எதிரிகளே யாரும் இருக்கக் கூடாது!
காலையில் ஒன்பது மணிவரை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிட்டு இருந்தவ நான், இப்போது காலையில் அலாரம் அடிச்சமாதிரி


காலையில் ஒன்பது மணிவரை இழுத்துப் போர்த்திக்கிட்டு தூங்கிட்டு இருந்தவ நான், இப்போது காலையில் அலாரம் அடிச்சமாதிரி 5.30 மணிக்கு எழுந்து உடற்பயிற்சி, வாக்கிங்ன்னு ஓட வேண்டியதாயிடுச்சு. அப்போதானே அழகையும், ஆரோக்கியத்தையும் பாதுகாக்க முடியும். இதுல ஒரு விஷயம் என்னன்னா, என்னடா பொழப்பு இதுன்னு ஒருநாள் கூட அலுப்பே ஏற்பட்டது இல்லங்க.. அதுதான் அரிதாரம் செய்கிற மாயைன்னு நினைக்கிறேன். என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கேன்னு நினைக்கிறீங்களா? அதுதான் இந்த பெரியபாப்பாவோட ஸ்பெஷல் என்கிறார் "சின்னப்பாப்பா, பெரியபாப்பா' தொடரில் பெரிய பாப்பாவாக நடித்து வரும் சித்ரா.

மேலும் அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
""எங்க பேமலிக்கும் சினிமாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தற்செயலா அமைந்ததுதான் இந்த மீடியா வாய்ப்பு. எம்.எஸ்சி.சைக்காலஜி படித்து கொண்டிருக்கும் பொழுது என் தோழி தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்தார். ஒரு நாள் அவரால் சூட்டிங்கிற்கு போக முடியாத நிலை ஏற்பட, அந்த வாய்ப்பு எனக்கு வந்தது. ஆனால், எங்கள் குடும்பம் கட்டுப்பாட்டுக்கு அதிக மதிப்பு கொடுக்கும் கண்டிப்பான போலீஸ் குடும்பம். அப்பா போலீஸ், அண்ணன் சைபர் க்ரைம் ஆபீசர், தாத்தா, மாமா மிலிட்டரி ஆபீசராக இருப்பவர்கள் எப்படி இருக்கிறது? இதனால் வீட்ல எப்பவும் ஸ்ட்டிரிட்தான். உதாரணமா சொல்லனும்ன்னா. அஜித் நடித்த அமர்க்களம் படத்தில் வருகிற சாலினியோட பேமிலி மாதிரி. இதுல நான் மீடியான்னதும் பெஞ்ச்மேல நிக்க வைக்காததுதான் பாக்கி. வீட்ல பர்மிஷன் வாங்குறதுக்குள்ள நான் பட்டபாடு இருக்கே அப்பப்பா... போதும் போதும்ன்னு ஆகிடுச்சு.
ஒரு வழியா பர்மிஷன் வாங்கி மக்கள் தொலைக்காட்சியில்தான் முதல் எண்டரி கொடுத்தேன். அந்த நிகழ்ச்சியில் ஸ்கூட்டி ஓட்டிக்கிட்டே, நல்ல சுத்தமான தமிழில் பேசி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கணும். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு ஜீ தமிழ், வேந்தர் டிவி, விஜய் டிவி என்று ஃபன் ஷோக்கள் நிறைய தொகுத்து வழங்கினேன். இதற்கிடையில் பத்திரிகைகளுக்கு மாடலிங்கும் செய்தேன். ஆனால், மாடலிங்கைவிட தமிழ் சினிமாவில் இருந்து பெரிய படங்களில் எல்லாம் நடிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் நிறைய வந்தது. ஆனால் வீட்டில் ஒத்துக்கல. அதனால விட்டுட்டேன். அதன்பிறகு "சின்னப்பாப்பா பெரியபாப்பா' தொடரில் நடிக்க கேட்டாங்க. சின்னத்திரையிலாவது நடிக்கிறேனேன்னு வீட்ல கெஞ்சி கேட்டு பர்மிஷன் வாங்கினேன்.
