கிங்' நிரந்தரமாக இருக்கும் ஆணின் எலும்பில். ஓர் ஆணின் எலும்பிற்கும், பெண்ணின் எலும்பிற்கும் சின்ன எடை வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும். இது உடற்கூறு இயல்.
ஆனால் மூளையை எடுத்துக் கொண்டால் வெளியில் இருந்து பார்க்கும்போது இது ஆண் மூளையா? பெண் மூளையா? என்ற வித்தியாசம் தெரியாது. அதுவே "மைக்ரோ ஸ்கோபிக்கா செக்ஷன்' போட்டு பார்த்தால் நிச்சயம் வித்தியாசம் தெரியும். மிகமிக நுண்ணிய சின்ன சின்ன வித்தியாசங்கள் இருக்கும்.
ஹைப்போதலாமஸ் என்று நமது மூளையில் ஒன்று இருக்கிறது. அதன் நரம்பு மண்டலத்தில் உள்ள செல்களின் அளவு மாறுவதில்லை. நன்றாக கவனியுங்கள். அளவு மாறுவதில்லை.
ஆனால் ஆணுக்கு 40 செல்( நியூரான்) இருக்கிறது என்றால், பெண்ணுக்கும் 40 செல்கள் இருக்கும் என்றால் இந்த 40 செல்களும் ஆணின் மூளையில் சற்று தள்ளி தள்ளி இருக்கும். பெண்ணின் மூளையில் ஒன்றோடு ஒன்று இணைந்து மிக நெருக்கமாக இருக்கும். இதனால் பெண் என்பவள் அனைத்தையும் ஒற்றுமையாக பார்க்கிறாள். ஒருங்கிணைக்கும் குணம் அவளிடம் இயல்பாகவே இருக்கும்.
இது தான் ஸ்ரீமதி மஞ்சள் நிறம், பச்சை நிறம் என்று சொன்னதும். நீங்கள் சொல்லுகிறீர்கள் அல்லவா இந்த சேலைக்கு இந்த பிளவுஸ் சரியாக இல்லை, லைட்டாக வேறு ஷேட்டில் இருக்கிறது என்றெல்லாம். இதெல்லாம் அதனால்தான். நிறங்களில் சின்ன சின்ன ஷேட் வித்தியாசத்தைக் கூட நம்மால் உணர முடிவதும்,உறவுகளை சேர்த்துப் பிடிப்பதும். அனைத்து விஷயங்களிலும் பெர்பெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதெல்லாம் இயற்கையாகவே பெண்ணுக்கு ஹைபோதலாமஸ்ஸில் உள்ள செல்கள் இணைந்திருப்பதனால்தான்.
பொதுவாக பெண்கள் எம்பிராய்டரி போடுவது, கோலம் போடுவது, கை வேலைகள் செய்வது, நிறங்களை மேட்ச் பண்ணுவது, மல்டி டாஸ்க் வேலைகள் செய்வது. அதாவது ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யும் திறமையும், ஆற்றலும் பெரும்பாலான பெண்களிடம் அமைந்திருப்பது எல்லாம் இதனால்தான். இந்த திறமையை நாம் டெவலப் செய்து கொள்ளும்போதுதான் நமக்கு வெற்றிகள் கூடுகிறது.
பெண்ணியம் என்பதை நாம் தவறாக பயன்படுத்துகிறோமா என்று வைஷ்ணவி கேட்டீர்கள் அல்லவா?
பெண்ணியம் என்றால் என்னவென்றே புரிந்து கொள்ளாதவர்கள்தான் சண்டைப் போட்டுக் கொள்வதெல்லாம். ஆனால் நம்முடைய பளஸ் பாயிண்ட் என்ன வென்பதை நாம் புரிந்து கொண்டோம் என்றால் அதுதான் உண்மையான பெண்ணியம். அதுதான் நம்முடைய அடையாளம். பெண்ணியம் என்று நம்மை தனியாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. யாரிடமும் சண்டை போட வேண்டிய அவசியமும் இல்லை. அதுபோன்று ஒரு பெண்ணின் அடையாளம் என்பது அவளைச் சுற்றி இருக்கிற சூழ்நிலையோ, ஆடம்பரத்திலேயோ இல்லை. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு நெகட்டிவ் இருக்கும். அதையெல்லாம் தாண்டி அவளது திறமையை நிரூபிப்பதுதான் அவளது திறமைக்கானஅடையாளம்.
இன்னொரு விஷயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு பெரிய உயரத்துக்கு சென்றாலும் உங்கள் வீட்டுக்குள் நுழையும்போது அது அத்தனையையும் கழற்றி வாசலிலேயே விட்டுவிட்டு சென்றால்தான் குடும்பம் அமைதியாக இருக்கும். அடுத்தவரிடம் கர்வத்துடன் நடந்து கொள்ளக் கூடாது. ஏனென்றால் பிரச்னைகள் சூழ்ந்ததுதான் வாழ்க்கை. ஆனால் உங்களிடம் உறுதியும், தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் எந்த பிரச்னையாக இருந்தாலும் உங்களால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்.
நான் விளையாட்டாக சொல்லுவேன். ல க்ரோமோசோம், வ க்ரோமோசோம் தான் ஆண், பெண் வித்தியாசத்தை ஏற்படுத்துவது. என் நண்பர்களிடம் விளையாட்டாக சொல்லுவேன் வ க்ரோமோசோம்முக்கு ஒரு லிம்ப் (கால்) கிடையாது. உங்களுக்கு ஒரு கால் கிடையாது அதனால நீங்கள் எல்லாம் நொண்டி க்ரோமோசோம்கள்ப்பா. அதனால அப்படித்தான் சொல்லுவீர்கள் என்பேன்.
ஆண், பெண் என்பதில் இயற்கையான குணங்களை நாம் மாற்ற முடியாது. அதனால் உங்களது தனித்திறமை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள், உங்களுக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். வாழ்த்துகள்.
- ஸ்ரீதேவி குமரேசன்
படங்கள்: அண்ணாமலை,
ஏ.எஸ்.கணேஷ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...