காம்பியரிங்கிற்கும், நடிப்பிற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது. அதுவும் முதல் தொடரே காமெடி தொடர் ஆனதால பிராம்டிங் எல்லாம் கிடையாது. டயலாக் சொல்லிடுவாங்க, அதை மனப்பாடம் செஞ்சிக்கிட்டு நம்ம கேரக்டரை உள்வாங்கிகிட்டு பேசணும். இதில் இன்னொரு விஷயம் என்னன்னா அந்தந்த சமயத்திற்கு ஏற்றாற் மாதிரி எதிரே பேசறவங்களுக்கு கவுண்டர் வேற கொடுக்கணும். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஆனா, எங்க யூனிட்ல இருந்த எல்லாருமே இயக்குநர் சக்திவேல் சார்ல இருந்து, நளினி அம்மா, நிரோஷா மேடம், மதுமிதான்னு எல்லாருமே உதவினாங்க. இப்ப நல்லா செட்டாகி பெரியபாப்பா கேரக்டருக்கு நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. நடிப்பே வேண்டாம்னு சொன்ன எங்க வீட்ல உள்ளவங்க கூட, இப்போது வெளியே எங்காவது போனால் எம் பொண்ணுதான் பெரியபாப்பாவாக நடிக்கிறான்னு சொல்கிற அளவுக்கு மாறிட்டாங்க. சொந்தக்காரங்க எல்லாம் ரொம்ப மரியாதையா பார்ப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
இந்த கேரக்டருக்கு அப்படியே நேர் எதிரான கேரக்டர் "சரவணன் மீனாட்சி' தொடரில் ஒரு விவசாயின் மகளாக ரொம்ப அமைதியான பெண்ணா, சைலன்ட்டா வர கேரக்டர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. வெளியே கடைத்தெருவுக்கு எல்லாம் போகும்போது அங்கிருக்கும் பெண்கள் எல்லாம் பக்கத்துல வந்து கையைப் பிடித்துக் கொள்வது, கன்னத்தை கிள்ளி ""இவ்வளவு அமைதியான பொண்ணா இருக்கியேம்மா''ன்னு சொல்லிட்டு போறது.
சந்தோஷா இருக்கும்; அதே சமயத்தில் சிரிப்பாகவும் இருக்கும். ஏன்னா, நான் நிஜத்தில் பெரியபாப்பா கேரக்டர்தான். ரொம்ப ஜாலியா, துறுதுறுன்னு இருக்கிற கேரக்டர். என்னைச் சுற்றி எப்பவும் கலகலன்னு இருக்கும். யாராவது சோகமா இருந்தாலும் அவங்களையும் சிரிக்க வெச்சுடுவேன். அதனால என்னை எல்லாரும் பாஸிட்டிவ் எனர்ஜி என்றுதான் கூப்பிடுவாங்கன்னா பார்த்துக் கோங்களேன்.
அதுலயும் நானும் மதுமிதாவும் சேர்ந்துட்டா அங்க கலாட்டாவுக்கு பஞ்சமே இருக்காது. அதுபோல நேரம் கிடைக்கும் போது ரெண்டு பேரும் சேர்ந்து ஸ்கூட்டி எடுத்துக்கிட்டு ஷாலை வைத்து முகத்தை மூடிக்கிட்டு ஷாப்பிங் செய்ய கிளம்பிடுவோம். சவுக்கார்பேட்டைக்கு போயி அங்குள்ள இந்திவாலாக்கிட்ட எல்லாம் அடிச்சுபிடிச்சு பேரம் பேசி, ஜாலியா என்ஜாய்பண்ணி தேவையானதெல்லாம் வாங்கிட்டு தூக்க முடியாம தூக்கிட்டு வருவோம். இதுல இருந்து என் கேரக்டரை நீங்களே யூகிச்சுக்கோங்க.
என்னுடைய காஸ்ட்யூம் எல்லாம் நானே டிசைன் செய்து கொள்வேன். குறைந்த விலையில் சாதாரண சேலைகளை வாங்கி வந்து அதில் கை வேலைபாடுகள் செய்து டிசைனர் சேலையா மாத்திடுவேன். அதில் எனக்கு ஒரு சந்தோஷம், திருப்தி. இதனால நான் வாங்குற சம்பளம் காஸ்ட்யூமிற்கே சரியா போயிடுதுங்க... இந்தப் பழக்கம் என்னோட மட்டுமில்லாம கூட நடிக்குற மத்தவங்க டிரஸ்ûஸயும் கரெக்ஷன் செய்வேன். நானும் மதுமிதாவும் பேசிவெச்சிக்கிட்டு டிரஸ் செல்க்ட் செய்து போட்டுக்குவோம்.
பேர் சொல்கிறமாதிரியான நல்ல கேரக்டரில் அதாவது எல்லாரும் அவங்கவீட்டு பொண்ணு மாதிரி நினைக்கும்படியான ஒரு சீரியல் அல்லது ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். சிறந்த தொகுப்பாளினி, சிறந்த நடிகைன்னு விருது வாங்க வேண்டும். மற்றபடி என்னைப் பொறுத்தவரை எதிரிகளே யாரும் இருக்கக் கூடாது. ஏன்என்றால் பணத்தை சுலபமா சாம்பாதிச்சுடலாம். மனிதர்களை சம்பாதிப்பதுதான் கஷ்டம். அதுனால முதல்ல மனிதர்களை சாம்பாதியுங்கள். பிறகு பணத்தை சாம்பாதிக்கலாம் இதுதான் என் மைன்ட்செட்'' என்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...